மருத்துவ விழிப்புணர்வில் 7 கின்னஸ் சாதனை (சேவைப் பயணத்தில் முத்திரை பதித்த தமிழக டாக்டர்)


மருத்துவ விழிப்புணர்வில் 7 கின்னஸ் சாதனை (சேவைப் பயணத்தில் முத்திரை பதித்த தமிழக டாக்டர்)
x
தினத்தந்தி 1 Dec 2019 9:14 AM GMT (Updated: 1 Dec 2019 9:14 AM GMT)

“சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் 42 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் 42 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இ்ந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது 2025-ம் ஆண்டில் 13 கோடி நோயாளிகளாக அதிகரிக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 84 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்துகொண்டிருக்கும் சர்க்கரை நோயை பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் தேவை. அந்த பணிக்காகத்தான் என்னை நான் அர்ப்பணித்திருக்கிறேன்” என்று கூறும் டாக்டர் வெ.சத்தியநாராயணன், இந்த விழிப்புணர்வு பணியில் 7 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார். இந்திய அளவிலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆகியிருக்கிறார்.

தங்களிடம் புதைந்திருக்கும் தனித்திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்சிப்படுத்தும் நோக்கில் கின்னஸ் சாதனை படைப்பவர்கள்தான் மிக அதிகம். அவர்களுக்கு மத்தியில் இவரது சர்க்கரை நோய் விழிப்புணர்வு சாதனைகள் தனித்துவம் பெற்று திகழ்கின்றன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களை முன்நிறுத்தி இவரது சாதனைகள் உருவாகியிருக்கின்றன. “இத்தகைய கின்னஸ் சாதனைகள் படைத்த இந்தியாவின் முதல் டாக்டர் நான் தான்” என்றும் பெருமிதமாக கூறும் அவரிடம் நமது கலந்துரையாடல்!

‘‘எனது பூர்வீகம் காஞ்சீபுரம். பெற்றோர் வெங்கடசாமி-முனிலட்சுமி. தந்தை என்ஜினீயராக பணிபுரிந்தார். நான் நன்றாக படிக்கும் மாணவன். 8-ம் வகுப்பு படித்தபோது தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை அடியோடு மாறிப்போனது. தாயார்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார். பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று, டாக்டருக்கு படிக்கும் ஆசையில் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.

கல்லூரி இறுதி ஆண்டில் மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்திற்கு மருத்துவ முகாம் நடத்த சென்றிருந்தோம். அங்கு நான் சந்தித்த மனிதர்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். சமூக சேவை உணர்வு எனக்கு அங்குதான் உதயமானது. அங்குள்ள மக்கள் நோய் பாதிப்பு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருந்தார்கள். சர்க்கரை நோய் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணம் உண்டானது. அதற்கு அடித்தளம் அமைக்கும் விதத்தில் பொது மருத்துவத்தில் எம்.டி. படிப்பையும் பூர்த்திசெய்தேன்.

பின்பு ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்குள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் குறித்த சிறப்பு படிப்பில் சேர்ந்தேன். அங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘கால் பராமரிப்பு’ பற்றி விரிவாக கற்று தேர்ச்சி பெற்றேன். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்தான் முகம். முகத்தை கண்ணாடியில் பார்த்து எப்படி அழகுபடுத்திக்கொள்கிறோமோ அதுபோல் கண்ணாடியிலும் கால்களை பார்த்து பராமரிக்க வேண்டும். காலில் வெடிப்போ, சிவப்போ, உணர்வற்ற நிலையோ, தழும்போ, கொப்பளங்களோ இருந்தால் அலட்சியம் காட்டக்கூடாது.

சிலர் கால் வீக்கமாக இருக்கிறது என்று சிகிச்சைக்காக வருவார்கள். பாதத்தை எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தால் உள்ளே ஆணியோ, துருபிடித்த கம்பியோ குத்திய நிலையில் இருக்கும். கால் உணர்வற்ற நிலையில் அது அவர்களுக்கு தெரியாது. அதை சரியான நேரத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் அது ஆபத்தானதாகிவிடும்’’ என்கிறார்.

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் இருப்பதற்கும், பின்பு கால் விரல்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கும் டாக்டர் வெ.சத்தியநாராயணன் விளக்கம் அளிக்கிறார்.

‘‘சாதாரணமாக ஏற்படும் புண்கள் இரண்டு மூன்று நாட்களில் ஆறுவதற்கு தொடங்கிவிடும். அதற்கு ரத்த ஓட்டம்தான் காரணம். ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் புண் இருக்கும் பகுதிக்கும் தடையின்றி சென்று விரைவில் புண்ணை ஆறவைத்துவிடும். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு புண் இருந்தால் அது ஆறுவதற்கு காலதாமதமாகும். ஏனெனில் புண் இருக்கும் பகுதிக்கு ரத்தம் சரிவர போகாது. ரத்த குழாய்களில் அடைப்பும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு சக்திகுறையும். அதனால் நோய் தொற்று உருவாகும். அப்போது ஊசி, மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் ரத்த ஓட்டம் சீராகி, புண்கள் குணமாகாது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் இருந்தால் அதற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. செருப்பு அணிந்தால், புண் செருப்பில் உராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. இப்போது சர்க்கரை நோயாளிகள் அணிவதற்கென்றே பிரத்யேக செருப்புகள் இருக்கின்றன். அதனை வாங்கி அணியவேண்டும். அவர்கள் புண்களை சரியாக பராமரிக்காவிட்டால் கால்களை இழக்க நேரிடும். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குபடி, ஒவ்வொரு 30 விநாடியிலும் உலகில் ஏதேனும் மூலையில் ஒரு நபர் தனது ஒரு காலை சர்க்கரை நோயால் இழந்து கொண்டிருக்கிறார்” என்று விளக்கம் தருகிறார்.

