நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 2.21% சரிவு; வர்த்தக பற்றாக்குறை 9,472 கோடி டாலர்


நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 2.21% சரிவு; வர்த்தக பற்றாக்குறை 9,472 கோடி டாலர்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:06 AM GMT (Updated: 21 Nov 2019 10:06 AM GMT)

நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் (2019 ஏப்ரல்- அக்டோபர்) நாட்டின் சரக் குகள் ஏற்றுமதி 2.21 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இறக்குமதி 8.37 சதவீதம் குறைந்து இருக்கும் நிலையில் வர்த்தக பற்றாக்குறை 9,472 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

சரக்குகள், சேவைகள்

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதி யைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,102 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. அது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளர்ச்சியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில், அக்டோபர் வரையிலான முதல் 7 மாதங்களில் 18,595 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 19,015 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 2.21 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இறக்குமதி

நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபர்) மொத்தம் 28,067 கோடி டாலருக்கு சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 8.37 சதவீதம் குறைவாகும். அப்போது அது 30,631 கோடி டாலராக இருந்தது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை (மொத்த சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 9,472 கோடி டாலராக இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 2,638 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 1.11 சதவீதம் குறைவாகும். இதே மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 16 சதவீதம் குறைந்து 3,739 கோடி டாலராக இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,101 கோடி டாலராக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,800 கோடி டாலராக இருந்தது.

5 லட்சம் கோடி டாலர்

2024-25-ஆம் நிதி ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரமாக உருவெடுக்க நம் நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருக் கிறது. இந்நிலையில், இந்த இலக்கை எட்டுவதில் ஒவ்வொரு துறையின் பங்களிப்பும் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன.

இந்த வகையில், ஏற்றுமதி துறையின் பங்கு பற்றிய மதிப்பீடுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 5 லட்சம் கோடி டாலர் இலக்கை எட்ட வேண்டுமானால் சரக்குகள் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்றுமதியை 19-20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நடப்புக்கணக்கு

நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்பது சரக்குகள் மற்றும் சேவைகள் மொத்த இறக்குமதி மதிப்பிற்கும், ஏற்றுமதி மதிப்பிற்கும் இடையிலான வித்தியாசமாகும். வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் போது நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வேண்டுமானால் தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுடன் அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story