சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினர்: 50 சதவீதத்தினர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் + "||" + Foreigners coming to India for medical treatment: 50% are from Bangladesh

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினர்: 50 சதவீதத்தினர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினர்: 50 சதவீதத்தினர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்
இந்தியாவின் பல பகுதிகளில் மருத்துவ சேவை மையங்கள் உருவாகி வருவதால், தமிழகம் இந்தத் துறையில் முன்னணியில் நீடிக்க, போக்குவரத்து வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணங்களில் மிக நவீன சிகிச்சைகளை அளிக்கும் துறையான மருத்துவ மதிப்பு பயணங்களில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், இன்று இந்தியா வரும் மொத்த வெளிநாட்டு நோயாளிகளில் 15 சதவீதத்தினர் தான் தமிழகம் வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்திற்கு 27 சதவீத வெளிநாட்டு நோயாளிகள் செல்கின்றனர். கேரளாவிற்கு 5 முதல் 7 சதவீதத்தினர் செல்வதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) அறிக்கை கூறுகிறது. புதிய முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள், தம் மருத்துவ சேவை துறைகளை மேம்படுத்தி வருவதால், தமிழகம் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

முதல் இடத்தை தமிழகம் மீண்டும் எட்ட, நோயாளிகளை அவர்களின் நாடுகளில் அணுக வேண்டும் என்கிறார் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.ஏ.ஆபிரகாம்.

கேரளா மற்றும் பெங்களூருவை சேர்ந்த மருத்துவமனைகள், நற்பெயரை ஈட்டும் நோக்கில், வெளிநாடுகளில் மருத்துவமனைகளை அமைத்துள்ளன. மிக நவீன சிகிச்சைகளுக்காக அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், இந்தியாவில் அந்த மருத்துவமனைகளை தேர்வு செய்வது இயல்பாக நடக்கிறது. “இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களில், இருபதில் ஒரு பங்கு செலவில், நாங்கள் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறோம். ஆனால் நம்முடைய சேவை மற்றும் கட்டமைப்புகளில் போதாமைகள் உள்ளன” என்றும் அவர் கூறுகிறார்.

“சி.ஐ.எஸ். நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இருப்பதால், இதில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. இவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் பயணிகளில் புதிய பிரிவினர் ஆவர். ஆனால் சங்கர நேத்ராலயா, வேலூர் சி.எம்.சி, தெற்கு ஆசியாவின் ஒரே புரோட்டான் கேன்சர் மையமான அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மையம் ஆகிய மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை மையங்கள் சென்னையில்தான் உள்ளன” என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் பன்னாட்டு சேவை பிரிவின் துணைத் தலைவரான ஜித்து ஜோஸ் கூறுகிறார்.

மிகத்தரமான, மிக நவீன வகையான மருத்துவ சேவைகளில் சென்னை முன்னணியில் உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள் போன்ற இரண்டாம் கட்ட அம்சங்களில் பின் தங்கியுள்ளது. உதாரணமாக ஆப்பிரிக்க நாடுகள் விஷயத்தில் பின் தங்கியுள்ளோம். ஏனென்றால், பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் சென்னைக்கு அப்படி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்கிறார் ஜோஸ். மருத்துவ சேவை மையமாக கொச்சி வளர்ந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பாதிப்படைந்துள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்காக சென்னை வரும் வெளிநாட்டவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் முன் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்காக வருகின்றனர். புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 20 முதல் 30 சதவீதத்தினர் வருகின்றனர். ஆனால் 55 சதவீதத்தினரை விட இந்த 30 சதவீதத்தினர் சிகிச்சைகளுக்காக அதிகம் செலவு செய்கின்றனர்.

தமிழகம் ஒரு மருத்துவ சேவை மையம் என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சென்னை மருத்துவமனைகள் இதில் முன்னோடிகளாக முன்பு இருந்தன. ஆனால் பின்னர் டெல்லி போன்ற நகரங்கள் இதில் முந்திவிட்டன என்கிறார் சென்னையில், மருத்துவ பயணிகள் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கி நடத்தும் முகமது ஜாக்கரியா அகமது.