காஞ்சிபுரத்தில் வசித்து வரும் டாக்டர் சத்தியநாராயணன் மக்களிடையே சர்க்கரை நோய் பாதிப்பின் தன்மை பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் உண்டாக்கும் நோக்கத்தில் கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியதற்கான காரணத்தையும் சொல்கிறார்!

‘‘அரசு பள்ளிக்கூடம் ஒன்றிற்கு சென்று மாணவர்களிடம் நோய் பாதிப்புகள் குறித்து 10 கேள்விகள் கேட்டு, அதற்கான விடைகளை எழுத சொன்னேன். அவர்களில் சிலரே பதில் எழுதினார்கள். அதுவும் மூன்று, நான்கு கேள்விகளுக்குத்தான் சரியான விடைகளை எழுதியிருந்தார்கள். பொதுவாக நாம் எந்த விஷயத்தையும் பேசி புரியவைக்கும்போது முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமே காதுகொடுத்து கேட்பார்கள். பின்னால் இருப்பவர்களின் சிந்தனை வேறு எங்கோ ஓடிக்கொண்டிருக்கும்.

நாம் சொல்ல விரும்பும் விஷயத்தை எல்லோரையும் ஈடுபாட்டுடன் கேட்க வைக்க வேண்டும் என்றால் அவர்களை அந்த நிகழ்ச்சியில் ஒன்றவைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்களை கைப்பட எழுத வைத்து காகிதங்களாக மடித்து தொப்பிகளாக செய்து அணிந்து கின்னஸ் சாதனை படைத்தோம். அதில் 1324 மாணவர்கள் பங்கேற்றனர்.

அந்த தொப்பிகளில் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேவேளையில் மீன் சாப்பிடலாம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை எழுதி இருந்தார்கள். அவை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கார்போஹைட்ரேட் அதிகமான உணவு பொருட்கள், அரிசி, சர்க்கரை, கிழங்கு வகைகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சமையலுக்கு பாமாயில் உபயோகிக்கக்கூடாது. ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனால் வீட்டிலேயே ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம். 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதற்கு சமம்.

அதனால் உலக நீரிழிவு தினத்தையொட்டி 1015 மாணவர்களை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. லிம்கா நிறுவனத்தை சேர்ந்த விஜயா கோஸ், இதுபோன்ற சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துங்கள். அவை பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும் என்றார். அதை தொடர்ந்து கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்தேன். இதுவரை 7 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறேன். ஏராளமான சமூக அமைப்புகளும் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றும் எனது சமூக சேவைப் பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினேன். அவரும் என்னை பாராட்டி தொடர்ந்து நான் சமூக சேவைகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது ஆலோசனைகளை இப்போதும் நான் நடைமுறைப்படுத்திவருகிறேன்” என்று கூறும் டாக்டர் சத்தியநாராயணன், கருவில் இருக்கும் குழந்தைகளைகூட சர்க்கரை நோய் தாக்கும் என்றும் சொல்கிறார்.

“கணையம் இ்ன்சுலினை சீராக சுரக்கவேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்போது இன்சுலின் சுரப்பு தடைபட்டுவிடும். இன்சுலின் தான் உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் சாவி போன்றது. அது திறந்தால்தான் செல்களுக்குள் குளுக்கோஸ் போக முடியும். அப்படி குளுக்கோஸ் செல்லுக்குள் போக முடியாதபோது சோர்வு உண்டாகும். அதுதான் சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாக காரணமாகிவிடும். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. சர்க்கரை அளவு அதிகமாகாமல் கட்டுப்படுத்தத்தான் முடியும்.

சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் தவறாமல் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள்வைக்க முடியாது. அவர்கள் முறையான பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும். முன்பெல்லாம் குறிப்பிட்ட வயதை கடந்தவர்களைத்தான் சர்க்கரை நோய் தாக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது கருவில் வளரும் குழந்தை களையும் இந்த நோய் தாக்குகிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருபாலரில் யாராவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு 25 சதவீதம் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நாம் நோயின்றி வாழ உணவு கட்டுப்பாடும் அவசியம். தினமும் நமக்கு 1800 கலோரிதான் தேவை. வேகவைத்து சாப்பிடும் இட்லியை விட எண்ணெய்யில் பொரித்து சாப்பிடும் வடை அதிக கலோரிகளை கொண்டது. ஒருவடை சாப்பிடுவதற்கு பதிலாக கூடுதலாக இரண்டு இட்லிகள் சாப்பிட்டுவிடலாம். பலரும் கலோரி கணக்கு பார்க்காமல் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுகிறார்கள். உடல் இயக்கம் மூலம் அந்த கலோரிகளை செலவிடாவிட்டால், அது உடலில் தேங்கிவிடும். அதனால் கொழுப்பு அதிகமாகி அது கல்லீரல், இதயம், மூளை போன்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை தோன்றும். நம் நாட்டில் கலோரிகள் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததே அதற்கு காரணம். மக்களிடம் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சேவையில் தொடர்ந்து ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார்.

இவர் சேவை.. மக்களுக்கு தேவை..!

Next Story