சிறந்த மாணவர்களை தாக்கும் தோல்வி பயம்!


சிறந்த மாணவர்களை தாக்கும் தோல்வி பயம்!
x
தினத்தந்தி 5 Dec 2019 8:26 AM GMT (Updated: 5 Dec 2019 8:26 AM GMT)

மிக கடினமான பாடத்திட்டங்களினால் ஏற்படும் கடுமையான அழுத்தம், மிக அதிகமான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால், பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் பலியாகிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு மாணவியான பாத்திமா இந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சினைகள் பற்றி கவனத்தை குவித்துள்ளது.

“முதன்மை கல்வி நிறுவனங்களின் பெயரே அங்கு படிக்கும் மாணவர்கள் மீதான அழுத்தத்தை கூட்டுகிறது. அங்கு படிப்பில் தோல்வியடைவது பெரும் பின்னடைவாக கருதப்படும் என்பதே இதற்கு காரணம். தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் ஏற்படுவதில்லை. பல்வேறு காரணங்களின் கலவையால் ஏற்படுகின்றன. சராசரியான கல்வி நிறுவனங்களை விட முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் குடும்பம் அதீத எதிர்பார்ப்பு கொண்டுள்ளது பெரும் சுமையாக மாறுகிறது.

மேலும் அவற்றில் பயிலும் மாணவர்களே தன்மீது அதீத எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்கின்றனர். முதன்மை கல்வி நிறுவனங்களில் தோல்வி பயம் மிக அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அங்கு தற்கொலை நிகழ்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 70 முதல் 75 சதவீதத்தினர், தமது தற்கொலை எண்ணங்கள் பற்றி யாரிடமாவது பேசும்போது அல்லது சமூக ஊடகங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகர்கின்றனர். ஆனால் நாங்கள் அதை உரிய கவனத்துடன், பொறுமையாக கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை. இன்று யாருக்கும் நேரம் இல்லை. பல நேரங்களில் நாங்கள் அவர்களின் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கிறோம். சில சமயங்களில் விமர்சிக்கவும் செய்கிறோம்” என்று விளக்குகிறார், சினேகா என்ற தற்கொலை தடுப்பு மையத்தை தொடங்கியவரும், மனநல மருத்துவருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார்.



“கல்வி கற்பதில் அழுத்தம் ஐ.ஐ.டி.களில் இருக்கும் அளவுக்கு ஐ.ஐ.எம்.களில் இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கற்பிக்கும் முறையில், கூட்டு கல்வி முறை, செயல் திட்டங்கள் மற்றும் செயல்முறை கல்வி முறை போன்றவை அடங்கும். ஆனால் ஐ.ஐ.டி.களில் மாணவர்கள் தனித்தனியாக, சுயமாக கற்கும் முறை உள்ளது. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தம் துறையில் விற்பன்னர்களாக இருந்தாலும், கல்வி கற்பிக்கும் உளவியலில் போதுமான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. ஐ.ஐ.எம்.களிலும் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அவை நிறுவன வளாகத்தில் ஆள்சேர்ப்பிற்காக பெரும் நிறுவனங்கள் வரும்போது, போலி கவுரவம் காரணமாக ஏற்படுகின்றன. இந்த அதீத ஒப்பீடு மாணவர்களை மவுனமாக கொல்லத் தொடங்குகிறது. அவர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். எமது ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இதை கண்டறிய சில நடைமுறைகளையும், அமைப்புகளையும் உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் மனநலக்குறைவு ஏற்படும் மாணவர்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்று ஐ.ஐ.எம்-ஆரின் முன்னாள் இயக்குனரும், எல்.ஐ.பி.ஏ (லயோலா தொழில் மேலாண்மை நிறுவனம்), எம்.டி.சி.யின் தலைவரான பேராசிரியர் எம்.ஜே.சேவியர் கூறுகிறார்.

ஐ.ஐ.எம்.களில் கல்வி தகுதியை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. ஒரு கூட்டு விவாதம் மற்றும் ஆளுமையை கணிக்கும் தேர்வும் நடத்தப்படுகின்றன. திறந்த முறையில் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், ஒரு சுதந்திரமான திறந்த கலாசாரம் ஆகியவற்றால் மாணவர்களின் மனநலன் மேம்படுவதாக கல்வித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் ஐ.ஐ.எம்.களில் மனஅழுத்தம் ஏற்படுத்தும் தீங்குகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகவில்லை.

