சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : ஆங்கில அகராதி குறித்த ருசிகரங்கள் + "||" + Day One Information: Tasks on the English Dictionary

தினம் ஒரு தகவல் : ஆங்கில அகராதி குறித்த ருசிகரங்கள்

தினம் ஒரு தகவல் : ஆங்கில அகராதி குறித்த ருசிகரங்கள்
1857-ம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்த அகராதிகள் (டிக்ஸ்னரிகள்) போதவில்லை என்ற காரணத்திற்காக பிலோலாஜிகல் சொசைட்டி ஆப் கிரேட் பிரிட்டன் என்ற அமைப்பு புதிதாக ஆங்கில அகராதியை உருவாக்கத் திட்டமிட்டது.
டிக்ஸ்னரி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதோடு ஆங்கிலோ சாக்ஸன் காலத்திய மொழிகளின் சரித்திரத்தையும் கூடவே அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இத்திட்டத்தை முழுமையாக்கி ஒப்புதல் பெற இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. 1879-ம் ஆண்டில் இப்பணிக்காக ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதோடு ஜேம்ஸ் முர்ரே என்பவரை ஆசிரியராகவும் அமர்த்தியது. பத்தாண்டிற்குள் நான்கு தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்பது முதல்கட்ட திட்டமாகும். ஆனால் முர்ரேவும் அவரது உதவியாளர்களும் ஐந்தாண்டு காலத்தில் மூன்று பகுதிகள் முடித்திருந்தார்கள். 352 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுதியைப் புத்தகமாக வெளியிட்டு விற்பனை செய்தார்கள். நாம் திட்டமிடுவதைச் செயல்படுத்துவது கடினமென்பதை இந்த டிக்ஸ்னரி தயாரிப்பு உணர்த்தியது. -ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் டிக்ஸ்னரி’ என்ற பெயரில் தயாரித்து முடிக்க மேலும் பல ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். 1928-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசித் தொகுப்பு வரை முழுமையாக வெளியிட 44 ஆண்டுகள் ஆயின.

பன்னிரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட இந்த டிக்ஸ்னரியின் மொத்த பக்கங்கள் 15 ஆயிரத்து 487. இதில் இடம்பெற்ற மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 825. இந்தப் பகுதிகளைத் தவிர துணைப்பகுதியொன்றும் 1933-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1957-ம் ஆண்டு பர்ச்பீல்ட் தலைமையில் மீண்டும் புதிய தொகுப்புகளை உருவாக்கும் குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினரின் முயற்சியால் 1972 மற்றும் 1986 ஆண்டுகளிலும் 1993-ம் ஆண்டில் வெளிவந்த துணை தொகுப்பு உள்பட நான்கு தொகுதிகள் வெளியிடப்பட்டன. 732 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்புகளில் சுமார் 70 ஆயிரம் புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

கடைசி தொகுப்பு வெளியாவதற்கு முன்பே இரண்டாவது பதிப்புக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணகர்த்தாவான முர்ரே, இந்த டிக்ஸ்னரி தொகுப்பில் ஈடுபடுவதற்கு முன்பு மற்றவர்கள் தொல்லை இருக்கக் கூடாதென்பதற்காக தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ரகசிய அறையொன்றை அமைத்துக் கொண்டார். அந்த அறைக்குள் அவரும் அவரது மகள்களும் அமர்ந்து வேலை செய்வது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட தெரியாது. மற்றவர்கள் இடையூறில் இருந்து தப்பிக்க இவர்கள் அமைத்த அறை, குளிர்காலத்தில் அதிக ஈரத்தையும் கோடையில் அதிக வெப்பத்தையும் தரவே அது, காற்று வசதியின்றி மாட்டுத் தொழுவம் போலாகிவிட்டது.

இதனால் முர்ரேவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குளிர்காலங்களில் கதகதப்பாக இருக்க அறைக்கு நடுவே ஸ்டவ் ஒன்றை வைக்க வேண்டியதாயிற்று. எங்கே தீப்பிடிக்குமோ என்ற பயமும் இருந்தது. கனமான ஓவர்கோட் ஒன்றை அணிந்து ஈரம் காலில் படாதபடி மரப்பெட்டியொன்றை போட்டு அதன்மீது அமர்ந்து எழுதுவாராம். இப்படி வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் உழைத்து டிக்ஸ்னரி தொகுப்பை தயாரித்தார். ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டதால் நினைத்தபடி டிக்ஸ்னரியை முழுமையாக முடிக்க முடியாமல் 70-ஆவது வயதில் காலமானார்.