ஹாங்காங்கில் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்


ஹாங்காங்கில் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 5:14 AM GMT (Updated: 7 Dec 2019 5:23 AM GMT)

அதிர்ந்துவிட்டது சீனா! அதிரடியாக சட்டம் கொண்டு வந்து (நவம்பர் 28) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது அமெரிக்கா!

“ஹாங்காங்கில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுமானால், ஜனநாயகம் சிதைக்கப்படுமானால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது” என கடந்த சில மாதங்களாக சொல்லி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டார் என்பதற்கான அடையாளம்தான் டிரம்ப் கையெழுத்திட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம்- 2019.

இந்த சட்டத்தின்படி இனி ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறுவோர் மீது பொருளாதார தடை விதிக்கவும், மக்களை தாக்கும் போலீசாருக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப்படுகிறது.

இதற்கு அமெரிக்கா மீது சீறியுள்ளது சீனா. “அமெரிக்காவின் பஞ்சாயத்து தேவையற்றது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது வெறுப்பை விதைப்பது, வஞ்சகமானது” என சீனா கூறினாலும் அமெரிக்கா ஹாங்காங் விவகாரத்தை வெகு சீரியசாக தான் பார்க்கிறது.

ஒரு சின்னஞ்சிறு தீவு வெறும் 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடு இன்றைக்கு இரு வல்லரசுகளுக்கு இடையிலான மோதலுக்கு காரணமாகி உள்ளதை உலகமே வியந்து பார்க்கிறது.

சின்னஞ்சிறு நாடாயினும் உலகின் மிக முக்கிய வர்த்தக நாடுகளில் ஒன்று ஹாங்காங். இது ஏற்றுமதி வர்த்தகத்தில் உலகின் பத்தாவது பெரிய நாடாகவும், இறக்குமதி வர்த்தகத்தில் உலகின் ஒன்பதாவது நாடாகவும் திகழ்கிறது என்பது சாதாரண விஷயமல்ல.

வானுயர்ந்த கட்டிடங்கள், கல்வியில் சிறந்த பல்கலைக்கழகங்கள், தலைசிறந்த வியாபார நிறுவனங்கள், மிக அதிக பேரை கொண்ட கோடீஸ்வரர்கள், கண்கவரும் நகர வடிவமைப்புகள் என ஹாங்காங்கின் பெருமையை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இந்த அளவுக்கு சிறப்புகள் கொண்ட ஹாங்காங் மக்கள் தற்போது ஜனநாயகத்திற்கான பெரும் போராட்டங்களிலும், சீன அரசின் அடக்கு முறைகளையும் சந்தித்து வருகின்றனர். சீனாவுக்கு ஹாங்காங்கில் என்ன அக்கறை என்றால் அதன் கட்டுப்பாட்டில்தான் ஹாங்காங் உள்ளது.

ஆங்கிலேயர்-சீன உடன்பாடு

ஹாங்காங் என்பது சீனாவின் காலடியில் உள்ள ஒரு தீவு. இது ஆங்கிலேயர்களுக்கும், சீனாவிற்கும் நடந்த அபீன் போரில் ஆங்கிலேயர் கைவசம் போன ஆண்டு 1842. அதன் பிறகு 1898-ல் சீனாவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி ஹாங்காங்கை 99 வருட குத்தகைக்கு எடுத்தது ஆங்கிலேய அரசு (இங்கிலாந்து).

இந்த காலகட்டத்தில் ஹாங்காங் பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. இதன் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்தியதோடு உலகின் மிக வலுவான வர்த்தக நாடுகளில் ஒன்றாகவும் ஹாங்காங்கை மாற்றிவிட்டனர் ஆங்கிலேயர்கள். அத்துடன் சுதந்திர சிந்தனை, ஜனநாயகம், மேற்கத்திய வாழ்க்கை முறை ஆகியவையும் ஹாங்காங்கில் அழுத்தமாக காலுன்றிவிட்டது.

இந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறாமல் சொன்னபடி 1997-ல் சீனாவிடம் ஒப்படைத்தது ஆங்கிலேய அரசு. அதே சமயம் ஹாங்காங்கில் தற்போது இருக்கும் அடிப்படை சட்டங்கள் மக்களின் சுதந்திரம் ஆகியவை மாற்றமின்றி ஐம்பது வருடங்கள் தொடர வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் ஹாங்காங் மக்களுக்கு பெற்றுத் தந்தது. ஆனால், ஒப்பந்தப்படி சீனா நடக்க மறுத்து ஹாங்காங் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாக தற்போது இங்கிலாந்து அரசும் சீனாவை குறை கூறிவருகிறது.

என்ன நடந்தது ஹாங்காங்கில்?

சீனா வசம் நாடு சென்றதை பெரும்பாலான ஹாங்காங் மக்கள் விரும்பவில்லை. ஹாங்காங்கில் வாழும் மக்களில் 92 சதவீதம் பேர் சீனர்கள்தான் என்றாலும் கடந்த 156 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சி காரணமாக மிகப்பெரிய கலாசார மாற்றங்களை, பொருளாதார வளர்ச்சிகளை, மேற்கத்திய தொடர்புகளை ஹாங்காங் மக்கள் பெற்று வளர்ந்த காரணத்தால் சீனாவின் கட்டுப்பாட்டினத்தையும், அதிகார அணுகுமுறையையும் அவர்களால் ஏற்கமுடியவில்லை.

