சாமியார்களும், சர்ச்சைகளும்...


சாமியார்களும், சர்ச்சைகளும்...
x
தினத்தந்தி 8 Dec 2019 6:32 AM GMT (Updated: 8 Dec 2019 6:32 AM GMT)

மீண்டும் சர்ச்சைகளில் அடிபட தொடங்கி உள்ளார் நித்யானந்தா. ஏற்கனவே இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் எழுந்தன.

நித்யானந்தா
தற்போது குழந்தைகளை கடத்தி சித்ரவதை செய்ததாகவும் வழக்குகள் பதிவாகி வாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியாக தேடப்பட்டு வருகிறார். “நான் கடவுளின் அவதாரம். நான் கட்டளையிட்டவுடன் சூரியனே அரை மணிநேரம் நின்று சென்றது” என்றெல்லாம் பேசி வந்த நித்யானந்தா தற்போது போலீசாரை காணப்பயந்து தலைமறைவாகி உள்ளார்.

அவரது ஆமதாபாத் ஆசிரமம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு பிடதி ஆசிரமம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், உலகின் சில நாடுகளிலும் அவருக்கு ஆசிரமம் உள்ளது. அவரது சொத்து மதிப்பு சுமார் இரண்டாயிரம் கோடி என சொல்லப்படுகிறது.

இந்தியா ஒரு ஆன்மிக பூமி. அந்த வகையில் ஒரு காலத்தில் இந்தியாவில் பற்பல யோகிகள், சித்தர்கள், மகான்கள், குருமார்கள், சாமியார்கள் வாழ்ந்துள்ளனர். அதனால் இதை ‘புண்ணிய பூமி’ என்றும் சொல்வார்கள்.

ஆனால் சமீபகாலமாக போலி ஆன்மிகவாதிகள், போலிச்சாமியார்கள் அதிகரித்து வருகிறார்கள். அப்பாவி மக்கள் தங்களது கஷ்டங்கள், பிரச்சினைகள் தீரும் என்று நம்பி இவர்களிடம் சென்று மென்மேலும் துன்பத்திற்கு உள்ளாகி ஏமாந்து வருவது தொடர் கதையாகிறது. புனிதமான ஆன்மிகத்தில் போலிச்சாமியார்களும் நிறையவே இருக்கிறார்கள் என்பது தற்போது வரக்கூடிய ஏராளமான புகார்கள், கைதுகள் மூலம் தெரியவருகிறது.

அம்பலப்பட்ட போலிச்சாமியார்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அம்பலப்படாமல் ஆன்மிக வியாபாரம் செய்பவர்களே மிக, மிக அதிகம். ஏனென்றால் ஏமாந்த பலரும் வெளியில் சொன்னால் அவமானம் என்று தங்களுக்குள் குமுறிக்குமுறி அழுது மறைத்து விடுகிறார்கள்.

இத்தகைய போலிச்சாமியார்களிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதை தடுக்கவும், அதன்மூலம் இந்து மதத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சமீபத்தில் சாதுக்களின் தலைமை அமைப்பான ‘அகில பாரதீய அகாராபரிஷத்’ போலிச்சாமியார்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.


அம்பலப்பட்ட போலிச்சாமியார்களின் பட்டியல்
ஆசாராம் பாபு, சுவாமி ஒம்ஜி, நிர்மல்பாபா, இச்சத்ரி பீமானத், ராம்பால், ஆச்சார்யா குர்முனி, பிரகஸ்பதி நரேந்திர கிரி, மல்கன்சிங், ஓம் நமசிவாய பாபா, வீரேந்திரதேவ் தீட்சித், சச்சிதானந்த சரஸ்வதி, சுவாமிஅஷிமானந்தா, லச்சாதரி பீமானந்தா, குர்மித்ராம் ரஹீம்சிங், நாராயன்ராய், ராதேமாதே, சச்சிதானந்தகிரி போன்றவர்கள்.

இந்த பட்டியல் வெளியான பின்பு இதில் விடுபட்டவர்கள் குறித்த விவாதங்கள் நாடு முழுக்க வலுத்துவருகிறது. அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் இதில் நித்யானந்தா, கல்கி சாமியார் உள்ளிட்ட நிறைய பேரை இணைக்கவேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் எழுதி வருகிறார்கள்.

நாம் இந்த பட்டியலில் உள்ள சில சாமியார்கள் குறித்த சுவையான செய்திகளை பார்ப்போம்.

இந்தியாவில் மட்டுமல்ல...
ரஸ்புடின்: ரஷியாவில் கொடிகட்டி பறந்தார். சின்னக் கடவுள் என கொண்டாடப்பட்டார். அரசர் குடும்பமே இவரை வணங்கியது . இதனால் அரசையும் ஆட்டிப்படைத்தார். அரசர் மனைவியும் அவர் வலையில் விழுந்தாள். இதனால் ரஸ்புடின் ஒரு நாள் (1916) மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

டேவிட் கொரேஸ்: கிறிஸ்தவ மதத்தின் தாவீது பிரிவு தலைவர். தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று பிரகடனப்படுத்தி கொண்டார். மிகப்பெரிய சீடர்கள் கூட்டம் சேர்ந்தது. இவர் எந்த நேரம் என்ன செய்வார் என்று யாரும் யூகிக்கமுடியாத அளவுக்கு அதிரடியாக ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவார். பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் குவிந்தது.

