சிறப்புக் கட்டுரைகள்

மனதைக் கவர்ந்த மங்கையர் திருவிழா + "||" + Impressive The festival of Mangiyar

மனதைக் கவர்ந்த மங்கையர் திருவிழா

மனதைக் கவர்ந்த மங்கையர் திருவிழா
சென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண்களை சாலைகளில் ஆங்காங்கே காணமுடியும். சவாரிகளை ஏற்றிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் பறந்துகொண்டிருப்பார்கள்.
சென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண்களை சாலைகளில் ஆங்காங்கே காணமுடியும். சவாரிகளை ஏற்றிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் பறந்துகொண்டிருப்பார்கள். அவர்களில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒரே இடத்தை நோக்கி ஊர்வலம் போல் சென்று கொண்டிருந்ததை பார்த்ததும், வியப்போடு பின்தொடர்ந்தோம். அவர்கள் நுழைந்த இடம் காமராஜர் அரங்கம். அங்கே எட்டிப்பார்த்தபோது அம்மாடீ அத்தனையும் பெண்கள். கூட்டம் கூட்டமாக அரங்கத்தின் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். அவர்களது மனதெல்லாம் மத்தாப்பு.. முகமெல்லாம் புன்னகை.. உடலெல்லாம் உற்சாகம். அதற்கெல்லாம் காரணம் அங்கு ‘ஹலோ எப்.எம்-106.4’ நடத்திய ‘லேடீஸ் டே’ என்ற கொண்டாட்டம்.

பெண்கள் இருக்கைகளை நிரப்ப, ‘இது அரங்கம் அல்ல. உங்கள் உலகம். உங்களது அன்றாட அலுவல்கள், சுமைகள், கவலைகளை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இன்றைய பொழுதை உற்சாகமாக கொண்டாடுங்கள். உங்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளை எல்லாம் வெளிப் படுத்துங்கள். அதனை அங்கீகரித்து பாராட்டி பரிசு தர ஏகப்பட்ட பிரபலங்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று கூறி, அனைத்து பெண்களையும் மேடை ஏற்றி விடும் நோக்கத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் வானொலியின் நட்சத்திர அறிவிப்பாளர்கள்.

ஆக்‌ஷன் குயின் எனப்படும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் போட்டி, அல்லிதர்பார் எனப்படும் சிந்தனைத் திறனை பறைசாற்றும் போட்டி, நடனப் போட்டி, வீணாகும் பொருட்களில் இருந்து அழகான கலைப்பொருட்களை உருவாக்கும் கை வினைத்திறன் போட்டி, வல்லமையை வெளிப்படுத்தும் கயிறு இழுக்கும் கம்பீர போட்டி, அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் மணப்பெண் அலங்கார போட்டி போன்ற ஒவ்வொன்றிலும் கலந்துகொள்ள பெண்கள் நான்.. நீ.. என போட்டி போட்டது கண்கொள்ளா காட்சி. விசில் அடிக்கவும், கரவொலி எழுப்பவும், துள்ளாட்டம் போடவும் அரங்கத்தில் ஆங்காங்கே பெண்கள் குழுகுழுவாக குவிந்திருந்ததையும் காணமுடிந்தது. பிரபலங்கள் ஒவ்வொருவரும் உள்ளே வரும்போது அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

ஒருபுறத்தில் நிறைய பெண்கள் சமையல் போட்டிக்கு ஆர்வமாக தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எட்டு மாவட்டங்களில் ஏற்கனவே ‘ஹலோ எப்.எம்-106.4’ மற்றும் ஆசிர்வாத் ஆட்டா நடத்திய சமையல் போட்டிகளில் வென்று, இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்தவர்கள். போட்டிக்கு நடுவராக வந்திருந்த பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமுவை பெண்கள் கூட்டம் கரவொலி எழுப்பி வரவேற்றது.

வந்த வேகத்திலே அவர், கோதுமை மாவில் ‘தென்இந்திய டம்ப்லிங் ஸ்டூ’ என்ற கிரேவி கொழுக் கட்டை வகையை மின்னல் வேகத்தில் தயாரிக்கத் தொடங்கினார். பத்துக்கு மேற்பட்ட சமையல் பொருட்கள் அவர் கைகளில் லாவகமாக தவழ, கொழுக்கட்டையும் கிரேவியும் சுடச்சுட ரெடியாகிக்கொண்டிருந்தது. அற்புதமாக அதை தயாரித்து அங்கே நின்றிருந்த பெண்களுக்கு வழங்கி ருசிக்க சொன்னார் அவர். பெண்கள் ‘ஆஹா..’ என்று வாய்பிளக்க, “நான் இதை பத்து நிமிடத்தில் செய்து முடித்திருக்கிறேன். இதைதான் நீங்கள் தயார் செய்யவேண்டும். உங்களுக்கு அரை மணிநேரம் தருகிறேன். ஓகே.. தயாரா?” என்று அவர் சொல்ல, பெண்கள் பதிலுக்கு உற்சாகமாக கையை உயர்த்திகாட்டிக்கொண்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘ஸ்டவ்’ முன்னால் போய் நின்றார்கள்.