“சென்னையில் அனைத்தும் உள்ளது; மிகச் சிறந்த மருத்துவர்கள், மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள். இந்திய சந்தையின் பெரும் அளவை கண்டு, பெருநிறுவனங்கள் தங்களின் மருத்துவ கருவிகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்தவதற்கு முன்பு இந்தியாவில் சந்தைபடுத்துகின்றன. நமக்கு இனி பிராண்ட் உருவாக்கம் தான் தேவைப்படுகிறது. இதை மருத்துவமனைகள் சிறிய அளவில் செய்து வருகின்றன. அபுதாபியை எடுத்துக்கொண்டால், அதன் அரசு அதை ஒரு மருத்துவ சேவை மையமாக மிகத் தீவிரமாக முன்னெடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியாவில் மருத்துவ பயண மதிப்பு

இந்தியாவின் மருத்துவ பயண மதிப்பு (எம்.வி.டி) துறையின் அளவு 2020-ல் 900 கோடி டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உலக சந்தையின் மதிப்பு 5,376 கோடி டாலர்களாக இருப்பதாக, எப்.ஐ.சி.சி.ஐ.க்காக ஏர்னஸ்ட் அன்ட் யங் தயாரித்த அறிக்கை கூறுகிறது. 2025-ம் ஆண்டு வரை இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சி.ஏ.ஜி.ஆர்) சராசரி ஆண்டு வளர்ச்சி 29 சதவீதமாக இருக்கும் என்று கூறுகிறது.

“பயணங்கள் இன்றும் பிராந்திய அளவில் உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள், மருத்துவ சிகிச்சைகளுக்காக கேரளா செல்ல விரும்புகின்றனர்” என்கிறார் டாக்டர் ஆபிரகாம். இந்தியாவில், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைகளுக்காக அதிக அளவில் தமிழகம் வருகின்றனர். வெளிநாடுகளை பொறுத்தவரை, வங்காளதேசத்தில் இருந்தும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக தமிழகம் வருகின்றனர்.

தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்தத்துறையில் இந்தியாவுடன் கடுமையாக போட்டியிடுகின்றன. உலக அளவில் போட்டித்திறன் குறியீடு பட்டியலில், 140 நாடுகளில் இந்தியா 34-வது இடத்தில் உள்ளது. (போட்டியிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது). தற்போது சுமார் 50 சதவீத வெளிநாட்டு நோயாளிகள் வங்காளதேசத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து வருகின்றனர். இவர்களில் பலரும் வெளி நோயாளிகளாக வருகின்றனர். இவர்களில் 100-க்கு 30 நோயாளிகளுக்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை தேவைப்படுகிறது.

“மூன்றாம் உலக நாடு என்ற பிம்பம் இந்தியாவிற்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. அதன் கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இருக்காது என்று கருதப்படுகிறது. நமது மருத்துவ சேவைத் துறை நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மலிவான விலையில் கிடைக்கிறது. சிங்கப்பூரை ஒப்பிடும் போது இங்கு மூன்றில் இரு பங்கு தான் செலவாகிறது” என்கிறார் மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் அனாஸ் ஏ வஜீத். டெல்லியில், எம்.டி.வி.யின் சந்தையின் மதிப்பு மாதம் ரூ.125 கோடி அளவுக்கு உள்ளது (நோயாளி ஒருவருக்கு சுமார் ரூ.3 லட்சம் கட்டண செலவு). டெல்லியுடன் நேரடி விமான சேவை தொடர்புகள் கொண்ட மத்திய கிழக்கு, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சிகிச்சைகளுக்காக அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். கென்யா, உகாண்டா, எதியோபியா, புருன்டி, சூடான், காங்கோ மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர் என்கிறார் வஜீத்.

‘பிரமிப்பூட்டும் இந்தியா’ என்ற சுற்றுலா வளர்ச்சி திட்டதில், உடல்நலம் பேணுதல் மற்றும் மருத்துவ சுற்றுலாவையும் இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்பதை நிறுவ வேண்டும் என்கிறார். ஆனால் இந்த துறையில் 20 சதவீதத்தினர் மட்டுமே அமைப்பு சார்ந்த கட்டமைப்பின் அடிப்படையில் இயங்குவதால், இதை செய்வது கடினம். விசா வழங்கும் நடைமுறைகளில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் வெளிநாட்டவர், ஒரு அடிப்படை விசா மூலம் இங்கு வந்து, மருத்துவ சிகிச்சைகளை (உறுப்பு மாற்று சிகிச்சைகள் தவிர) பெற முடியும் என்பதால், நோயாளிகள் பயனடைவார்கள்.

