பசுக்கள் பற்றிய உண்மைகள்...


பசுக்கள் பற்றிய உண்மைகள்...
x
தினத்தந்தி 6 Dec 2019 9:49 AM GMT (Updated: 6 Dec 2019 9:49 AM GMT)

பசுக்களை மனிதர்கள் எப்போது வளர்க்க ஆரம்பித்தார்கள், பசுக்கள் ஏன் மனிதர்களோடு நெருக்கமாக இருக்கின்றன? என்பது போன்ற விவரங்கள் தெரியுமா? அது மாதியான பசுக்களைப் பற்றிய சுவாரஸ்யங்களை இங்கே தெரிந்து கொள்வோமா?

மனிதனின் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமானது பசு. அரோச் எனப்படும் காட்டு மாடுகளின் வம்சாவழியாக வந்தவைதான் பசுமாடுகள். தென்கிழக்கு துருக்கியில் 10 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு இவை வீட்டு வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்பட ஆரம்பித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது பசுக்களில் 80 இனங்கள் உள்ளன. உலகில் 140 கோடி பசுக்கள் உள்ளன.

இப்போது உயிரினங்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் வேகமாக பட்டியலிடுகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டில் பசுக்களின் மொத்த மரபணுக்களை பட்டியலிட்டதில் அவற்றின் 22 ஆயிரம் வகை மரபணுக்கள் அறியப்பட்டிருந்தன. அவற்றில் 80 சதவீத மரபணுக்கள் மனிதர்களுடன் ஒத்துப்போகின்றன. அதனால்தான் அவை நம்முடன் இணக்கமாக பழகுகின்றன என்றால் மிகையில்லை.

கால்நடைகளை குறிக்கும் ஆங்கில வார்த்தையான கேட்டில் (cattle) என்ற சொல், பழமையான பிரெஞ்ச் வார்த்தையான காட்டெல் (chatel) என்பதிலிருந்து வந்தது. இந்த பிரெஞ்சு வார்த்தைக்கு சொத்து என்பது பொருளாகும். பழங்காலத்தில் இருந்து கால்நடைகள் வைத்திருப்பவர்கள் செல்வந்தர்களாக கருதப்பட்டார்கள். இன்றும் பல மாடுகளை வைத்திருப்பவர்கள் செல்வந்தர்கள்தான் என்பதை சொல்லத் தேவையில்லை. அது அவர்களின் பொருளாதார பலத்தை காட்டுவதாக இருந்து, செல்வம் வழங்குகின்றன என்பதும் உண்மையே.

பெண் கால்நடைதான் பசுமாடுகள் எனப்படுகின்றன. ஆண் கால்நடைகள் காளைகள் எனப்படுகின்றன. பசுக்கள் பால் தருகின்றன. காளைகள், பசுக்கள் இனம் பெருகவும், கடினமான வேலைகளை செய்து முடிக்கவும் உதவுகின்றன.

பசுவின் பாலில் இருந்து பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பசுவின் கழிவான சாணம், கோமியம் போன்றவற்றை உரமாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவது உண்டு.

மாடுகள் தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை தரையில் படுத்து கழிக்கின்றன. அப்போது அவை அசைபோடவும், உறங்கவும் செய்கின்றன. சராசரியாக அவை 4 மணி நேரம் தூங்குகின்றன. மாடுகளால் நின்றுகொண்டு தூங்க முடியாது.

மற்ற கால்நடைகளைப்போலவே பசுக்களும், புற்களை மேய்ந்து திரும்பிய பின்னர், தளர்வாக படுத்துக் கொண்டு மேய்ந்த புற்களை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து மெல்லுகின்றன. இதையே அசைபோடுதல் என்கிறோம். அது உணவை நன்கு அரைக்கவும், எளிதில் செரிக்கவும் உதவுகிறது.

மாடுகள் மனிதர்களைவிட உடல்பலம் மிக்கவை. நன்கு வளர்ந்த பசு, சுமார் 5 மனிதர்களின் வலிமையைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அவற்றால் 2 ஆயிரத்து 910 நியூட்டன் சக்தியை வெளிப்படுத்த முடியும்.

பால் தரும் பசுமாடுகளுக்கு ஒரு நாளைக்கு 45 கிலோ உணவு தேவை.

பசுக்கள் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகும்போது நிறைய மீத்தேன் வாயு கழிவுடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு மாடு 250 முதல் 500 லிட்டர் மீத்தேன் வாயுவை வெளியிடுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இது சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

மாடுகள் பெரும்பாலும் புல் மேயும்போதும், ஓய்வெடுக்கும்போதும் வடக்கு அல்லது தெற்கு நோக்கி முகத்தை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அவை சூரியனையோ, காற்றடிக்கும் திசையையோ பொருட்படுத்துவதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மாடுகளால் 300 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும்.

பசுக்களால் அவர்களுக்கு பிரியமானவர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியும். தன் எஜமானரோ அல்லது அதனுடன் நெருங்கிப் பழகும் ஒருவர் சோகமாக இருந்தால், மாடுகளும் சோர்வடைந்துவிடும். அப்போது பசுக்கள் மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும், அதன் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மாடுகள் நல்ல நீந்தும் திறனை பெற்றிருக்கின்றன. வெள்ளத்தில், நீர்நிலைகளில் சிக்கிய பசுக்கள் நீண்ட தூரம் நீந்தி, பத்திரமாக கரை சேர்ந்த அனுபவங்கள் பல இடங்களில் பதிவாகி உள்ளன.

மாடுகளால் சிவப்பு வண்ணத்தை பார்க்க முடியாது. ஆனால் சிவப்பு நிறமுடைய பொருள் நகர்ந்தால், அதை அசையும் பொருட்களாக பசுக்கள் காண்கின்றன.

சிறந்த மோப்பசக்தி பசுக்களிடம் உண்டு. அவற்றால் சில வாசனைகளை 6 மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்துக்களிடம் பசுக்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பசுக்களை கொல்வது 7 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

2009-ம் ஆண்டு ‘ராயல் அக்ரிகல்சுரல் வின்டர் பேர்’ கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது மிஸ்ஸி என்ற பசு 1.2 மில்லியன் டாலர் தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதுவே உலகில் விலை உயர்ந்த பசு என்ற பெயர் பெற்றது. இதன் இந்திய மதிப்பு சுமார் 8 கோடிக்கும் அதிகமாகும்.

மனிதனின் அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளை ஈடுகட்டுவது பால். பல்வேறு பொருட்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பயனுள்ள பசுக்களை பாசத்துடன் பராமரித்து பாதுகாப்போம்!

Next Story