இளமையின் வரம்- உடல் வலிமை இழக்க விடலாமா...?


பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரி
x
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரி
தினத்தந்தி 27 Nov 2019 4:35 AM GMT (Updated: 27 Nov 2019 4:35 AM GMT)

இந்திய இளைஞர்கள், தேவையான அளவுக்கு உடல் உழைப்பை மேற்கொள்வது இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.

ஆமா... இதுக்கு தனியா ஒரு அறிக்கை வேணுமாக்கும்...? கண்ணு முன்னாலயே பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்...? நாலு எட்டு நடந்து கடைக்கு போக முடியலை... எதுக்கு எடுத்தாலும் வண்டி வேணுங்கறாங்க... எப்பப் பார்த்தாலும் போனு ஒண்ணு கையில வச்சிக்கிட்டு எதையோ பார்த்துக்கிட்டு கிடக்கறானுங்க...

இப்படி இருந்தா, ஒடம்பு எப்படி தெம்பா இருக்கும்...?

உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது பள்ளிச் சிறுவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் குறைவாக உடலுக்கு பணி தருகின்றனர். 2001-2016 கால கட்டத்தில் 146 நாடுகளில் 16 லட்சம் பேரை கண்டு ஆய்வு செய்ததில் ஆண் சிறுவர்கள் 78 சதவீதம்; பெண்கள் 85 சதவீதம் தேவையான அளவு தம் உடலுக்கு பணி தருவதில்லை.

ஆச்சரியமான தகவல் தோங்கா, சமோவா, ஆப்கானிஸ்தான், ஜாம்பியா ஆகிய 4 நாடுகளில் மட்டும் பெண் சிறுமியர் ஆண்களை விடவும் அதிகமாக உடற்பயிற்சி பெறுகின்றனர். இந்த நான்கு நாடுகளுமே சமூக, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவை!

உலக அளவில் 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போதிய உடற்பணிகள் செய்வதில்லை. 2025-க்குள்ளாக இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சாத்தியம்தான். ஆனால் இதிலே, அரசுகளை விடவும், தனி மனிதர்களின் ஆர்வம், பங்களிப்புதான் மிக முக்கியம். ஓடிக்கிட்டே இருக்கணும்... உடம்பு வளைஞ்சு வேலை செய்யணும்...

கல்லை தின்னாக் கூட ஜீரணம் ஆயிடும்... அந்த கால பெருசுங்க சொல்கிற இந்த வழிமுறைக்கு மாற்று உலகத்திலேயே இல்லை.

உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இருந்தால் போதும்; ஆரோக்கியமான வாழ்க்கை தானாய் வாய்க்கும். ஒரு காலத்தில் நம் ஊரில் மரம் ஏறாத சிறுவர்களே இல்லை; ஏரியில் குளத்தில் குதித்து குளிக்காத மனிதனே இல்லை. பல மைல் தூரம் நடக்காமல் ஒரு நாளும் போனதே இல்லை.

வீடு மாற்றுவது அல்ல; வீடு கட்டுவதற்கு கூட இயன்றவரை வெளியாட்களை அழைப்பது இல்லை.

இப்போது...? இது எதுவுமே நடைமுறையில் இல்லை. தொலைபேசியில் சொன்னால் சாப்பாடு கூட வீடு தேடி வந்து விடுகிறது.

‘தின்பது’ மட்டும் நாம் தான் செய்ய வேண்டி இருக்கிறது. உழைக்காமல் வாழ்வதுதான் வசதியின் அடையாளம் என்று தவறாக புரிந்து கொண்டு விட்டோம். அதன் விளைவுதான் இன்றைய அவல நிலை.

‘ஓடி விளையாடு பாப்பா’ மட்டும்தானா...?

