சக்கர நாற்காலியில் சாதனை தொகுப்பாளர்


சக்கர நாற்காலியில் சாதனை தொகுப்பாளர்
x
தினத்தந்தி 8 Dec 2019 2:15 AM GMT (Updated: 7 Dec 2019 1:01 PM GMT)

வீணாவுக்கு 25 வயது. சிகிச்சை கண்டறியப்படாத நோய் ஒன்று இவரை சிறகொடிந்த பறவைபோல் ஆக்கி, சக்கர நாற்காலியில் முடக்கிப்போட்டுவிட்டது. ஆனாலும் அதில் இருந்தே உருண்டோடி, இருந்த திறமைகளை மெருகேற்றி, தன்னாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து ‘இந்தியாவின் முதல் வீல்சேர் டி.வி. தொகுப்பாளர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார், வீணா.

பாகிஸ்தானில் முனிபா மஸாரி என்ற வீல் சேர் தொகுப்பாளர் இருக்கிறார். அவரை தனக்கு முன்னுதாரணமாகக் கொண்டு இந்த துறையில் கால் பதித்திருக்கிறார், வீணா.

“எனது சிறுவயது பருவத்தில் நான் ஓடி விளையாடிக்கொண்டுதான் இருந்தேன். திடீரென்று ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்ற நோயால் பாதிக்கப்பட்டேன். இந்த நோய் தாக்கியதும் முதலில் அடிக்கடி கீழே விழ தொடங்கினேன். காயம் அடைந்தேன். காலப்போக்கில் உடல் சோர்ந்து, தளர்ந்துபோனேன். நடக்கவே சிரமப்பட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அதன் பின்பு நடத்திய பரிசோதனையில்தான் மேற்கண்ட நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

இ்ந்த நோய்க்கு சிகி்ச்சை இல்லை என்றும், பிசியோதெரபி மூலம் ஓரளவு தற்காத்துக்கொள்ளலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள். அதனால் நான் மிகுந்த கவலைக்கு உள்ளானேன். என் பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்கள். நிறைய டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டே இருந்தோம். ஆனால் இந்த நோயை குணப்படுத்திவிடமுடியும் என்ற நம்பிக்கை எங்கேயும் கிடைக்கவில்லை. வருடங்கள் கடந்தது. நோய் பாதிப்பு கூடியும், குறைந்தும் என்னை குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது” என்று கூறும் வீணா கேரளாவில் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர்.

கடுமையான நோய் பாதிப்பிற்கு மத்தியிலும் இவர் படிப்பை தொடர்ந்துகொண்டிருந்தார். ஆனால் கல்லூரியில் முதுநிலை பட்டத்திற்காக படித்துக்கொண்டிருந்தபோது நோய் தாக்குதல் அதிகமாகி வீல் சேரில் முடக்கிப்போட்டுவிட்டது.

“என் வாழ்க்கை வீல் சேரில் ஆன பின்பும் நான் இந்த நோய் பற்றி நிறைய தகவல்களை சேகரித்தேன். அப்போதுதான் நான் மீண்டும் முன்புபோல் இயல்பு நிலைக்கு திரும்பமாட்டேன் என்பதை உணர்ந்தேன். இறுதி முயற்சியாக டாக்டர் பேபி வர்க்கியை சந்தித்தோம். அவர், ‘இந்த நோயை நினைத்து வருந்தவேண்டியதில்லை. இதற்கு பின்னாலும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பிருக்கிறது’ என்று தன்னம்பிக்கையூட்டினார். அதோடு விடாமல் என்னை போல் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் என்பவரையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகுமார் மூலம் எனக்கு மைன்டி என்ற அமைப்பின் தொடர்பு கிடைத்தது. என்னை போன்று பாதிக்கப்பட்டவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, எங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் பணியை அந்த அமைப்பு செய்துகொண்டிருக்கிறது. அப்போதுதான், ‘பாகிஸ்தானில் இருக்கும் முனீபா போன்று நானும் டெலிவிஷன் தொகுப்பாளர் ஆகலாமே!’ என்ற எண்ணம் எனக்குள் உருவானது. அதற்கு கிருஷ்ணகுமார் வழிகாட்டினார்.

முதலில் ‘ஆள்கூட்டத்தில் தனியே’ என்ற சினிமாவுக்கான புரமோஷன் நிகழ்ச்சியை மேடையில் தொகுத்து வழங்கினேன். பின்பு ஆன்லைனில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். ஆனாலும் டெலிவிஷன் தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான வாய்ப்பு கடந்த ஓணம் திருநாளில் கிடைத்தது. தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, இந்தியாவின் முதல் வீல் சேர் டெலிவிஷன் தொகுப்பாளர் ஆனேன்” என்கிறார்.

இது வீணாவுக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வழங்கியிருக்கிறது.

“இதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை என்று நான் கருதியது இப்போது நடந்துவிட்டது. நாம் நினைத்ததை காலம் எப்படியாவது நிறைவேற்றிதந்து விடும் என்பது என் வாழ்க்கை மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என் இந்த கனவை காணவும், இதை நான் அடையவும் எனக்கு துணைபுரிந்தவர்கள் என் வாழ்க்கையில் நிறைய உண்டு. அவர்கள்தான் எனது சக்தி.

இந்த வீல் சேரிலே என் வாழ்க்கை முடங்கிபோய்விடும் என்றும், முடிந்துபோய்விடும் என்றும் நான் நினைத்தேன். ஆனால் இதில்தான், இப்போதுதான் என் வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. நான் முதலில் விவசாய அதிகாரியாகவேண்டும் என்று நினைத்தேன். வீல் சேரில் நகர ஆரம்பித்தபின்புதான் எனக்கு அதைவிட சிறந்த கனவுகள் உருவாகின. வீல் சேர் மூலம்தான் எனக்கு புதிய உலகம் அறிமுகமாகியிருக்கிறது. அதனால் இது சக்கர இருக்கை அல்ல.. சாதனை இருக்கை” என்று வெற்றிப்புன்னகை பூக்கிறார், வீணா.

Next Story