எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் அமைப்போம்


எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் அமைப்போம்
x
தினத்தந்தி 1 Dec 2019 5:33 AM GMT (Updated: 1 Dec 2019 5:33 AM GMT)

தொற்று நோய்களை வென்றுவிட்டோம் என்ற இருமாப்புடன் இருந்து வந்த அமெரிக்க நாட்டினை 1981-ம் ஆண்டு புதிய உயிர் கொல்லி தொற்று நோய் ஒன்று தாக்கியுள்ளது தெரிய வந்தது.

ன்று (டிசம்பர் 1-ந்தேதி) உலக எய்ட்ஸ் தினம்.

தொற்று நோய்களை வென்றுவிட்டோம் என்ற இருமாப்புடன் இருந்து வந்த அமெரிக்க நாட்டினை 1981-ம் ஆண்டு புதிய உயிர் கொல்லி தொற்று நோய் ஒன்று தாக்கியுள்ளது தெரிய வந்தது. இந்தநோய் தனி மனிதர்களின் ஒழுக்க சீர்கேட்டால் பரவி வருவது அறியப்பட்டது. இந்த நோய்க்கு எய்ட்ஸ் என்று பெயரிடப்பட்டு, பலவித ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது எச்.ஐ.வி என்ற வைரஸ் கிருமியால் வருவது 1983-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதை கண்டுபிடிக்க கூடிய ரத்த பரிசோதனைகளான எலிசா, வெஸ்டர்ன் பிளாட், பிசிஆர் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பால்வினை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மற்ற நாடுகளில் எல்லாம் இந்த நோய் பரவியிருந்தது பரிசோதனைகள் மூலமாக தெரிய வந்தன. இந்தியாவில் 1986-ம் ஆண்டு சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் முதன் முதலாக 13 விலை மாதர் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

எய்ட்ஸ் நோய் இல்லாத நாடே இல்லை என்ற நிலை தெரிய வந்ததும், ஐக்கிய நாட்டு சபை முதன் முறையாக 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதியை உலக எய்ட்ஸ் தினமாக அறிவித்தது.

டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் அனைவருக்கும் பரப்புவதாகும். மேலும் இக்கொடிய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எல்லோரும் தெரிந்து கொள்வதற்கும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எய்ட்ஸ் நோய் வருவதற்கான சாத்தியமுள்ள நபர்கள் ரத்த பரிசோதனையை முன்வந்து செய்து கொள்வதற்கும், எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட ஒவ்வொருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும், வழிவகுக்க செய்வதற்காகும்.

2018-ம் ஆண்டு நிலவரப்படி 749 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 370 லட்சம் பேர் இதுவரை இந்நோயால் இறந்துள்ளனர். 2005 வரை உச்சத்தில் இருந்த எய்ட்ஸ் நோய் தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. 2018-ல் 17 லட்சம் பேர் புதிதாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். 7 லட்சத்து 70ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 21 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். எய்ட்ஸ் என்பது எச்.ஐ.வி கிருமி தொற்றின் இறுதி நிலையாகும். இக்கிருமி பாதுகாப்பாற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் செலுத்துதல் மற்றும் கருவுற்ற எச்.ஐ.வி. தொற்றுள்ள தாய்மார்களிடம் இருந்து பிறக்கும் சிசுவுக்கும் என நான்கு வழிகளில் மட்டுமே பரவக்கூடியது. 86 சதவீதம் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாக பரவியுள்ளது. போதை ஊசி கூட்டமாக போட்டு கொள்பவர்களில் பலருக்கும் பரவியுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் மற்ற குடும்பத்தினருக்கோ ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கோ சாதாரண தொடுதல் மூலமாகவோ, கழிவறைகளைப் பயன்படுத்துவதாலோ பரவக்கூடியதல்ல. தேசிய எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் 1992-ம் ஆண்டு நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமாக பதிவு செய்தது. 1986-ம் ஆண்டு உயிர்கொல்லி நிலையாக வந்த எய்ட்ஸ் நோய் இன்று தற்போது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போல ஒரு நாட்பட்ட தாக்குபிடிக்க கூடிய நோயாக மாறியுள்ளது. ஆரம்ப காலத்தில் எச்.ஐ.வி தொற்று வந்தவர்கள் 2 முதல் 15 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைமை முற்றிலும் மாறி 50 ஆண்டுகளுக்கு மேல் வாழலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த நோயை பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம். இது பெரும்பாலும் ஒரு பால் வினை நோயாகும். எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் ஆண் விந்து மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்பின் திரவம் ஆகியவற்றில் உள்ள வைரஸ் கிருமி மூலம் பாதுகாப்பாற்ற உடலுறவு கொள்ளும் மற்ற நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.

உடலுறவு என்பது வாய்வழி உறவையும் உள்ளடக்கும். உள்புகும் எச்.ஐ.வி கிருமி அதன் இலக்கு ஆன சி.டி.4 எனும் உதவும் வெள்ளை ரத்த அணுக்குள் உள்புகுந்து, பெருகி 2 நாட்களில் அதனை அழித்து வெளி வந்து மற்ற உதவும் வெள்ளை அணுக்களை எளிதாக தாக்கி பன்மடங்காக பெருகும். நமது ரத்தத்தில் உள்ள சிகப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை எடுத்து செல்கிறது என்றால், வெள்ளை ரத்த அணுக்கள் நோய்களை தடுத்துநிறுத்த உதவுகின்றன. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுக்கு இந்த உதவும் வெள்ளை அணுக்குள் கணிசமாக குறைந்து காணப்படுவதால் சந்தர்ப்பவாத தொற்று நோய்கள் எளிதாக இவர்களைத் தாக்கி ஆரோக்கியத்தை கணிசமாக குறைத்துவிடுகிறது. தோல், வாய், நுரையீரல், குடல் மற்றும் இறுதியாக மூளையை தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோயை உண்டாக்கி இறப்பினை ஏற்படுத்துகிறது. காசநோய் குறிப்பிடத்தக்க சந்தர்ப்பவாத நோயாகும். எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு காசநோய் இருப்பதும், 10 சதவீத காசநோயாளிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. எச்.ஐ.வி தொற்றை முழுவதும் குணப்படுத்த முடியாது என்றாலும், அனைத்து சந்தர்ப்பவாத நோய்களை முழுவதும் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை.

எச்.ஐ.வி கூட்டு மருந்துகள் இலவசமாக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், சந்தர்ப்பவாத தொற்று நோய்களுக்கு மேற்கூறிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமில்லாது அனைத்து அரசு மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை உலக சுகாதார நிறுவனம், தேசிய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உழைப்பு மற்றும் நிதி உதவி அளித்து வந்துள்ளன. சமுதாய பங்களிப்பு பெரிதாக இல்லை. எனவே 2019 எய்ட்ஸ் தின முழக்கம் ‘சமுதாயம் வித்தியாசத்தை விளைவிக்கும்’ என்பதாகும். எனவே சமுதாய பங்களிப்பை அனைவரும் ஆர்வத்துடன் அளித்து எய்ட்ஸ் எச்.ஐ.வி தொற்றை முடிவுக்கு கொண்டு வர உதவ வேண்டும்.

போலியோ நோயை முற்றிலும் தடுத்ததுபோல் எச்.ஐ.வி தொற்றை முழுவதும் அழித்தால் பேரானந்தம். எய்ட்ஸ் இல்லா சமுதாயம் அமைப்போம்.

மரு.எம். பாலசுப்பிரமணியன், முன்னாள் துணை இயக்குனர்,தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்

Next Story