நீர் மேலாண்மை திட்டங்களில் பின்தங்கும் தமிழகம்


நீர் மேலாண்மை திட்டங்களில் பின்தங்கும் தமிழகம்
x
தினத்தந்தி 22 Nov 2019 7:19 AM GMT (Updated: 22 Nov 2019 7:19 AM GMT)

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டு இருக்கிறது.

மிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 925 மி.மீ! தமிழகத்தின் மொத்த நீர் தேக்கங்களின் மூலமாக நம்மால் சுமார் 243 டி.எம்.சி. தான் தேக்கமுடிகிறது. ஆனால், நாம் ஆண்டு தோறும் தேக்கிவைக்க முடியாமல் கடலில் சேர்க்கும் தண்ணீர் சுமார் 260 டி.எம்.சி.யாகும்.

தமிழகம் ஏன் எப்போதும் தண்ணீர் பற்றாகுறை மாநிலமாக உள்ளது. போதுமான அணைகள் கட்டப்படவில்லையா? அணைகள் கட்டுவதில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுவதில்லையா? போன்ற பல கேள்விகள் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் உள்ளன.

இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் எந்தெந்த ஆட்சி காலங்களில் எந்தெந்த அணைகள் கட்டப்பட்டன என்ற தகவல்களைக் கொண்டு அலசலாம்.

உலகத்திலேயே அணை கட்டுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்றோ, நம் அண்டை மாநிலங்கள் நம்மைக் காட்டிலும் அதிக அணை கட்டுவதிலும், நீர் தேக்குவதிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்ற யதார்த்தத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

மன்னராட்சியில்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கரிகாலச்சோழன் கட்டியது கல்லணை. அதற்கு பின்பு சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது தான் வீராணம் அணை! இன்று சென்னை மாநகர மக்கள் தண்ணீர் குடிப்பதற்கு காரணமான செம்பரம்பாக்கம் அணையைக் கட்டியது பல்லவர்கள்! இது தவிர காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை போன்ற சில முக்கிய நீர் தேக்கங்கள் மன்னராட்சி நமக்குத் தந்த கொடைகளாகும்!

ஆக, மன்னராட்சி காலங்களில் நாம் பெற்ற பெரிய நீர் தேக்கங்கள் என்பவை அதிகம் என்று சொல்லமுடியாது தான்! ஆனால், அதே சமயம் அவர்கள் காலத்தில் ஏரி, குளங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு மிக நுட்பமாக மழைநீர் ஓடும் தடங்களைக் கண்டறிந்து, சுமார் 39,202 ஏரிகளை உருவாக்கினார்கள்!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்

மன்னராட்சிக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாம் பெற்றவை; தமிழகத்தின் மிகப் பெரிய நீர் தேக்கமான மேட்டூர்அணை, முல்லை பெரியாறு அணை, பாபநாசம் அணை, பேச்சிப்பாறை அணை, வெலிங்டன் ஏரி, பூண்டி நீர்தேக்கம், புழல் நீர்தேக்கம், சோழவரம் ஏரி ஆகிய முக்கிய நீர் நிலைகளாகும்.

காங்கிரஸ் ஆட்சி

இதையடுத்து காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட நீர் தேக்கங்களே இன்றைக்கும் தமிழக மக்களை காப்பாற்றும் முக்கிய அரணாகத் திகழ்பவையாகும். அவை; பெருஞ்சாணி, ஆழியாறு, அமராவதி, சாத்தனூர், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை அணை, பரம்பிக்குளம், பவானிசாகர், விடுர் அணை, கோமுகி அணை, சக்தியாறு, மஞ்சளாறு, திருமூர்த்தி அணை போன்றவையாகும்! இவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய அணைகளாகும்.



கடலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வீராணம், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட வெலிங்டன் ஏரி தவிர்த்து அதற்கு பிறகு குறிப்பிடத்தக்க ஏரிகள் கட்டப்பட்டதாக தெரியவில்லை. காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை தவிர்த்து அதற்கு பிறகு அவர்களுக்கு வேறு குறிப்பிடத்தக்க ஏரிகள் கிடைக்கவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட புழல், சோழவரம், பூண்டி ஏரிகள் தவிர்த்து இன்று வரை சொல்லிக்கொள்ளத்தக்க வகையில் புதிய ஏரிகள் எதுவும் கிடைக்கவில்லை. அவை தாம் இன்று சென்னையை காப்பாற்றி வருகின்றன.

