வக்கீல் - போலீசார் மோதல் உணர்த்துவது என்ன?


வக்கீல் - போலீசார் மோதல் உணர்த்துவது என்ன?
x
தினத்தந்தி 18 Nov 2019 5:03 AM GMT (Updated: 18 Nov 2019 5:03 AM GMT)

நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பையும் தங்களின் முழுநேர பணியாக கொண்டு பணியாற்றிவரும் காவலர்கள் நம்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் செய்துள்ளனர்.

இந்தியாவின் பெரும்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சி செய்துவந்த அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்த சில நிர்வாக மாற்றங்களுக்கு எதிராக 1857-ம் ஆண்டில் இந்திய சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து செய்த போராட்டம்தான் இந்திய விடுதலைக்கு வித்திட்ட போராட்டம். தங்களின் கோரிக்கைகளை உரிமையுடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக காவலர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி கோரி 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு காவல்துறையினர் 1979-ம் ஆண்டு மேற்கொண்ட வேலைநிறுத்தம் காவலர்களின் பணி தொடர்பான பல சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. சமீபத்தில் டெல்லி காவல்துறை தலைமையகத்தை ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் முற்றுகையிட்டு பணியின் போது பாதுகாப்பு கோரி அவர்கள் நிகழ்த்திய வேலைநிறுத்தப் போராட்டம் டெல்லி நகரையே நிலைகுலையச் செய்தது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான விசாரணை கைதிகளை சிறைத்துறை வாகனங்கள் மூலம் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த தினசரி அழைத்துவருவதும், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர்களைச் சிறைக்கு அழைத்துச் செல்வதும் வாடிக்கையான செயல். அந்த நீதிமன்ற வளாகத்தில் சிறைத்துறை வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வக்கீல் ஒருவர் அவரது காரை நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டாம் எனப் பணியில் இருந்த காவலர் கூற அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தின் போது அந்த காவலரை வக்கீல் அடித்துள்ளார். அடி வாங்கிய காவலருக்குத் துணையாக அங்கு பணியில் இருந்த சில காவலர்கள் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சில நிமிடங்களில் காட்டுத் தீ போன்று நீதிமன்ற வளாகத்தினுள் பரவ, நூற்றுக்கணக்கான வக்கீல்கள் அங்கு குவிந்தனர். அங்கிருந்த காவல்துறையினர் தாக்கப்பட்டனர். காவல்துறை மற்றும் சிறைத்துறைக்குச் சொந்தமான பல வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு வக்கீல்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வக்கீல்கள் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஊடக வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், நீதிமன்ற வளாகத்தில் ‘சட்டத்தின் காவலர்கள்’ என அழைக்கப்படும் காவல்துறையினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறை சம்பவ வீடியோ காட்சிகள் வைரலாக நாடெங்கும் பரவின. இம் மாதிரியான மோதல்கள் 2015-ம் ஆண்டில் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், 2009-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் நிகழ்ந்துள்ளன. இந்த அசம்பாவித சம்பவங்களுக்கு ஒரு தரப்பினர்தான் காரணம் என்று கூறிவிட முடியாது.

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடத்த நூற்றுக்கணக்கான வக்கீல்கள் தினசரி வருவதும் நூற்றுக்கணக்கான விசாரணை கைதிகளுடன் காவலர்கள் தினந்தோறும் நீதிமன்றம் வருவதும் தினசரி நிகழ்வுகளாக இருக்கும் போது வாகனம் நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிறு வாக்குவாத சம்பவம் வரலாற்றில் இடம்பெறும் வகையில் வன்முறையாக உருவெடுக்கக் காரணமாக இருந்தவை என்ன?. நவம்பர் 5-ந் தேதி நடைபெறவிருந்த டெல்லி வக்கீல்கள் சங்க தேர்தலுக்கான பிரசாரத்தில் நீதிமன்ற வளாகம் அன்றைய தினம் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. வன்முறையில்; ஈடுபட்ட பலர் அந்த நீதிமன்றத்தோடு தொடர்பில்லாத வக்கீல்கள் என்ற தகவலும் சிறைத்துறை வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு வக்கீல் அவரது காரை நிறுத்திய அந்த சிறிய பிரச்சினையைப் பணியில் இருந்த காவலர் சாதுரியமான முறையில் அணுகியிருந்தால் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது என்பதும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கருத்து.

வக்கீல்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே எப்போதும் மனக்கசப்பு இருந்துவருகிறது என்ற கருத்து பரவலாக சமுதாயத்தில் நிலவி வந்தாலும் பெரும்பாலும் இவர்களுக்கிடையே ஆரோக்கியமான புரிதலும் நல்லுணர்வும் இருந்து வருகின்ற காரணத்தால் தான் நீதிமன்றங்களின் பணிகள் பெரும்பாலும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. அதேசமயம் காவல்துறையில் ஒரு சிலரும் வக்கீல்கள் சிலரும் ரகசியமாக இணைந்து செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை நீதியின் பார்வையில் இருந்து மறைக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கலவர சூழலில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டை மனித உரிமை மீறலாகத்தான் இன்றைய சமுதாயத்தில் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கலவர செயலில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்கள் தான் பலியாகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்துவதிலேயே நிர்வாகம் அதிக கவனம் செலுத்துவதால், கலவரக்காரர்கள் செய்த அனைத்து வன்முறை சம்பவங்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு துப்பாக்கிச் சூட்டின் பாதிப்பை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. கலவரத் தடுப்பு பணியில் துப்பாக்கி பயன்படுத்தும் முறை குறித்து காவல்துறை நிர்வாகம் சீராய்வு செய்ய வேண்டிய அவசியத்தை சமீப கால துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நுகர்வோர் விழிப்புணர்வு மிகுந்த இன்றைய சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினரின் பணி எளிமையானது அல்ல. கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு பணியாற்றும் செயல்திறன் கொண்டவராக காவலர்கள் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பதற்குப் பதிலாக பொதுநலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக காவல்துறையினர் திகழ வேண்டும்.

அரசு சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்துவதும் சேதப்படுத்துவதும் போராட்ட செயல்பாடுகளில் ஒரு பகுதி என்ற உணர்வு போராட்டம் நடத்தும் பெரும்பாலானவர்களிடம் நிலவுகிறது. தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த கலவரத்திலும் இம்மாதிரியான உணர்வு வெளிப்பட்டதைக் காணமுடிகிறது. காவலர்களுக்கும் வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை முறைப்படி தீர்வு காண்பதற்கு பதிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுத்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது. இச்செயலானது பொதுமக்களின் வரிப்பணத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமமானது. போராட்டங்கள் என்ற பெயரில் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் பெரும்பாலும் நீர்த்துப் போவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஒரு குற்ற சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான வாதிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் புலன் விசாரணையின் போது திரட்டிய சாட்சியங்களை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள். ஒரு குற்றவாளி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வக்கீலோ குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை காப்பாற்றும் விதத்தில் வழக்கை நடத்துவார். குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றுவதாலும் நிரபராதி ஒருவர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வக்கீல் செயல்படுவதாலும் அவர்கள் இருவரும் நீதி என்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

- பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்., காவல்துறை முன்னாள் தலைவர்

Next Story