உடலினை உறுதி செய், ‘ஊண் மிக விரும்பு’,

குன்றென நிமிர்ந்து நில் ‘கெடுப்பது சோர்வு’ என்று

அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார் பாரதியார். (புதிய ஆத்தி சூடி)

இளைஞர்களின் ஆகப் பெரிய சாதகம் அவர்களின் உடல் வலிமை; அவர்தம் மன உறுதி. எவ்வளவு உழைத்தாலும் களைப்பு வராது; எத்தனை தோற்றாலும் சலிப்பு தோன்றாது. இளைய பருவத்தில் எல்லாருக்கும் இது இயல்பானது. இதனை இழக்கலாமா...?

சிறுவரை, இளைஞர்களை மீண்டும் உடற்பயிற்சி, உடற்பணிகளின் பக்கம் திருப்ப வேண்டிய சமூகக்கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது.

நடத்தல், ஓடுதல், குதித்தல், தாவுதல், நீந்துதல், பாய்தல், மூச்சுப்பிடித்தல், மல்லுக்கட்டுதல், மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், சுமை தூக்குதல், மிருகங்களை எதிர்த்தல், இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளல்... இளைய பருவத்தினருக்கு இவை எல்லாம் இனிப்பு சாப்பிடுவது போல. உவந்து, உல்லாசமாய்ச் செய்வார்கள்.

இவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறோமா...? இளைஞர்கள் செயல் புரிய அனுமதிக்கிறோமா...? ஆறு வயதிலேயே இரு சக்கர வாகனத்துக்கு பழக்குகிறோமே... பத்து வயதிலேயே பணியாளர்களை விரட்டுவதற்கு ஊக்குவிக்கிறோமே... பள்ளி பருவத்திலேயே பணத்தை அள்ளிக்கொடுக்கிறோமே... கல்லூரி காலத்தில் மட்டும், இளமைத்திறன் எங்கிருந்து வரும்...? தத்தம் வேலையை அவரவர் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்த வேண்டும். நடந்து செல்கிற தூரத்தை வாகனத்தில் செல்ல அனுமதிக்கவே கூடாது.

இத்துடன்.... நல்ல உணவு, நல்ல பழக்க வழக்கம் மிக முக்கியம்.

‘மாலை முழுவதும் விளையாட்டு’. இந்த நேரத்தில், நம் பிள்ளைகளை வேறு எதிலும் ஈடுபடுத்தவே கூடாது.

விளையாட்டை விஞ்சிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி இல்லவே இல்லை. இப்பொழுதும் கூட சிறுமியர், இளம் பெண்கள் விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை. இது மிகப்பெரிய குறை; மாபெரும் தடை.

பெரிய நகரங்களில் கூட ஓடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் மகளிர் தயங்குவதை காண முடிகிறது. புரிந்து கொள்ளக்கூடியதுதான். குறைந்தபட்சம், மகளிருக்கு என்று ‘சிறப்பு நேரம்’ குறிப்பிட்டால் கூடப் போதுமானது.

நம்முடைய சமுதாயம், நம் மக்களின் பார்வை இன்னமும் மாற வேண்டி இருக்கிறது. உடல் உழைப்பை மதிக்காத, உடற்பயிற்சியை வலியுறுத்தாத சமூகமாக நாம் இருத்தல் தகாது.

உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் உடற் பயிற்சிகள் எவ்வளவு...?

5-17 வயது: நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேர தீவிர உடற் பயிற்சி.

18-64 வயது: வாரத்துக்கு 150, 300 நிமிட உடற்பயிற்சி. 65 அல்லது அதற்கு மேல்: வாரம் 75, 150 நிமிட உடற்பயிற்சி.

நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விளையாட்டு ஆகியன உடற் பயிற்சியில் அடங்கும். இவை எல்லாம் எளிதில் எவராலும் செய்ய முடியும். மனம் வேண்டும். அவ்வளவுதான். இனி ஒரு விதி செய்வோம் சிறுவர்களை, இளைஞர்களை ‘ஓட விடுவோம்’!

அவர்களின் ஆரோக்கியத்தை விடவும் சிறந்த முதலீடு என்ன இருக்க முடியும்...?

Next Story