ரூ.10 லட்சம் கோடி மதிப்பை நெருங்கும் ஆர்.ஐ.எல்.: உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்


ரூ.10 லட்சம் கோடி மதிப்பை நெருங்கும் ஆர்.ஐ.எல்.: உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்
x
தினத்தந்தி 21 Nov 2019 9:21 AM GMT (Updated: 21 Nov 2019 9:21 AM GMT)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பங்குகளின் மதிப்பு

ஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளால் பெருக்க கிடைப்பதே அந்தப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) ஆகும். பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அமைந்த முன்னணி 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.11,262 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 18 சதவீத வளர்ச்சியாகும்.

இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அக்டோபர் 18-ந் தேதி அன்று ரூ.9 லட்சம் கோடி என்ற சாதனை அளவை தொட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.9.5 லட்சம் கோடியை எட்டியது. நேற்று அது ஒரு கட்டத்தில் ரூ.9.96 லட்சம் கோடியைத் தொட்டது. ஒரே மாதத்தில் இப்பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

பங்குகளின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி இருக்கும் நிலையில், புளூம்பெர்க் உலக மகா கோடீஸ்வரர்களின் பட்டியலில் ஆர்.ஐ.எல். அதிபர் முகேஷ் அம்பானி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை அவருடைய சொத்து மதிப்பு 1,370 கோடி டாலர் உயர்ந்து 5,800 கோடி டாலரை எட்டி உள்ளது.

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத் தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜியும் (1,910 கோடி டாலர்), மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடாரும் (1,560 கோடி டாலர்) உள்ளனர். உதய் கோட்டக் மற்றும் லட்சுமி மிட்டல் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கின்றனர்.

பில் கேட்ஸ் முதலிடம்

புளூம்பெர்க் பட்டியலில் 11,000 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். ஜெப் பெசோஸ் (10,900 கோடி டாலர்) இரண்டாவது இடத்திலும், பெர்னார்டு அர்னால்ட் (10,100 கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். வாரென் பபெட் (4), மார்க் ஜூகர்பெர்க் (5) ஆகியோரின் சொத்து மதிப்பு முறையே 8,640 கோடி டாலர் மற்றும் 7,410 கோடி டாலராக உள்ளது.

Next Story