அழகான ஆபரணம்.. ஆனந்தமான அனுபவம்..


அழகான ஆபரணம்.. ஆனந்தமான அனுபவம்..
x
தினத்தந்தி 8 Dec 2019 1:30 AM GMT (Updated: 7 Dec 2019 12:45 PM GMT)

பெண்களின் ஆபரண ஆசைகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம் விதவிதமான ஆபரணங்களை நிறைய அணிவது பேஷனாக இருந்தது. தற்போது ‘குறைவான (அளவு) ஆபரணங்கள், நிறைவான அழகு’ என்பது டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அதில் ட்ரென்ட்டாக இருக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

செமிபிரேஷியஸ் ஸ்டோன்களில் தயாரிக்கப்பட்ட லேயர்டு கழுத்து ஆபரணங்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றதாக இருக்கின்றன. 30 முதல் 50 வயது பெண்கள் இதனை விரும்பி வாங்கு கிறார்கள்.

1990-ம் ஆண்டுகளில் சோக்கர் நெக்லஸ்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை களாக இருந்தன. அவை இப்போது வடிவத்தையும், அளவையும் மாற்றிக்கொண்டு புதுவிதமாக பவனி வருகின்றன. விருந்துக்கான உடைகளையும், மணப்பெண்களுக்கான உடைகளையும் அணிகிறவர்கள் இந்த புத்தம் புதிய சோக்கர் நெக்லஸ்களை ஆர்வமாக வாங்குகிறார்கள்.

லேயர்டு குந்தன் நெக்லஸ் அணியும்போது அதற்கு ஏற்ற நீள கம்மல்களை இளம்பெண்கள் விரும்பி அணிவதுண்டு. அதற்கு இப்போதும் மவுசு இருந்துகொண்டிருக்கிறது. டிரடீஷனல்- கண்டம்பரரி பேஷன் ஆடைகள் அணியும்போது இந்த நீள கம்மல்கள் கூடுதல் அழகுதரும்.

வயது வித்தியாசமின்றி அனைவருமே தற்போது டெம்பிள் ஜூவல்லரியை அணிந்து அழகில் ஜொலிக்கிறார்கள். திருமணம், விருந்து, விழாக்களில் பாரம்பரிய தோற்றத்தை தந்து இது பெண்களை ரசிக்கச்செய்கிறது.

அதிக பணம் செலவு செய்யாமல் ஆபரணங்கள் மூலம் மக்களை கவர விரும்புகிறவர்கள் ஸ்வரோஸ்கி கிறிஸ்டல் ஆபரணங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இது நிறம் மங்காமல் எப்போதும் ஜொலிப்புதரும். எல்லாவிதமான சுப நிகழ்வுகளுக்கும் இதனை அணிந்துசெல்லலாம்.

மணப்பெண்கள் முகூர்த்தத்திற்கு பின்பு சிம்பிளான உடைகளில் நேர்த்தியாக உலாவர விரும்புவார்கள். அதற்கு ரோஸ் கோல்டு ஆபரணங்கள் ஏற்றதாக இருக்கும். குறைந்த அளவு ஆபரணங்கள் அணிந்து நிறைந்த அழகுடன் திகழவிரும்பும் புதுப்பெண்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆபரணங்கள் பேஸ்டல் நிற உடை களுக்கு கூடுதல் அழகுதரும்.

அலுவலகம் செல்பவர்கள், இண்டர்வியூக்கு போகிறவர்கள், கார்ப்பரேட் மீட்டிங்களுக்கு செல்கிறவர்கள் முகத்திற்கும், உடைக்கும் பொருத்தமான சிம்பிளான ஆபரணங்களை பயன்படுத்துவது நல்லது. இளம் மஞ்சள், வெள்ளை-ரோஸ் கோல்டு சங்கிலி, சிறிய பெண்டன்ட்டுகள், முத்து மாலை அதற்கு பொருத்தமான ஸ்டட் அல்லது ட்ரோப்ஸ் போன்றவை ஏற்றது.

ஆபரண பராமரிப்பு:

பேன்சி ஆபரணங்களை நன்றாக பராமரிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை சீக்கிரமாக பாழ்பட்டுபோய்விடும்.

