சிறப்புக் கட்டுரைகள்

ஆசிரியையின் கையில் அதிசய சாட்டை + "||" + Wonderful Whip in the hands of the teacher

ஆசிரியையின் கையில் அதிசய சாட்டை

ஆசிரியையின் கையில் அதிசய சாட்டை
ஆசிரியர்கள் முன்பெல்லாம் பிரம்பை கையில் வைத்துக்கொண்டு பாடம் கற்றுக்கொடுத்தார்கள். இங்கே இந்த ஆசிரியை சாட்டையை கையில் எடுத்து பாடம்சொல்லிக் கொடுக்கிறார். இவரது சாட்டைக்குள், மாணவ-மாணவிகளை மயக்கும் மந்திரம் அடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளில் சாட்டையை கையில் எடுத்த முதலாவது...முன்மாதிரி ஆசிரியை இவர்தான். இவர் பெயர் சுகுணாதேவி (வயது 37). இவர் சாட்டையை எடுத்தது, பாரம்பரிய கலைகளில் ஒன்றான சாட்டை குச்சி ஆட்டம் ஆடுவதற்காக! இதனை அவர் பறையோடு இசைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து பாராட்டுகளை குவிக்கிறார். அந்த பள்ளி மாணவிகளும், இந்த பாரம்பரிய கலையில் ஜொலிப்பதோடு பள்ளி பாடங்களையும் அதன் மூலம் கற்கின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகில் உள்ள ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் சுகுணாதேவி பட்டதாரி கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் காரமடை. இவரது கணவர் தமிழாசிரியர் மூர்த்தி. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மோகிதா என்ற மகள் உள்ளார்.

ஆசிரியை சுகுணாதேவியுடன் நமது கலந் துரையாடல்:

‘‘நான் கோவை அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத் தில். பி.எஸ்சி (கணிதம்) படித்தேன். பின்பு பி.எட். தேர்ச்சி பெற்றதுடன் தொடர்ந்து எம்.எஸ்சி., எம்.பில் படித்து முடித்தேன். படிக்கும்போதே எனக்கு நமது பாரம் பரிய கலைகளில் ஆர்வம் உண்டு. ஆனால் அதனை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை.

நான் முதலில் திருப்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அங்கு 2 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், இந்த பள்ளிக்கு வந்து விட்டேன். இங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்றுக்கொடுப்பதோடு நின்று விடாமல் பாரம்பரிய கலைகளையும் சொல்லிக்கொடுக்க விரும்பினேன். அதன் மூலம் அவர்களது கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு, கல்வியையும் எளிதாக புகட்டதிட்டமிட்டேன். முதலில் பாடங்களை ஓவியக்கலை மூலமாகவும், பொம்மலாட்டம் மூலமாகவும் சொல்லிக்கொடுத்தேன். அதில் அவர்களுக்கு ஆர்வம் பெருகியதால் கும்மியாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம் போன்றவற்றின் மூலமும் போதித்தேன்.

இந்த நிலையில் பழம்பெருமை வாய்ந்த பறை மற்றும் சாட்டை குச்சி ஆட்டங்கள் பற்றி கேள்விப்பட்டேன். அதில் சாட்டை குச்சி ஆட்டம் தற்போது வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. அதற்கு மாணவர்கள் மூலம் புத்துயிர்கொடுக்க களத்தில் இறங்கினேன். ஆசிரியை பணியை தொடர்ந்துகொண்டே புதுடெல்லியில் உள்ள ‘சி.சி.ஆர்.டி’ என்ற மத்திய அரசின் மையத்தில் அந்த கலைகளை பயின்றேன். அங்கு தங்கியிருந்தும் பயிற்சி பெற்றேன். தொடர்ந்து, மதுரையில் செயல்படும் தமிழ்நாடு ஆசிரியர் கலைக்குழுவில் சேர்ந்தும் பயிற்சி பெற்று வருகின்றேன். அதன் தலைவராக இருக்கும் ஆசிரியர் கலைமுருகன் என்னை போன்ற கலை ஆர்வமிக்கவர்களுக்கு சிறந்த பயிற்சியாளராக உள்ளார். அவர்தான் பாரம் பரிய கலை நுட்பங்களை கற்றுத்தந்தார். என்னை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு கலைக்குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதில் தற்போது 18 ஆசிரியர்கள் உள்ளோம். நாங்கள் அடிக்கடி ஒருங்கிணைந்து பயிற்சி எடுத்து எங்கள் திறனை மேம்படுத்தி வருகிறோம். இந்த குழுவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்’’ என்றார்.

ஆசிரியை சுகுணாதேவி பறையின் பெருமையினை யும் நம்மிடம் பறைசாற்றுகிறார்...

‘‘பறை ஒரு இசைக்கருவி மட்டுமல்ல, அது தமிழ் சமூகத்தின் சொத்து. அதனை தோலிசை கருவிகளின் தாய் எனவும் கூறலாம். தமிழர் வாழ்வியலின் முகம் என்ற பெருமையும் அதற்கு உண்டு. பறையடிப்பது முன்பு முக்கியமான தகவல்தொடர்பு சாதனமாகவும் இருந்தது. பறைகளில் பல வகைகள் இருக்கின்றன. அதனை இசைப்பதிலும் பல்வேறு முறைகள் உள்ளன. அதன் சிறப்பு கள்தான் என்னை அதனை நோக்கி ஈர்த்தது. அதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்’’ என்பவர் சாட்டை குச்சி ஆட்டம் பற்றியும் விளக்குகிறார்.

