நீர் சேமிப்புக்கு தமிழக அரசின் 160 தடுப்பணைகள் திட்டம்


நீர் சேமிப்புக்கு தமிழக அரசின் 160 தடுப்பணைகள் திட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2019 5:15 AM GMT (Updated: 4 Dec 2019 5:15 AM GMT)

தமிழ்நாட்டில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 89 அணைகளில் 238.58 டி.எம்.சி. நீரும், 14,098 பெரிய பாசன ஏரிகளில் 521 டி.எம்.சி. நீரும், ஆக மொத்தம், 759.58 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கும் திறன் பெற்றுள்ளது. இது தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 26,000 ஏரிகள், 48,758 குளங்கள், ஊரணிகள், மற்றும் குட்டைகள் ஆகியவை நீரினை தேக்கி வைக்கப் பயன்படுகின்றன.

தமிழகத்திலுள்ள 34 ஆறுகள் 17 பெரிய ஆற்று வடிநிலங்களாகவும், 127 உப வடிநிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டு அணைகளை தூர்வாரி செப்பனிடுதல், புதிய தடுப்பணைகள், படுகை அணைகள் கட்டுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை உருவாக்குதல், செப்பனிடுதல், பராமரித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது. மேலும், நதிகளை இணைத்து அதிகப்படியான நீரை சேமிக்கவும், கடலில் கலக்கும் உபரி நிரை சேமிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்கிறது.

மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தினார். மேலும் பல்வேறு புதிய நீர்த்தேக்கங்கள், ஏரிகள், தடுப்பணைகள், படுகை அணைகள், கசிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நிறுவி நீர்மேலாண்மையை வலுப்படுத்தினார். அதை தொடர்ந்து இத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவது உறுதி செய்யவும், கழிவு நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறு சுழற்சி முறையில் உபயோகிப்பதை ஊக்கப்படுத்தவும் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது.



இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய திட்டம் தான் குடிமராமரத்து திட்டமும், டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர் வாரும் பணிகள் திட்டமும் ஆகும். இத்திட்டம் விவசாயிகளிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* ரூ.930.75 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 4,865 ஏரிகள் சீரமைப்பு.

* தமிழகம் முழுவதும் நீர் நிலைகளிலிருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு 75.138 மில்லியன் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டது. இதன் மூலம் நீர் கொள்ளளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

* நீர் நிலைகளை புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.167.75 கோடியில் 265 ஏரிகள் புனரமைப்பு.

* ரூ.60.95 கோடியில் காவிரி டெல்டா பகுதியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் 281 பணிகள்.

* ரூ.285.49 கோடியில் 59 தடுப்பணைகள், ரூ.428.00 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் ரூ.1652.00 கோடியில் அத்திக்கடவு-அவினாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் நீரேற்ற திட்டம்.

* ரூ.565 கோடியில் மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டம் மற்றும் ரூ.11250 கோடியில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்.

* ரூ.19,859.45 கோடியில் காவிரி வடிநிலத்திலுள்ள பாசன அமைப்புகளான கல்லணைக் கால்வாய், காவிரி உப வடிநிலம், வெண்ணாறு உபவடிநிலம், கீழ் பவானி, கீழ் கொள்ளிட கால்வாய், கட்டளை உயர்மட்ட கால்வாய், நொய்யல் உப வடிநிலம் மற்றும் ராஜவாய்க்கால் போன்றவற்றை புனரமைக்க நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

* முதற்கட்டமாக ரூ.2298.75 கோடியில் கல்லணைக் கால்வாய்த் திட்டமும், ரூ.335.50 கோடியில் கட்டளை உயர்மட்ட கால்வாய், ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யல் உப வடிநிலம் மற்றும் ரூ.184 கோடியில் ராஜவாய்க்கால் ஆகியவை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது.

* ரூ.380 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணண் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், ரூ.108.00 கோடியில் மருதையாற்றின் குறுக்கே பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில், கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு வருகிறது.


* உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் பல கட்டங்களாக தேசிய நீரியல் திட்டப் பணிகள். ரூ.745 கோடியில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ரூ.1069 கோடி மதிப்பீட்டில் நீர்வள, நிலவள திட்டம்.

* ரூ.2,962 கோடியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4,773 ஏரிகள், 477 அணைக்கட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டும் பணி. ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ.960.66 கோடியில் காவிரி கழிமுகப்பகுதியில், கீழ் வெண்ணாறு அமைப்பில் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் திட்டம்.

* நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.2080.31 கோடியில் தடுப்பணைகள், படுகை அணைகள், தளமட்டச் சுவர்கள் அமைத்தல் மற்றும் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம். மத்திய அரசின் ரூ.872.45 கோடி முதலீட்டு மதிப்பீட்டு அனுமதியின்படி தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைக்கும் திட்டம்.

* ரூ.7677 கோடி மதிப்பீட்டில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக கட்டளை கதவணை முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கும் பணி மற்றும் மத்திய அரசின் அனுமதியுடன் கோதாவரி-காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த புதிய திட்டங்கள்:-



* ரூ.137.42 கோடியில் சேலம், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் ஏரி மற்றும் கசிவு நீர்குட்டை மற்றும் ரூ.505 கோடியில் நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிதாக கடை மடை நீரொழுங்கிகள் மற்றும் கதவணை.

* ரூ.632.87 கோடியில் 5 மாவட்டங்களில் வெள்ள உபரி நீரினை திருப்பும் பணிகள் மற்றும் ரூ.32.20 கோடியில் 5 மாவட்டங்களில் 8 இடங்களில் புதிய கால்வாய்கள்.

* ரூ.32 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தடுப்பணைகளும், 1 இடத்தில் விவசாயிகள் இயக்கமும், பராமரிப்பு செய்யும் வகையில் தடுப்பணையுடன் கூடிய நீரேற்றுத் திட்டம் மற்றும் ரூ.90 கோடியில் செங்கல்பட்டில் குளவாய் ஏரியினை மீட்டெடுத்து குடிநீர் ஆதாரம் மேம்படுத்தும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளது.

* ரூ.61 கோடியில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மற்றும் ரூ.185.50 கோடியில் 9 மாவட்டங்களில் 9 பாசன கட்டுமானங்கள் 10 மாவட்டங்களில் 13 கால்வாய்கள் 4 மாவட்டங்களில் 4 பாசன ஏரிகள் புனரமைக்கும் பணிகள்.

* ரூ.51.85 கோடியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் 2 குளங்கள் புனரமைத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை செய்யப்படவுள்ளன.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளை செவ்வனே புனரமைத்து அவற்றை உரிய தரத்துடன் பராமரித்து பாசன வசதி பெருக்கிட தமிழக அரசு திட்டங்களை தீட்டி செயலாற்றி வருகிறது. மழை, வெள்ளம், வறட்சி என இயற்கை சூழல் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் நம்மாநிலத்தில் மழை நீரை சேமிப்பதிலும் சேமித்த நீரை திறம்பட பயன்படுத்துவதிலும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

160 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து திட்டம், சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம், புதிய அணைகள் கட்டுதல், ஏற்கனவே உள்ள அணைகளை புனரமைக்கும் பணிகள் திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் மற்றும் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடந்தாய் வாழி காவிரி திட்டம் மற்றும் நதிகள் இணைக்கும் திட்டம், ஆகியவை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகம் நீர்மிகை மாநிலமாக திகழ்வதற்கு மேலும் பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கி செயல்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.


Next Story