தினம் ஒரு தகவல் : மனநோயை ஏற்படுத்தும் ‘ரிங்டோன் போபியா’


தினம் ஒரு தகவல் : மனநோயை ஏற்படுத்தும் ‘ரிங்டோன் போபியா’
x
தினத்தந்தி 2 Dec 2019 5:05 AM GMT (Updated: 2 Dec 2019 5:05 AM GMT)

நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். அது நடக்காவிட்டால் என்ன ஆகும்? டென்ஷன் ஏற்படும், பதற்றம் உருவாகும், கோபம் வரும்.

ரிங்டோன் போபியாவிலும் இதே பிரச்சினைதான். அது என்ன ரிங்டோன் போபியா? எனக் கேட்கலாம்.

செல்போனில் அழைப்பு வந்தது போல ஒரு உணர்வு மனதில் அல்லாடி கொண்டிருக்கும். வாகனத்தில் செல்லும் போது வைப்ரேஷன் மோடில் வைத்திருந்தாலும் கூட வைப்ரேஷன் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு வரும். உடனே செல்போனை எடுத்து பார்ப்போம்.

அழைப்பு வரவில்லை என்று தெரிந்ததும் சிலருக்கு சலிப்பு ஏற்படலாம். ஒரே நாளில் பலமுறை இப்படி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஏற்படுவது இயற்கைதானே. இது நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ, ஆண்டு கணக்கிலோ தொடர்ந்தால் செல்போனை கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்த பிரச்சினைக்கு சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.

இன்று செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் வாழ்விலும் இரண்டற கலந்துவிட்டது. அப்படியானால், ரிங் டோன் போபியாவை தவிர்க்க வழியே கிடையாதா? எனவும் சிலர் கேட்கலாம்.

அதற்கு வழி இருக்கிறது. செல்போன் பயன்பாட்டை குறைப்பதுதான் ஒரே வழி. இப்போது எந்த அளவுக்கு செல்போனை பயன்படுத்தி கொண்டிருக்கிறோமோ அதை பாதியாக குறைக்க வேண்டும். இன்று இளைஞர்கள்தான் அதிக அளவில் செல்போனை பயன்படுத்துகிறார்கள். எனவே, அவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. ஒரு வேளை அடிக்கடி டென்ஷன், பதற்றம், படபடப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகத் தயங்கக் கூடாது. ரிங் டோன் போபியா மட்டுமல்ல செல்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன. செல்போன் கதிர்வீச்சு மூலம் மூளை பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது காதுகேளா தன்மையை உருவாக்கிவிடும். மூளையும் பாதிக்கப்படுவதால் ஞாபக மறதி எனப்படும் அல்சைமர் நோய் வர வாய்ப்பு உள்ளது. உடல் நடுக்க நோய் எனப்படும் பார்கின்சன் நோய் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் தொடர்கின்றன. நரம்பியல் தொந்தரவாக தலைவலி பிரச்சினை ஏற்படலாம்.

தோள்பட்டையில் செல்போனை வைத்து சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இன்று குழந்தைகள், சிறுவர், சிறுமிகள்கூட செல்போனை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். பொதுவாக வளர்ந்த பிறகே மூளை முழு வளர்ச்சியை எட்டும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு மண்டையோடு மெலிதாகவே இருக்கும். அவர்கள் செல்போனை பயன்படுத்தினால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

Next Story