சென்னை ஐ.ஐ.டி.யில் 6 பேரும், கான்பூர் ஐ.ஐ.டி.யில் 5 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 3 பேரும், மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி.களில் தலா ஒருவரும் நடப்பாண்டில் (2019) தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. “மாணவர்கள் தற்கொலைகள் பற்றிய ஆய்வறிக்கைகளை படித்து கொண்டிருக்கிறேன். ஐ.ஐ.டி.கள் மற்றும் என்.ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கை, இதர இந்திய மற்றும் பிற நாட்டு கல்வி நிறுவனங்களில் உள்ளதைவிட அதிகமாக இல்லை. ஐ.ஐ.டி. என்ற பெயர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், அளவுக்கு அதிகமான ஊடக கவனம் இதன்மீது குவிகிறது. இதர பிரச்சினைகளையும் எழுப்புகின்றனர். பள்ளி வாழ்க்கையில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு மாறும் மாணவர்கள், முக்கியமாக 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், பல வகையான அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பது உண்மைதான். பள்ளியில் படிக்கும்போது, நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த உடனே, குடும்பத்தினர், சமூகம் மற்றும் கல்விபுலம் சார்ந்த அழுத்தம் அவர்களுக்கு தொடங்குகிறது” என்கிறார் ஐ.ஐ.டி.எம்.மின் மாணவர் பொதுச் செயலாளரான குஷால் குமார் ரெட்டி.

மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே மனஅழுத்தம் உருவாக தொடங்குகிறது என்று ஐ.ஐ.டி. மாணவர்கள் கூறுகின்றனர். அங்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் தினசரி தரவரிசை அடிப்படையில் கடுமையான போட்டிகளை மாணவர்களிடையே உருவாக்குகின்றன. ஐ.ஐ.டி.களுக்குள் நுழையும் மாணவர்கள், அங்கு தன் பள்ளிகளில் முதலிடத்தை பிடித்த மாணவர்களிடம் இருந்து கடும் போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஐ.ஐ.டி.களில் பாடப்பிரிவுகளிடையே (உதாரணமாக கம்ப்யூட்டர் துறை மற்றும் பயோ டெக்னாலஜி துறையினரிடையே) போட்டிகள் உருவாகின்றது. தரவரிசை எண் மற்றும் தரப் போட்டிகள் உருவாகி, இவை இறுதியில் வேலை வாய்ப்புகளை நல்ல ஊதியத்தில் பெறுவதில் போட்டிகளுக்கு இட்டுச் செல்கிறது. “நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் அல்லது அதிக மதிப்பெண்கள் எடுக்க விரும்புகிறவர்கள்தான் அதிக அளவில் மனநிலை பாதிக்கபட வாய்ப்புள்ளவர்கள்” என்கிறார் டாக்டர் லட்சுமி. இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் கணிசமான விகிதத்தினர் மனநல பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.



முக்கிய அம்சங்கள்

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் முதன்மை கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் லட்சுமி, இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஐ.டி.களுக்கு சென்றுள்ளார். இதற்கு அங்கு உள்ள கடும் போட்டிகளினால் கல்வி கற்றலில் ஏற்படும் அழுத்தம் தான் முதன்மை காரணம் என்கிறார். உள்நுழையும் பெரும்பாலான மாணவர்கள், தம் பள்ளி வகுப்புகளில் முதலிடத்தை பெற்றவர்கள் என்பதால், ஐ.ஐ.டி.களில் நடத்தப்படும் தேர்வுகளில் குறைந்த கிரேடுகள் பெறும்போது, அந்த விவரங்கள் அறிவுப்பு பலகைகளில் வெளியிடப்படும்போது, மனச்சோர்வு அடைகின்றனர். சமூக அழுத்தம் இரண்டாவது காரணமாக உள்ளது. முக்கியமாக, வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள், நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்திய தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கிரேடுகளை பெறாமல் போகும்போது மனச்சோர்வு அடைகின்றனர். பள்ளிக்கல்வியில் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றும், ஐ.ஐ.டி. வளாகங்களில் புதிய சமூக உறவுகளை ஏற்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வது மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகளில் இருந்து வருபவர்கள், சரளமாக ஆங்கிலம் பேசுவதில் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மொழி மற்றும் சமூக திறன்கள் ஆகியவை மாணவர்களின் மனநலன்களை பாதிக்கின்றன.

சாத்தியமுள்ள தீர்வுகள்

வெளி உலகை சேர்ந்த தொழில்முறை ஆலோசகர்கள், நடுநிலையான, சுயாதீனமான, மாணவர்களுக்கான தொலைபேசி உதவி மையங்கள் போன்றவை சில தீர்வுகளாக இருக்கும். புதிதாக சேரும் மாணவர்களுக்கான அறிமுக மற்றும் ஆரம்ப பயிற்சி வகுப்புகளின் கால அளவுகளை அதிகரித்தல் பயனளிக்கும். முக்கியமாக சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கும், கிராமப்புறங்களை சார்ந்தவர்களுக்கும், சகஜமாக பேசுவதில், மொழி திறன்களில் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது மிகவும் தேவை. பல முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் நலன் மையங்கள், ஆன்லைன் மற்றும் நேரடி ஆலோசனை வசதிகள், மனநல மருத்துவர்களின் சேவைகள் போன்றவை அளிக்கப்பட்டாலும், கல்வியில் சிறந்த மாணவர்களாக கருதப்படுபவர்கள் இத்தகையக உதவிகளை பெறுவதில் உள்ள சமூக விலக்கம், தயக்கம் ஆகியவற்றினால், மாணவர்களின் உளவியல் தேவைகள் பூர்த்தியாவதில் போதாமைகள் ஏற்படுகிறது. 

Next Story