ஆனால் சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் பொருந்தும். அவர்களில் பலரும் வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் (ஒ.சி.ஐ) அட்டை வைத்திருப்பவர்கள். அதை பயன்படுத்தி இந்தியாவிற்கு வந்து மருத்துவ சிகிச்சைகளை பெறுகின்றனர்.

மொழிபெயர்ப்பாளர்கள், பணப்பரிமாற்ற மையங்கள், சிம் கார்டுகள், நோயாளிகள் விரும்பும் உணவு வகைகளை பரிமாறும் கேண்டீன்கள் போன்ற சேவைகளில் மருத்துவமனைகள் முதலீடு செய்ய வேண்டும்.

“மருத்துவ விசாவில் வருபவர்களுக்கான குடியேற்ற நடைமுறைகள் செய்து முடிக்கப்படும் வரை, விமான நிலையங்களில் அவர்கள் காத்திருக்க வசதியாக ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும்” என்று ஐ.வி.எப். சிகிச்சைகளுக்காக வெளிநாட்டினர் வரும் சென்னை பிரசாந்த் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் கீதா ஹரிப்பிரியா கூறுகிறார். “பெரும்பாலான நோயாளிகள் குடிநீர், பொது சுகாதாரம் பற்றி கவலை தெரிவிக்கின்றனர். டெங்கு பற்றி பல கேள்விகளை எழுப்பிய பின்னரே இறுதி முடிவு எடுக்கின்றனர்” என்கிறார் கீதா.

வாடகைத் தாய் முறையில் இனி கட்டணம் பெறாமல், தானமாக மட்டுமே செயல்படுத்த அனுமதி என்று விதிமுறைகளில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின், சிகிச்சை பெற வருகிறவர்கள் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். உரிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய வணிகரீதியான வாடகை தாய் முறை மிகவும் தேவை. சேவை முறையிலான வாடகை தாய் முறை வெற்றி பெறாது என்றும் அவர் கூறுகிறார்.

சில வருடங்களாக தாய்லாந்து ஒரு போட்டியாளராக இருக்கிறது. தென் கொரியா கடந்த சில வருடங்களில் இத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. சிகிச்சைகளுக்காக அங்கு செல்பவர்களில் 30 சதவீதத்தினர் சீனாவில் இருந்து செல்கின்றனர். ஜப்பானில் இருந்தும் கணிசமானவர்கள் செல்கின்றனர்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மருத்துவ சேவை வசதிகள் பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து நோயாளிகளை ஈர்ப்பது சுலபமல்ல. தாய்லாந்தில் மருத்துவ சேவைத்துறை இந்தியா அளவிற்கு வளரவில்லை என்றாலும், இந்தத் துறையில், இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறது என்கிறார் வஜீத்.

“விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, இந்தியாவிற்கு பயணம் செய்யும் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். திறமையான மருத்துவர்களை கொண்டு மலிவான கட்டண விகிதங்களில், மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை இந்தியா அளிக்கிறது என்பதை பிரசாரம் செய்ய மத்திய அரசு முனைந்தால், இதில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்று விஜயா மருத்துவமனையின் பன்னாட்டு நோயாளிகள் சேவைப் பிரிவின் தலைவர் ஆர்.ஜி.சிவபாலன் கூறுகிறார்.

“அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நோயாளிகளை நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் சுத்தம் மற்றும் சேவைகளுக்கு இணையாக நாம் அளிக்க முடியாது. துபாய் போன்ற இடங்களில் கூட சிறந்த வசதிகளுடன் கூடிய அமெரிக்க மருத்துவமனைகள் உள்ளன. இங்கு சேவைகளை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன. நாம் இன்னும் எட்டாத தரத்தில் மருத்துவ சேவைகளை, வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்” என்கிறார் டாக்டர் ஆபிரகாம்.