ஒவ்வொரு ஆபரணத்தையும் சிறிய டிரான்ஸ்பரன்ட் பேக்குகளில் இட்டு தனித்தனியாக வைத்திடுங்கள். பயணங்களுக்கு தயாராகும்போது அந்த ஆபரணங்களை கனமான பேடட் பாக்ஸ்களிலோ, பெரிய கண்ணாடி பாட்டில்களிலோ இட்டு சூட்கேஸ்களில் வையுங்கள்.

ஆபரணங்களில் வியர்வை படிந்த இடங்களில் காட்டன் துணி அல்லது பஞ்சு பயன் படுத்தி துடைத்திடுங்கள். பின்பு சிறிது நேரம் உலரவையுங்கள். எல்லா ஆபரணங்களையும் மாதம் ஒருமுறை வெளியே எடுத்து துடைத்து வைத்தால் புதுப்பொலிவோடு இருக்கும்.

வெள்ளி ஆபரணங்களை இதர ஆபரணங்களோடு அலட்சியமாக சேர்த்துவைத்தால், வெள்ளி கறுத்துபோய்விடும். வெள்ளி ஆபரணங்களை வெல்வெட் துணிகளில் இட்டு தனியாக வையுங்கள். கம்மல்களை டால்கம் பவுடரில் முக்கி டிஸ்யூ பேப்பரில் சுருட்டிவைத்தால் நிறம் மங்காது.

அதிக எடைகொண்ட, பெரிய கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை கோடைகாலத்தில் அணிவதை தவிர்க்கவேண்டும்.

டெரகோட்டா ஆபரணங்களை தண்ணீரும், சோப்பும் பயன்படுத்தி கழுவி உலரவைத்து பாதுகாக்கவேண்டும்.

ஆபரணங்கள் மீது ஒருபோதும் ஹேர் ஸ்பிரே, பெர்பியூம் போன்றவை நேரடியாக பட்டுவிடக் கூடாது. பட்டால் அதன் மெருகு குலைந்துவிடும்.

மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு:

பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். மற்றவர்களுக்கு அழகாக இருப்பதும், கடைகளில் பார்க்கும்போது உங்கள் கண்களை பறிப்பதுமாக இருந்தால் மட்டும் போதாது. அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.

நீண்ட கழுத்தினை கொண்டவர்களுக்கு சோக்கர் மற்றும் கழுத்தோடு இறுக்கமாக இருக்கும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை அழகுதரும்.

மெல்லிய இடையை கொண்ட இளம்பெண்கள் புடவை உடுத்தும்போது இடுப்பில் வெயிஸ்ட் செயின் அணிந்துகொள்ளலாம். அவை முத்து அல்லது செயற்கை கற்கள் பதிக்கப்பட்டதாக இருந்தால் அதிக அழகுதரும். அடுக்குகளை கொண்ட சிறிய சங்கிலிகளை அவர்கள் அணிந்து அழகுபெறலாம். இரண்டு அல்லது மூன்று சோக்கர்களை ஒன்றாக அணிவது நீளமான கழுத்தினை கொண்டவர்களுக்கு அழகுதரும்.

ஜீன்ஸ், ட்ரவுசர் போன்ற மேற்கத்திய உடைகளை பெண்கள் அணியும்போது அதிக கனம்கொண்ட தங்க ஆபரணம், வளையல், கொலுசு போன்றவைகளை அணியக் கூடாது.

சிறிய தங்க சங்கிலிகள், வெள்ளி ஆபரணம், ஒயிட் கோல்டு, பிளாட்டினம் போன்றவைகளில் உருவான சங்கிலிகள் எல்லாவிதமான உடைகளுக்கும் அழகுதரும்.

குண்டான உடல் அமைப்பைகொண்டவர்கள் கழுத்தோடு இறுக்கிப் பிடிக்கக்கூடிய சோக்கர் வகை ஆபரணங்களை அணிவதை தவிர்க்கவேண்டும். காளர் எலும்புக்கு கீழே வரும் விதத்தில் நீளம் கூடுதலான ஆபரணங்களை அவர்கள் அணிந்தால் குண்டானவர்களும் ஒல்லியாக தோன்றுவார்கள்.

Next Story