கீழடியில் தங்கத்தின் எடை அளவுகள்


பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை
x
பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை
தினத்தந்தி 27 Nov 2019 4:49 AM GMT (Updated: 27 Nov 2019 4:49 AM GMT)

தமிழரின் சங்ககாலத்தை தங்ககாலம் என்பார்கள்.

எனவே தமிழரின் பொற்கால வரலாற்றை படம் பிடித்து காட்டும் வகையில் கீழடியில் பொன் அணிகலகன்கள், பொற்காசுகள், பொன்கட்டிகள் கிடைத்துள்ளன. இவற்றின் எடை அளவுகள் சிந்துவெளியில் கிடைத்த எடை அளவுகளுக்கு முற்றிலும் பொருந்தியுள்ளன. பொறியாளர் வெங்கடாசலம் சிந்துவெளியில் கிடைத்த எடைஅளவுகளும், தமிழக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எடை அளவுகளும் நூற்றுக்கு நூறு ஒப்புமை உடையவை என்று தன் நூல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்றும் மாறாத எடை அளவாக குன்றிமணியை தேர்ந்தெடுத்தனர். 20 குன்றிமணிகளின் எடை 1 கழஞ்சு பொன் நாணயமாக கருதப்பட்டது. 320 குன்றிமணிகளின் எடை ஒரு பலம் எடைக்குச் சமம். கீழடியில் கிடைத்த பொன் அணிகலன் 0.9 கிராம் எடையுள்ளது. இது 9 குன்றிமணிக்குச் சமம். கீழடியில் கோதை என்னும் பெயர் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்ட 7 நீள்வடிவ தங்க கட்டிகள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் 3.5 கிலோ எடைகொண்ட தங்க கட்டிகளும் இருந்தன. காக்கை பாடினி நச்செள்ளையாருக்கு நகை செய்து போட்டுக்கொள்வதற்காக சேரன் 9 “கா“ பொன் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. ஒரு “கா“ என்பது 3.5 கிலோவுக்கு சமம். தயிர், மோர், நெய் விற்கும் ஆயர் குலப்பெண் பலகாலம் கழித்து அதன் விலையை கட்டிப் பொன்னாக பெற்றாள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. எனவே, கீழடியில் கிடைத்த தங்க கட்டிகளே அந்த காலத்தில் பெரிய பணமதிப்பிற்குரிய பணப்புழக்கமாக இருந்தது எனத் தெரிகிறது.

கீழடியில் சிறிதும், பெரிதுமான வட்டவடிவ பொற்காசுகள் கிடைத்துள்ளன. அந்தக் காலத்தில் “காணம்” என்னும் பொற்காசும், “பொன்” என்னும் பொற்காசும் வழக்கில் இருந்ததை சங்க இலக்கியத்தின் வாயிலாகவும், கல்வெட்டின் வாயிலாகவும் அறிய முடிகிறது. காணம் என்பது கொள் என்னும் பயற்றின் எடையுள்ள நாணயம். பொன் என்னும் நாணயம் அதைவிட சற்று பெரியது. சேர அரசன் காங்கை பாடினி நச்செள்ளையாருக்கு நூறாயிரம் காணம் நாணயத்தை பரிசளித்தான்.

கொங்கர்புளியங்குளம் கல்வெட்டில் சிறுஆதன் என்பவன் சமண முனிவர்களுக்கு குகையில் கல்படுக்கைகள் செய்வதற்காக 54 பொன் கொடுத்திருக்கிறான். அந்த கல்வெட்டு தமிழி எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும் 54 என்னும் எண்ணிக்கை சிந்துவெளி எண்ணில் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தக் கல்வெட்டு அறிஞராலும் அதன் எண் மதிப்பு படிக்கப்படவில்லை. நான் 5000 சிந்துவெளி முத்திரைகளையும் தமிழாகப் படித்துக் காட்டியதின் விளைவாக சிந்துவெளி காலத்து எண்களே கொங்கர் புளியங்குளம் கல்வெட்டில் இருப்பதைக் கண்டறிந்து அதன் மதிப்பு 54 பொன் என்னும் நாணயங்கள் என நிலைநாட்டினேன். எனவே, கீழடியில் கிடைத்த பொன் காசுகள் அனைத்தும் “காணம்” மற்றும் “பொன்” என்னும் சங்க நாணயங்கள் ஆகும். அவற்றின் எடை அளவை தொல்பொருள் ஆய்வுத்துறை வெளிப்படுத்த வேண்டும்.

சிந்துவெளியில் 558 எடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரிய எடைகற்களும் உள்ளன. இவை பெரிய அளவுள்ள தங்க கட்டிகளை எடை போடுவதற்கு பயன்பட்டு இருக்கலாம். அகநானூறு 265-ம் பாட்டில் மாமூலனார் மிகப்பெரிய தங்க கட்டிகளை பாடலிபுரத்தை ஆண்ட நந்தர்கள் கங்கை ஆற்றில் ஒளித்து வைத்திருந்தார்கள் என்று கூறியிருக்கிறார். கலித்தொகையில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு வந்த இளைஞனுக்கு பொன்னால் ஆன செம்பில் தண்ணீர் தந்த செய்தி கூறப்பட்டுள்ளது. தங்கத்தின் புழக்கம் இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் மிகுதியாக இருந்திருக்கிறது. கி.பி.முதல் நூற்றாண்டில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட சமண முனிவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும் மூலாராதனை என்னும் நூல் பழங்கன்னடத்தில் 10-ம் நுற்றாண்டில் வட்டாராதணை என்னும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்தியா முழுவதும் அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்களே அதிகம் இருந்தனர். அந்த நூலில் வணிகன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த அரசர் குடும்பத்தினர் பெரிய வீட்டுக்குள் இருந்த குளத்தில் நீராடினர். அரசிளங் குமரியின் வைர மோதிரம் நீரில் விழுந்துவிட்டது. அதை அறிந்த வணிகன் அந்த நீராடும் குளத்தில் இருந்த நீர் முழுவதும் வடித்தான். அந்தக் குளத்தின் அடியில் ஏராளமான அணிகலன்கள் இருந்தன. அவற்றைத் தனித்தனி குவியலாக குவித்து மோதிரக் குவியலில் மட்டும் தேடி இளவரசியின் மோதிரத்தை எடுத்து கொடுத்தான். இந்த வரலாற்றிலிருந்து பழங்காலத்தில் தம் உடலில் அணிந்த பொன் நகைகளைகூட கழற்றாமல் மக்கள் நீராடி மகிழ்ந்தனர் என்பது தெரியவருகிறது. வணிகர்கள் அரசர்களைவிட செல்வச் செழிப்பு மிக்கவர்களாக இருந்தனர். அரசர்களின் அரண்மனைகளில் தங்கக் குடங்களும் இருந்தன. போர்க்காலத்தில் பொன்னால் ஆன அனைத்துப் பொருள்களையும் மண்ணில் அல்லது சுரங்கத்தில் புதைக்கும் வழக்கம் இருந்தது. திருவாங்கூர் கோவில் சுரங்கத்தில் 500 பொன் குடங்கள் கண்டெடுக்கப்பட்டன. கீழடியிலும் கொற்கையிலும் இனிமேல் நடக்க இருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான பொற்காசுகள், பொன் அணிகலன்கள், தங்கக் குடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன.

Next Story