இப்படித்தான் நமது தமிழகத்தின் தண்ணீர் சேமிப்புக்கான அணைகள் நிலைமை உள்ளது.

தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சியில்...

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலகட்டத்தில் நிறைய சிறிய அணைகளே கட்டப்பட்டன... என்றாலும் அவை இன்றைய மக்கள் தேவைகளை பூர்த்திசெய்வதாகவோ அல்லது வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவோ இயலவில்லை என்பதே நிதர்சனமாகும்! மேலும் இவை அனைத்துமே சிலநூறு கனஅடித் தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடிந்தவையாகும். மற்றும் சிலவோ நூறுகன அடிக்கும் குறைவான தண்ணீர் சேகரிக்க கூடியதாகும். உண்மையில் இதுபோன்ற சிறு நீர்தேக்கங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கற்றதாகும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அணைகளில் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கவை குதிரையாறு, சோத்துப்பாறை, செண்பகத் தோப்பு அணை, நல்லதங்காள் ஓடை, உப்பாறு, பொன்னியாறு, நம்பியாறு, ராமாநதி, கருப்பாநதி, மணிமுக்தாநதி.. போன்றவற்றோடு கடைசியாக 2010 ல் திறக்கப்பட்ட மாம்பழத்துறையாறு முக்கியமானதாகும்!

அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை பாம்பாறு அணை, நாகவதி அணை, வாணியாறு அணை, குண்டாறு அணை, சண்முகாநதி... ஆகியவை!

காங்கிரஸ் ஆட்சிகாலமான 1951-56 மட்டுமே பட்ஜெட்டின் மொத்த நிதியில் 27.5 சதவீத அணைகள் கட்ட மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது. காங்கிரசுக்கு பிறகான ஆட்சிகளில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அந்த அளவுக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை!

இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் கேட்டபோது, “உண்மை தான்! மன்னராட்சி காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் தான் தமிழகத்தின் பிரதான அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகான தி.மு.க. ஆட்சியில் சுமார் 45 அணைகள் கட்டப்பட்டாலும் அவை நடுத்தர மற்றும் சிறிய அணைகளே! இதற்கு காரணம் பெரிய அணைகள் கட்டுவதற்கு தோதான ஆற்றுப்படுகைகள் எல்லாவற்றிலுமே காமராஜர் ஆட்சி காலத்தில் தேவையான அளவுக்கு அணைகள் கட்டப்பட்டுவிட்டன.ஆகவே, தற்போது கட்டுவது என்றால் சிறிய அணைகளும், தடுப்பணைகளும் தான் கட்டமுடியும். அதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். மேலும் தரைகீழ் தடுப்பணைகளை ஆற்றுக்குள் கட்டவேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்வளம் பெருகும்!

ஆந்திரா, தெலுங்கானா

வீணாக கடலுக்கு தாரைவார்க்கும் தண்ணீரை தடுத்து சேமிக்கும் முயற்சிகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கர்நாடகாவிலும் துரித கதியில் நடந்த வண்ணம் உள்ளன. ஆந்திராவில் ‘ஜலயக்ஞம்’ என்ற பெயரில் 1.80 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள். தெலுங்கானாவில் மிஷின்பகிரதா, மிஷின்காகத்தியா என்ற பெயரில் 80,182 கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெறும் 6,000 சொச்சம் கோடி ரூபாய் தான் அணைகள் கட்ட செலவழித்து உள்ளார்கள்! நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முறையாக செலவு செய்வது என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறைகளுக்குமான முதலீடாகும்....” என்றார்.

காவிரியில் மட்டுமே 40 தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், காவிரியில் ஆண்டு தோறும் 90 டி.எம்.சி. கடலில் கலந்து வீணாகிறது. காவிரியிலும், முல்லை பெரியாரிலும், பாலாற்றிலும் நமக்கு கிடைக்கும் தண்ணீரை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. சமீபத்தில் காவிரியிலும், பாலாற்றிலும் ஒரு சில தடுப்பணைகள் கட்டும் முயற்சியை தற்போதைய தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.!

Next Story