சிறப்புக் கட்டுரைகள்

புரிந்துகொள்ளுங்கள்.. - குழந்தைகளிடமும் பொறாமை உண்டு + "||" + Children are also jealous

புரிந்துகொள்ளுங்கள்.. - குழந்தைகளிடமும் பொறாமை உண்டு

புரிந்துகொள்ளுங்கள்.. - குழந்தைகளிடமும் பொறாமை உண்டு
‘குழந்தைகள் கண்ணாடி போன்ற மனநிலை கொண்டவர்கள். எதையும் அப்படியே பிரதிபலித்துவிடுவார்கள்.
‘குழந்தைகள் கண்ணாடி போன்ற மனநிலை கொண்டவர்கள். எதையும் அப்படியே பிரதிபலித்துவிடுவார்கள். பொறாமை, குரோதம் போன்ற தேவையற்ற குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்காது’ என்ற கருத்து பொதுவாக நிலவிவருவதுண்டு. ஆனால் குழந்தைகளிடம்கூட பொறாமை குணம் இருக்கிறது. ஆனால் அது பெரும்பாலும் அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவு களையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

குழந்தைகளிடம் ஏற்படும் எண்ணச்சிக்கல்களை சரிசெய்யவேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உங்கள் குழந்தைகளிடம் பொறாமை குணம் ஏற்பட்டிருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து, எடுத்துச்சொல்லி அந்த உணர்வை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் குழந்தைகளிடம் பொறாமை குணமும் வளர்ந்து, அவர்களது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிவிடும்.

பெரியவர்களிடம் இருக்கும் பொறாமை குணத்தை கண்டறிவது கடினம். அப்படி ஒரு குணமே தங்களிடம் இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். ஆனால் குழந்தை களிடம் பொறாமை குணம் இருந்தால் அதை தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திவிடுவார்கள். இதனால் ஏற்படும் நெருக்கடி என்னவென்றால், பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும்போது, அது அந்த குழந்தைகளுக்குள் வெறுப்பை உருவாக்கும். அந்த வெறுப்பால் அவைகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சூழ்நிலைகள் தோன்றும்.

குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோருக்கு தெரியாமல் குழந்தைகளிடம் எப்படி பொறாமை உணர்வு ஏற்படும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும். உண்மையில் குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருப்பதாக வைத்துக்கொண்டால், பின்விளைவு களைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறார்கள். ஆரோக்கியமற்ற போட்டியே பொறாமையாக உரு வெடுத்துவிடுகிறது.

குழந்தைகளின் வேகத்தையும், திறமை களையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். அது வெற்றிபெற்ற குழந்தை மீது தோல்வியடைந்த குழந்தைக்கு பொறாமை உணர்வு ஏற்பட காரணமாகிவிடும்.

வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும் என்பதும், தோல்வியில் இருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதும் பெரியவர்களுக்குதான் தெரியும். சிறுவர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளின் மன நிலையை இயல்பாக்கி, உற்சாகப்படுத்தவேண்டும்.

தங்களுக்கும், பக்கத்து வீட்டு பெற்றோர் களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது எல்லா பெற்றோருக்கும் தெரியும். தங்களை போன்று பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சிந்திப்பதும், செயல்படுவதும் இல்லை என்பதும் அவர் களுக்கு தெரியும். ஏன்என்றால் எல்லா மனிதர் களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மனிதருக்கு மனிதர் மன இயல்புகளில் மாற்றங்கள் இருக்கும் என்பதை பெற்றோர்கள் உணர்ந் திருந்தாலும், படிப்பிலோ- விளையாட்டிலோ பக்கத்து வீட்டு குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டால், அது போல் தங்கள் குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. அவமரியாதை செய்யப்படும் குழந்தைகளிடம் கோபம், பிடிவாதம், பொறாமை போன்ற பல வகையான எதிர்மறை உணர்வுகளும் உரு வாகிவிடக்கூடும்.

முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வளரும் வீடுகளில்தான் அவர்களிடம் போட்டி, பொறாமை உருவாகும் என கூறப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு குழந்தையைதான் பெற்று வளர்க்கிறார்கள். அந்த குழந்தை களிடமும் பொறாமைக்குணம் காணப்படுகிறது. அதனால் எத்தனை குழந்தைகள் ஒரு வீட்டில் வளர்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதே முக்கியம்.

குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித் தனியாக செய்ய வேண்டும். ‘உன்னைவிட அவன் சிறந்தவன்’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளிக்காட்டினால் அது குடும்பத்துக்குள்ளே பெருங்குழப்பத்தை உருவாக்கிவிடும். எல்லா குழந்தை களுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற் படுகிறது.

பெரும்பாலான குடும்பங்களில் மூத்தபிள்ளைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும், இளைய குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தொடர்கிறது. இத் தகையபோக்கும் மாற்றப்படவேண்டும். குழந்தைகளாக இருப்பவர்கள் வளர வளர வயதுக்கு தகுந்த அளவு முக்கியத்துவம் தரபடவேண்டும். அவர்கள் திறமை குறைந்தவர்களாக இருந்தாலும் அங்கீகரித்து ஊக்கப்படுத்தவேண்டும். பெற்றோர் வாழ்ந்து காட்டும் முறையிலும், வளர்க்கும் முறையிலும் குழந்தைகளை பொறாமை இல்லாதவர்களாக உருவாக்கலாம். குழந்தை களுக்கு பணம் சேர்த்துவைப்பதைவிட, அவர்களை நல்ல குணமிக்கவர்களாக உருவாக்குவதே பெற்றோரின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.

ஆசிரியரின் தேர்வுகள்...