அறிவாளி சங்கமும், அதிமேதாவி மாணவியும்


அறிவாளி சங்கமும், அதிமேதாவி மாணவியும்
x
தினத்தந்தி 16 Nov 2019 1:30 AM GMT (Updated: 15 Nov 2019 1:31 PM GMT)

‘மென்ஸா சங்கம்’ எனப்படுவது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் திறன்மிக்க அறிவாளிகளின் கூட்டமைப்பு.

‘மென்ஸா சங்கம்’ நடத்தும் ஐ.கியூ டெஸ்ட் என்று சொல்லக்கூடிய நுண்ணறிவு திறனை சோதிக்கும் தேர்வை எழுதுபவர்களின் மொத்த எண்ணிக்கையில், 98 சதவீதத்தை விட அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களே சங்கத்தின் உறுப்பினர் களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தியாவில் கூட இச்சங்கம் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் இத்தேர்வை எழுதிய 15 வயது இங்கிலாந்து மாணவி எடுத்திருக்கும் மதிப்பெண், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காரணம், பத்தாம் வகுப்பு மாணவியான நிகோல் பர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதுதான்.

மென்ஸா தேர்வில் அதிகபட்சமாக 162 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் நிகோல் கூறும்போது, “தேர்வு முடிவுகளை பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை” என வியக்கிறார். சிறு வயதிலிருந்தே அதீத அறிவுதிறனுக்கான அறிகுறிகள் நிகோலிடம் காணப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடங்களில் காணப்படும் சிக்கலான கணக்கு களுக்கு கூட ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே வெகு சுலபமாக விடை கண்டுபிடித்து விடுவாராம். மிகவும் கடினமாக உழைக்கும் நிகோல், பள்ளி நேரம் முடிந்த பின்னரும் கூட கூடுதல் நேரம் ஒதுக்கி பிற வகுப்பு பாடங்களையும் படிப்பாராம். படிப்பை தவிர பாட்டு மற்றும் நாடகங்களில் ஆர்வமுள்ள நிகோலை கண்டு இன்று உலகே வியக்கிறது.

1946-ல் ரோலந்து பெரில் மற்றும் லேன்செலோட் வேர் என்பவர்களால் தொடங்கப்பட்ட மென்ஸா சங்கம், இன்று 100 நாடுகளில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story