பங்கு வெளியிட அனுமதி கேட்டு எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் விண்ணப்பம் ரூ.9,500 கோடி வரை திரட்ட திட்டம்


பங்கு வெளியிட அனுமதி கேட்டு எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் விண்ணப்பம் ரூ.9,500 கோடி வரை திரட்ட திட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2019 10:02 AM GMT (Updated: 29 Nov 2019 10:02 AM GMT)

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமெண்ட்ஸ் சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியிட அனுமதி கேட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது.

புதுடெல்லி

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமெண்ட்ஸ் சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியிட அனுமதி கேட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது. பங்கு வெளியீடு மூலம் ரூ.9,500 கோடி வரை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

74 சதவீத பங்குகள்

பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தில் அந்த வங்கிக்கு 74 சதவீத பங்குகள் இருக்கிறது. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைல் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பண அட்டைகள் வணிகத்தில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், எஸ்.பீ.ஐ. கார்டு நிறுவனத்தின் பங்குகள் 2020 மார்ச் காலாண்டில் பட்டியலிடப்படும் என எஸ்.பீ.ஐ. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஜ்னீஷ் குமார் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், புதிய பங்குகள் வெளியிட அனுமதி வேண்டி எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் செபி அமைப்பிற்கு விண்ணப்பம் அனுப்பி உள்ளது. இந்த வெளியீட்டில் ரூ.500 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் 4 கோடி பங்குகளும், சி.ஏ. ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 9 கோடி பங்குகளுமாக ஏறக்குறைய 13 கோடி பங்குகள் விற் பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.8,000 கோடி முதல் ரூ.9,500 கோடி வரை திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், டீ.எஸ்.பீ. மெரில் லின்ச், எச்.எஸ்.பீ.சி. செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் (இந்தியா), நோமுரா பைனான்சியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ் (இந்தியா), எஸ்.பீ.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் பங்கு வெளியீட்டை நிர்வகிக்கின்றன.

2019 மார்ச் நிலவரப்படி கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் எச்.டீ.எப்.சி. பேங்க் முதலிடத்திலும், எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனம் வழங்கி உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை, மார்ச் நிலவரப்படி 82.7 லட்சமாகும். கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பதிவு அலுவலகம் நீங்கலாக இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதுமாக 14 கிளைகள் இருக்கின்றன.

திட்டம் ரத்து

பாரத ஸ்டேட் வங்கியின் மற்றொரு துணை நிறுவனமான எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் கம்பெனியின் பங்குகள் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இன்னொரு துணை நிறுவனமான எஸ்.பீ.ஐ. ஜெனரல் இன்சூரன்ஸின் பங்கு வெளியீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story