ஒரு பாடல்.. 22 மொழிகள்..


ஒரு பாடல்.. 22 மொழிகள்..
x
தினத்தந்தி 8 Dec 2019 1:45 AM GMT (Updated: 7 Dec 2019 10:23 AM GMT)

மாணவி ஒருவர் தான் செய்த பள்ளிக்கூட ப்ராஜெக்ட்டை பாடலாக பாடி யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்தியாவின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றும் வகையில் 22 மொழிகளில் அந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் அந்த பாடலுக்கு சொந்தக்காரர், ஆர்ஷா முகர்ஷி. 15 வயதாகும் இவர் மும்பையை சேர்ந்தவர்.

முதலில் ‘மை இந்தியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் பாடலை இயற்றி இருக்கிறார். நாட்டின் சிறப்புகளை புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மொழிகள் மூலம் வெளிப்படுத்துவது அனைத்து தரப்பினரையும் சென்றடையும் என்ற எண்ணத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 22 அதிகாரப்பூர்வ இந்திய மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறார். தனக்கு பரீட்சயம் இல்லாத மொழியில் பாடும்போது கேட்பவர்களுக்கு அன்னியமாக தெரியக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். அதற்காக அந்தந்த மொழி பேசுபவர்களின் உச்சரிப்புகளையும், குரல் தொனியையும் ஆழ்ந்து கற்று பயிற்சி பெற்றிருக்கிறார்.

‘‘நமது நாடு அழகான நாடு. என் பாடல் மூலம் மேலும் அதை அழகாக்க முயற்சித்திருக்கிறேன். இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளில் பாடுவதற்கு முடிவு செய்தேன். ஆங்கிலத்தில் இயற்றிய பாடலை மொழி பெயர்ப்பதற்கும், 22 மொழிகளின் உச்சரிப்பை கற்பதற்கும் நான்கு மாதங்கள் செலவிட்டேன். எனது முயற்சிக்கு பலர் உறுதுணையாக இருந்தார்கள். இதற்காக நான்கு மாதங்களாக என்னுடன் பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு மொழிகளின் உச்சரிப்பும் நம்பகத்தன்மையுடன் இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறேன். அதில் பிழை ஏதேனும் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்றும் கூறி இருக்கிறார்.

22 மொழிகளில் பாடுவது எளிதான காரியம் அல்ல. ஆர்ஷாவுக்கு இந்தி, தமிழ், பெங்காலி போன்ற மொழிகள் அறிமுகமானவை. ஆனால் சந்தாலி, மெய்தி போன்ற அறியப்படாத மொழிகளிலும் சிறப்பாக பாடி இருக்கிறார். போடோ என்ற மொழியிலும் பாடி இருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் போடோ பழங்குடியினரால் மட்டுமே அந்த மொழி பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story