அமெரிக்காவின் காவல்துறை இவரை தானாக சரணடைய கூறியது. ஆனால் இவர் மறுத்ததோடு தன்னை கைது செய்ய வந்த காவலர்களை சுட ஆணையிட்டார். போலீசுக்கும், சாமியார்களின் சீடர்களுக்குமான யுத்தம் 51 நாட்கள் நீடித்தது. இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாமல் 1993-ம் ஆண்டு தன்னைச் சுற்றி இருந்தவர்களை (80 பேர்) புனித மரணத்தை தழுவக்கோரி நெருப்பில் விழுந்து சாக ஆணையிட்டார். அதில் மற்றவர்களுடன் தானும் மடிந்தார்.

ராதே மா
துர்க்கையின் அவதாரம் என்று சொல்லப்பட்டார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 17 வயதில் ஒரு ஏழை வாலிபரை திருமணம் செய்துகொண்டு வருமானம் போதாமல் டெய்லராக துணி தைத்தவர். தனது 23-வது வயதில் ஆன்மிகத்தில் இறங்கி திடீரென பிரபலமானார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சுபாஷ் இவரது சீடர். மேலும் சில நடிகர்கள், நடிகைகள் வழிபட்டனர். அவ்வளவுதான்! ராதே மா ஆடாத ஆட்டமில்லை. எக்கசக்க சமூக சேவைகள் வேறு. தூள் கிளப்பினார். ஒருநாள் அலங்கார அம்மனாக காட்சியளிப்பார். மறுநாள் ஆபாச கவர்ச்சி உடையிலும் தோன்றுவார். கருணை ததும்பவும் பேசுவார். கன்னாபின்னாவென்றும் பேசுவார்.

இதனால் ஏராளமான புகார்கள் குவிந்தன. வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், மத உணர்வுகளை பழித்தார் என செய்திகளை அடிபட்டு நீதிமன்ற வழக்கு, கைது என அலைக்கழித்து வருகிறார்.

ஆசாராம்பாபு
78 வயதான இவர் சாராய வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களை செய்தவர். பிறகு ஆன்மிகத்திற்கு வந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டிப்பறந்தார். இவர் சபர்மதியில் ஆசிரமம் வைத்திருந்தவர். இவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலுமாக 400-க்கு மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன.

சொத்து மதிப்பு சுமார் 800 கோடி என்று நம்பப்படுகிறது. எட்டு பி.எம்.டபிள்யூ கார்களும், ஏராளமான வாகனங்களும் வைத்திருந்தார். பிறர் இடங்களை ஆக்கிரமித்து இவர் ஆசிரமம் கட்டியதாக பல புகார்கள் உள்ளன. இவர் பல ஆண்டுகளாக தன் ஆசிரமத்தில் உள்ள சிறு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்.



இவரது மகன் நாராயண்ராயும் இவரைப் போன்றே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஆனால் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத அளவுக்கு இவருக்கு வலுவான அரசியல் செல்வாக்கு இருந்தது. இந்த ஆசிரமத்தின் கீழ் நாற்பது உண்டு, உறைவிட பள்ளிகள் இருந்தன. அதில் நான்கு மாணவர்கள் மர்மமான முறையில் 2008-ம் ஆண்டு இறந்தனர். ஏதோ ஒரு மாந்திரீக நோக்கத்திற்காக இந்த மாணவர்கள் பலியிடப்பட்டனர் என தெரியவந்தது.

ஆயினும் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்ய முதலில் மறுத்துவிட்டனர். காரணம் முதல்-மந்திரி தொடங்கி பிரதமர் வரை வந்து வணங்கி செல்லும் அளவுக்கு ஆசாரம்பாபுவின் செல்வாக்கு இருந்தது. இவர் மீது ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதற்காக இவரது சீடர்கள் பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்ற கோட்பாட்டின்படி இவர் மீதான ஒரு பாலியல் வழக்கில் பிணையில் வரமுடியாத அளவுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது ஆசாரம்பாபுவும், அவரது சீடர்கள் நான்கு பேரும் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

குர்மித்ராம் ரஹீம்சிங்
இந்தியாவின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக கொண்டாடப்பட்ட இவருக்கு சுமார் 6 கோடி சீடர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தனர். தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் தலைவர்களும், பா.ஜ.க. தலைவர்களும் இவரை நாடி சென்று வணங்கி ஆதரவு கேட்பது வழக்கம். மூன்று மருத்துவமனைகள், 13 பெரிய கல்வி நிலையங்களை நடத்தினார். ஐந்து திரைப்படங்களை சொந்தமாக தயாரித்து இயக்கினார். மேலும் இவர் பிரபல பாடகர் என்ற வகையில் நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

‘தேரா சச்சா செளதா’ என்ற பிரபல மடத்தின் தலைவரான இவர் தன்னை கிருஷ்ணர் அவதாரமென்றும், தன்னுடன் சேரும் கோபியர்களின் பாவம்தீரும் என்றும் பேசி வந்தார். உண்மையில் நமது புராண கிருஷ்ணன் ஒரு பிரம்மச்சாரி. அவர் காதல் விளையாட்டில் ஈடுபட்டவர் தானேயன்றி காம விளையாட்டில் ஒரு போதும் ஈடுபட்டதில்லை.

