டி.வி.களின் பரிணாமம்


டி.வி.களின் பரிணாமம்
x
தினத்தந்தி 15 Nov 2019 1:00 AM GMT (Updated: 14 Nov 2019 12:18 PM GMT)

டி.வி. பிடிக்குமா, அல்லது செல்போனா? நீங்கள் செல்போன் பிடிக்கும் என்று சொல்வீர்களானால், இன்னும் ஸ்மார்ட் டி.வி.களின் பயன்பாட்டை அறியவில்லை என்று அர்த்தம்.

அகன்ற திரையுள்ள இன்றைய ஸ்மார்ட் டி.வி.களில் டி.வி. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது இணையதளத்திலும் உலவலாம். மற்ற கருவிகளை இணைத்து பயன்படுத்தலாம். டி.வி.களும் இன்று பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன. டி.வி. தொழில்நுட்பம் பற்றி கொஞ்சம் அறிவோமா?

தொலைவில் இருந்து ஒளிபரப்பும் காட்சிகளை இருந்த இடத்தில் காண உதவிய தொழில்நுட்ப சாதனம் டி.வி. ஆகும். டி.வி.யானது ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பெற்று, காட்சிப்படுத்துகிறது.

டி.வி.கள். காலப்போக்கில் மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. டி.வி.யில் ஒளிபரப்புவதற்காக பிரத்தியேகமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டதே அதற்கு காரணமாகும். வெறும் நாட்டு நடப்பு செய்திகளைத் தாண்டி, வித்தியாசமான நிகழ்வுகளைத் தேடியும், நாடகங்கள், பொது நிகழ்ச்சிகளை படம்பிடித்தும் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இது மிகப்பெரிய தொழிநுட்ப மறுமலர்ச்சியாக வளர்ந்தது. எண்ணற்ற டி.வி. சானல்கள் உதயமாக வழிவகுத்தது.

டி.வி.யை கண்டுபிடித்தவர் பியர்டு எனும் ஸ்காட்லாந்து விஞ்ஞானியாவார். டி.வி.கள் 1920-ல் விற்பனைக்கு வந்தன. ஆரம்ப காலத்தில் கருப்பு, வெள்ளை நிறத்தில்தான் காட்சிகள் தெரிந்தன. 1970-க்கு பின்புதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் வண்ணத் தொலைக்காட்சிகள் வெளிவந்தன.



1980-க்குப் பின்புதான் ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

முன்பு வீடியோ பிளேயர் கருவியை வயர் மூலமாக டி.வி.யுடன் இணைத்து டி.வி.டி.களை ரசிப்பது, வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவது என இருந்தார்கள். 1990-களில் வீடியோ கேசட்டுகள், டி.வி.டி.கள் போட்டு டி.வி.டெக் ரசிப்பது மிகப்பிரபலமாக இருந்தது. இப்போது டி.வி.டிகள் பயன்பாடு குறைந்துவிட்டது. யு.எஸ்.பி. டிரைவ் எனப்படும் பென் டிரைவ்கள் உள்ளிட்ட சேமிப்பு கருவிகளை டி.வி.யுடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள். நவீன டி.வி.களை இணையத்துடன் இணைத்து இணைய தகவல்களையும், காட்சிகளையும் ரசிக்கலாம்.

பழைய டி.வி. பெட்டிகளின் திரை தொழில்நுட்பம் சி.ஆர்.டி. எனப்பட்டது. இப்போது மென்மையான எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா திரைகள் மூலம் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. எல்.சி.டி. (லிக்யூட் கிரிஸ்டல் டிஸ்பிளே) என்பதற்கு திரவ படிக காட்சி என்பது பொருளாகும்.

தொலைக்காட்சிகளில் செய்திகள், விளையாட்டுகள், ஆவணப்படங்கள், கார்ட்டூன் கதைகள், திரைப்படங்கள், நாடகங்கள், வணிக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எண்ணற்ற காட்சிப் படங்களை பார்க்கலாம்.

பாடல்கள், படங்கள், அறிவியல், ஆன்மிகம், கல்வி, விளையாட்டுகள், விலங்குகள் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தொலைக்காட்சி சானல்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான 24 மணி நேர தனி தொலைக்காட்சியை (கல்வித் தொலைக்காட்சி) நடத்தி வருவது நினைவூட்டத்தக்கது.

டோரா, மோட்டு பட்லு, ஷின்சான், லிட்டில் கிருஷ்ணா, பென்டென், ஷிசேம் ஸ்ட்ரீட், ஆர்தர், பார்னி பிரண்ட்ஸ், மல் லிட்டில் போனி, தாமஸ் பிரண்ட்ஸ், அவதார், கலிலியோ, புளூ குளூஸ், பேட்மேன் என ஏராளமான கார்ட்டூன் கதைகள் உலக குழந்தைகளை மகிழ்வித்து வருகின்றன.

வருகிற 21-ந்தேதி உலக டி.வி. தினமாகும்.

Next Story