போட்டிக்களம் பரபரப்பானது. பெண்கள் சமையல் பொருட்களை வெட்டினார்கள். ஒன்றோடு இன்னொன்றை கலந்தார்கள். மாவை உருட்டி கொழுக்கட்டையாக்கினார்கள். இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறு புறம் செப் தாமு அருகில் நின்றிருந்த நமக்கு சில ஆச்சரியமான தகவல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார். அவரது கண்களும், மூக்கும் சமையல் காட்சிகளில் ஆழ்ந்திருக்க, ஒரு பெண்ணின் சமையல் பாத்திரத்தில் இருந்து பறந்த ஆவியை அவர் நுகர்ந்தபடி “அந்த பெண் தயாரித் திருக்கும் கிரேவில் உப்பை அதிகமாக சேர்த்துவிட்டார்” என்றார். நாம் வியப்போடு அவரை பார்த்துக்கொண்டிருக்க “அதோ முன்வரிசையில் இருக்கும் பெண் தயாரிக்கும் கொழுக்கட்டை சரியாக வேகவில்லை. பதற்றத்தில் அவசரமாக கொழுக்கட்டையை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டார்” என்று, அந்த பகுதியில் ‘ஆவிப்பிடித்தபடி’ சொன்னார். அவரது சமையல் அனுபவம் இதற்கு காரணமாக இருந்தது.

எல்லோரும் தயார் செய்து முடித்த பின்பு பதம், சுவை போன்றவைகளை பார்த்து, ருசித்து பரிசுக்குரியவர்களை பலத்த கர வொலிக்கு மத்தியில் அறிவித்தார். முதல் பரிசினை புதுச்சேரி இளவேனிலும், இரண்டாம் பரிசை ஈரோடு காயத்ரி அசோக்கும், மூன்றாம் பரிசினை சென்னையை சேர்ந்த விஜயகீதாவும் பெற்றார்கள். பரிசு பெற்ற பெண்கள் மத்தியில் செப் தாமு பேசிய தகவல்கள் கவனிக்கத்தகுந்தவை. “இதுபோன்ற போட்டிகளில் நீங்கள் கலந்துகொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் தூண்டும். சமையல் ஒரு கலை. எல்லா வீடுகளிலும் பாரம்பரிய சமையல் இடம்பெற வேண்டும். பெண்கள் வீடுகளில் சமைப்பதில் இருந்து விலகிப்போகாமல், விரும்பி சமைக்கவேண்டும். வீடுகளில் உள்ள சமையல் அறைகள் உயிர்ப்புடன் செயல்படவேண்டும். தினமும் ஒரு நேரமாவது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவினை உண்டு மகிழவேண்டும். அதில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணங்கள் மூலம்தான் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும்” என்று கூறி, பாரம்பரிய உணவின் பெருமையை பறைசாற்றினார்.

மணப்பெண் அலங்காரப் போட்டியும் பெருமளவு பெண்களை கவர்ந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் வித்தியாசமான உடை, ஆபரண அலங்காரங்களுடன் மேடை ஏறினார்கள். மாடலிங் பெண்களோடு போட்டிபோடும் விதத்தில் அவர்களது உடையும், நடையும் இருந்தது. அதில் வைஷ்ணவி முதலிடத்தையும், ருஷாலி இரண்டாவது இடத்தையும், ஈஸ்வரி ஜெய்சங்கர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

திறமைகளை நிரூபிக்கும் பல்வேறு போட்டிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார்கள். பரிசுகளை பிரபலங்கள் வழங்கினார்கள். ஆசிர்வாத் ஆட்டா, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் போன்ற சில நிறுவனங்கள் ‘ஸ்பான்சர்’ செய்திருந்தன. காலையில் தொடங்கிய விழா, மாலையில் பெண்களின் உற்சாக புன்னகையோடு நிறைவுபெற்றது.