ஆனால் கிருஷ்ணர் பெயரை சொல்லி பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டார் குர்மித் ராம் ரஹீம்சிங். அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். ஆனால் இவரை சுலபத்தில் விசாரிக்கவோ, குற்றம்சாட்டவோ முடியவில்லை.

ஆனால் ராம்சந்து என்ற பத்திரிகையாளர் இவர் பற்றிய உண்மைகளை துணிந்து எழுதினார். அதனால் கோபம் அடைந்த குர்மித் அவரை சுட்டுக்கொன்றார். அப்போதும் அவரை கைது செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட 17 வருட தொடர்முயற்சிகளுக்கு பிறகே அரியானா உயர்நீதிமன்றம் தானகவே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து இவரை கைது செய்ய உத்தரவிட்டது.

ஆனால் சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் திரண்டு சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்தனர். போலீசார் வேறு வழியின்றி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் சாமியாருக்காக தங்கள் இன்னுயிரை துறந்தனர். 300 பேர் படுகாயம் அடைந்தனர். வட இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் பயங்கர கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. பஸ்களும், ரெயில் பெட்டிகளும் பற்றி எரிந்தன. இறுதியில் நீதி வென்றது. சாமியார் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

தொடரும் அவலங்கள்
தமிழ்நாட்டிலும் ஏராளமான போலிச்சாமியார்கள் அவ்வப்போது அம்பலப்பட்டு கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் கூட பெருமாள்மணி என்கிற செல்வமணி திண்டிவனம் ஒங்கூரில் ஐம்பது பெண்களை சீரழித்ததாக கைதாகி உள்ளார். நான் தான் கல்கி அவதாரம் என்று தன்னை சொல்லிக்கொண்ட எல்.ஐ.சி.யின் முன்னாள் ஊழியரான விஜயகுமார் என்கிற கல்கி சாமியாருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தி ரூ.1,000 கோடிகளுக்கு மேல் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பதோடு அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து 88 கிலோ தங்கம், 5 கிலோ வைரம், 44,000 ஏக்கருக்கான நில பத்திரங்களை கைப்பற்றின. சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் இருந்து இங்கு குடியேறிய பிரேம்குமார் என்கிற பிரேமானந்தா பற்பல சித்து வேலைகள் செய்து அதிசயிக்க வைத்து அதன் மூலம் புகழ், பணம், செல்வாக்கு பெற்றார். பிறகு சிறுமிகள் கற்பழிப்பு, கொலை போன்ற காரணங்களுக்காக கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். ஆனபோதிலும் அவரது ஆசிரமத்தின் செல்வாக்கு இன்றுவரை தொடர்கிறது. ஆக பிரேமானந்தா தொடங்கி கல்கி வரை எவ்வளவு தான் வெளியே தெரியவந்தாலும் அவரவர்களை பின்பற்றுவதற்கு என்று ஒரு கூட்டம் தொடரவே செய்கிறது.

எந்த சாமியார் மீதான புகாரும் சுலபத்தில் விசாரிக்கப்பட்டு விசாரணைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவது அபூர்வம். அப்படி தண்டனை பெற்றாலும் கூட அவர்களை பின்பற்ற தயங்காத கூட்டமும் இருந்து கொண்டு தான் உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை போலிச்சாமியார்கள் காட்டில் மழை தான்.

ராம்பால் மகாராஜ்
தன்னைத்தானே கடவுள் அவதாரம் என்று சொல்லிக்கொண்ட ராம்பால் மகாராஜ் அரியானா மாநில நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக பணியாற்றியவர். கபீர்தாசரின் வழித்தோன்றலாக சொல்லிக்கொண்டார். இவரது பேச்சு லட்சக்கணக்கான மக்களை வசீகரித்தது. பணமும், பொருளும் குவிந்தன.

நூறு கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்ந்தது. ஆர்ய சமாஜத்துக்கு எதிராக இவர் ஏதோ பேச வன்முறை வெடித்தது. 2006-ல் இவர் மீது கொலை வழக்கு பதிவானது. மீண்டும் நான்கு பேர் கொலை தொடர்பாக இவர் பெயர் அடிபட்டது. இவரை கைது செய்ய நீதிமன்றம் ஆணையிட்டது.

பத்தாயிரம் பேர் மனித கேடயமாக இவரை பாதுகாத்தனர். போலீசார் துப்பாக்கிச்சூட்டில் எட்டு பேர் சாமியாருக்காக உயிர் கொடுத்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

Next Story