‘‘நான் நாட்டுப்புற கலைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க எங்கள் வட்டார கல்வி அலுவலர் ஜே.பி.கிருஷ்ண மூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாதேவி மற்றும் சக ஆசிரியைகள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நான் மாணவர்களுக்கு சாட்டை குச்சி ஆட்டத்தை கற்றுக்கொடுக்க என்ன காரணம் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். இன்றைய இயந்திர உலகில் இந்த சாட்டைகுச்சி ஆட்டம் காணாமல் போய்க்கொண்டிருப்பதுதான் அதற்கான காரணம். அதற்கு உயிர்கொடுக்கவே ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.

இந்த சாட்டைகுச்சி ஆட்டம் முதன் முதலில் திருச்சி மாவட்டம் வாழைக்காய் மண்டி என்கிற இடத்தில் உள்ள கிராம மக்களால் ஆடப்பட்டிருக்கிறது. மாடு மேய்த்து, வண்டி ஓட்டி களைத்த பிறகு, ஓய்வு நேரத்தில் களைப்பை போக்கிட, களிப்பை ஏற்படுத்திட சாட்டை குச்சியுடன், பறை இசைக்கு ஏற்ப அவர்கள் ஆடியிருக்கிறார்கள்.

மரத்திலான நான்கு சிறிய கட்டைகளை கை விரல் களுக்கு இடையே வைத்துக்கொண்டு, சக்கை என்கிற மரத்துண்டுகளை அடித்து ஒலி எழுப்பியபடி இந்த நடனத்தை ஆட வேண்டும். சக்கை மற்றும் சாட்டை குச்சி இரண்டையும் கொண்டு மாற்றி மாற்றி ஆடவேண்டும். அடிப்படை அடவு, பதித்தேறுதல் அடவு, துள்ளல் அடவு, எய்தல் அடவு, குத்துச்சண்டை அடவு, கும்பி அடவு ஆகிய ஆறு முறைகள் இதில் இருக்கின்றன.

சாட்டை குச்சி ஆட்டத்தில் புராணம், தேச பக்தி, நீதிக்கதை பாடல்களை பாடுவார்கள். ஆட்டம் வட்ட நிலையில் இருந்தால் முதல் பாட்டு பாடுபவர் நடுவில் நிற்பார். இணைக்கோட்டு ஆட்டமாக இருந்தால் பாட்டு பாடுபவர் முன்பகுதியில் நின்றிருப்பார். இவர் பாடலை தொடங்கிவைக்க, தொடர்ந்து மற்றவர்களும் பாடி ஆடுவார்கள். இதுதான் அதன் விதிமுறை.

இங்கு மாணவர்களுக்கு சூழ்நிலைக்குதக்கபடி கற்றுக் கொடுக்கிறோம். சாட்டை குச்சிக்கு மாட்டுவண்டியை ஓட்ட பயன் படுத்தும் சாட்டையைத்தான் பயன்படுத்துகிறோம். ஆரம்பத்தில் மாணவர்கள் குச்சியை சரியாக பிடித்து அடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். தொடர்ந்து பயிற்சி கொடுத்ததன் மூலம் அவர்கள் குச்சியை சரியாக பிடிக்க கற்றுக்கொண்டனர். மாட்டு வண்டியை ஓட்டும்போது இடது மற்றும் வலது பக்கம் அடித்து மாடுகளை விரட்டுவது போல சாட்டை குச்சி ஆட்டத்திலும் இடம் பெறும். இதனால் இந்த ஆட்டத்தில் மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அவர்கள் ஆடும்போது நான் பறை இசைஅடித்து உற்சாக மூட்டுவதால் ஆட்டம் அமர்க்களப்படும். 15 நாட்களில் எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த ஆட்டத்தை கற்றுக்கொண்டனர். இது மட்டுமல்ல, ஏனைய நாட்டுப்புற கலைகளையும் தெரிந்து கொண்டு மாவட்ட அளவிலான கலைவிழாக்களில் பங்கேற்க தொடங்கி விட்டனர். எதிர்காலத்தில் இந்த ஆட்டத்தையும், நாட்டுப்புற கலைகளையும் மற்ற அரசு பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக ஆர்வமுள்ள ஆசிரியைகளுக்கு பயிற்சி கொடுக்கவும் தீர்மானித்து உள்ளேன்.

பொதுவாக இந்த நாட்டுப்புற கலைகளை பள்ளியில் படிக்கும்போதே மாணவ-மாணவிகள் கற்று தேர்ச்சி பெறும்போது, அவர்கள் மனம் ஒருநிலைப்படும். வேண்டாத தீய எண்ணங்கள் விலகும். தன்னம்பிக்கை ஏற்படும். செல்போன் விளையாட்டுகள், மற்றும் பல்வேறு எண்ணங்களை சிதைக்கும் விஷயங்களில் இருந்து பாதுகாக்கும். சிறந்த மாணவனாகவும், உயர்ந்த மனிதனாகவும் உருவாகுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களால் பாடத்திலும் அதிக கவனத்தை செலுத்தமுடியும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த கலைகள் மூலம் கல்வியையும் போதிக்கிறேன்’’ என்றார்.

ஆசிரிைய கையில் இருக்கும் இந்த சாட்டை கலையிலும், கல்வியிலும் அதிசயங்கள் நிகழ்த்தட்டும்!

ஆசிரியரின் தேர்வுகள்...