ஹாங்காங் மக்கள் பேசும்மொழி கண்டனிஸ் (cantonese) ஆங்கிலம் மற்றும் மந்தரின் (mandarin) ஆகியவையாகும். இதனால் சீனா வசம் செல்வதற்கு முன்பே சுமார் ஐந்து லட்சம் மக்கள் ஹாங்காங்கை விட்டு வெளியேறினர். சீனா பொறுப்பு எடுத்ததும், தன்னுடைய ஆதரவாளர்களை கொண்ட ஒரு உயர்நிலைக்குழுவையும் தனக்கு கட்டுப்பட்ட ஒரு தலைவரையும் ஹாங்காங்கில் நியமனம் செய்தது.

மேலும் சீனாவின் அங்கம் தான் ஹாங்காங் என்பதை உணர்த்த ‘ஒரு தேசம் இரு அமைப்பு’ என்ற சொல்லையும் பிரபலப்படுத்தியது. அதே சமயம் சீனாவில் இல்லாத வளமையும், சுதந்திரமும் ஹாங்காங் மக்களுக்கு இருப்பது சீனாவை உறுத்தவே செய்தது. அதனால் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் பல நடவடிக்கைகளில் இறங்கியது.

அதன் ஒரு அம்சமாக ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை கைது செய்து சீனாவுக்கும், தைவானுக்கும் கடத்தி கொண்டு சென்று தண்டிப்பது என்ற ஒரு சட்டத்தை ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரிலாம் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தார்.

வெடித்தது மக்கள் கோபம்

அதிர்ச்சியடைந்த மக்கள் மிகப்பெரும் பேரணிகளை நடத்தினார்கள். போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டத்தை சீன ஆதரவு அரசு நிர்வாகத்தினர் கடுமையாக அடக்க முற்பட்டனர். இதனால் மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்.

பல்கலைக்கழகங்கள் போர்க்கோலம் பூண்டன. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். மிளகு பொடி கலந்த ஸ்பிரே அடித்தனர். இறுதியில் துப்பாக்கி சூட்டையும் நிகழ்த்தினர். ஒரு மாணவர் பலியானார். ஏராளமானோர் கைதாகினர்.

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் மக்களை உணர்ச்சி பிழம்பாக்கியது. ஆகவே மக்கள் பொங்கி எழுந்தனர். சீன ஆதரவு நிறுவனங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. சுங்கச்சாவடிகள் தீக்கிரையாயின. பொது வேலைநிறுத்தம் நடந்தது.

கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இவை எல்லாம் ஹாங்காங் இதுவரை சந்திக்காத ஏன் நினைத்துக்கூட பார்க்காத நிகழ்வுகளாகும். இதையடுத்து கைது செய்பவர்களை நாடு கடத்தும் மசோதா மட்டும் வாபஸ் வாங்கப்பட்டது. ஆனால் அது போதாது என்று மக்கள் ஐந்து கோரிக்கைகளை வைத்தனர்.

மக்களின் கோரிக்கைகள்

* சீன அரசு தனக்கு அடிமை சேவகம் செய்யும் தலைவரை ஹாங்காங் மக்கள் மீது திணிக்க கூடாது.

* ஹாங்காங் நிர்வாகத்திற்கான தலைவரை ஓட்டுப்போட்டு மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வேண்டும்.

* மனிதஉரிமைகள், ஜனநாயகத்திற்காக போராடுபவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

* நடுநிலையான ஒரு குழுவை கொண்டு மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையிலான சண்டையை விசாரிக்க வேண்டும்.

* நியாயமான போராட்டங்களை கலவரம் என்று கொச்சைப்படுத்தக்கூடாது.

உள்ளாட்சி தேர்தல்

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பாளர்களாக நின்ற போராட்டக்காரர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். இதுவரை சுமார் 50 சதவீதம் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு இருக்கும். ஆனால் தற்போதைய தேர்தலில் 71 சதவீதம் வாக்குப்பதிவானது. அதில் மொத்தம் உள்ள 18 மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் 17 மாவட்டங்களில் வென்றனர்.

மொத்தம் உள்ள 452 உள்ளாட்சி இடங்களில் 388-ல் போராட்டக்காரர்கள் வென்றனர். 60 இடங்களில் மட்டுமே சீன ஆதரவாளர்கள் வென்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் உணர்வை துல்லியமாக சொல்லிவிட்டது. ஆனால் இதன் மூலமாக எந்த பாடத்தையும் பெற சீன ஆதரவு நிர்வாகம் தயாராக இல்லை என்பது அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் உணரப்பட்டது.

இந்தச்சூழலில் தான் ஆங்கிலேய அரசும், அமெரிக்க அரசும் ஹாங்காங் மக்கள் ஒடுக்கப்படுவதை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கமுடியாது என எச்சரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. 

Next Story