2021-ல் அதிசயம் நிகழுமா?


2021-ல் அதிசயம் நிகழுமா?
x
தினத்தந்தி 8 Dec 2019 6:58 AM GMT (Updated: 8 Dec 2019 6:58 AM GMT)

2021-ம் ஆண்டில் அதிசயம்-அற்புதம் நிகழும் என்று சமீபத்தில் அவர் சொன்னது விவாதத்துக்கும், சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் உள்ளாகிவிட்டது.

பார்வையற்ற 5 பேர் யானை ‘பார்த்தார்கள்’. எப்படி?...
ஒருவன் யானையின் உடலை தொட்டுப்பார்த்து விட்டு, யானை பெரிய சுவர் போல் இருக்கிறது என்றான். மற்றொருவன் யானையின் காலை தொட்டுப் பார்த்து விட்டு, தூண் போல் இருக்கிறது என்றான்.

மூன்றாவது நபர் யானையின் துதிக்கையை தடவிப்பார்த்து விட்டு, யானை உலக்கை போல் இருக்கிறது என்றான். நான்காவது நபர் யானையின் காதை தொட்டுப்பார்த்து விட்டு, முறம் போல் இருக்கிறது என்றான்.

ஐந்தாவது நபரோ வாலை பிடித்துப் பார்த்துவிட்டு யானை கயிறு போல் இருக்கிறது என்றான்.

இந்த கதையை நாம் எல்லோரும் படித்து இருப்போம்.

எதற்கு இப்போது இந்த கதை என்ற கேள்வி எழலாம்.

2021-ம் ஆண்டில் அதிசயம்-அற்புதம் நிகழும் என்று சமீபத்தில் அவர் சொன்னது விவாதத்துக்கும், சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் உள்ளாகிவிட்டது.

அந்த அவர் வேறு யாரும் அல்ல; அரசியல் களத்தில் குதிக்க தயாராகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்.

பொதுவாக ரஜினிகாந்த், வெளியிடங்களில் அதிகம் பேசுவது இல்லை. குறிப்பாக அரசியல் பற்றி பேசுவது இல்லை. கடந்த காலங்களில் சில முறை ‘வாய்ஸ்’ கொடுத்து இருக்கிறார். அந்த ‘வாய்ஸ்’ எடுபட்டும் இருக்கிறது; எடுபடாமலும் போய் இருக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.

மொத்தத்தில் அவர் பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்திதான்.

அவராக முன்வந்து வண்டியில் ஏறுவது இல்லை.

‘மைக்’கை நீட்டி ஏதாவது பிரச்சினை பற்றி அவரது வாயை கிளறினால், தவிர்க்க முடியாமல் ஏதாவது கருத்து சொல்வார். அப்படி சொன்னால், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்றே ஒரு தரப்பினர் இருக்கிறார்கள்.

நரி இடம் போனால் என்ன?... வலம் போனால் என்ன?... நமக்கு ஏன் வம்பு என்று, பிரச்சினைகள் குறித்து அவர் வாய் திறக்காமல் சிவனே என்று இருந்தாலும் விடமாட்டார்கள். அப்போதும் அவர்கள் பாய்ந்துவிடுவார்கள். தன்னை வாழவைத்த தமிழ் மண்ணின் மீது விசுவாசம் இல்லாதவர் என்றும், தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாதவர் என்றும் கூறி வறுத்து எடுப்பார்கள்.

என்ன செய்வது? ஆகாத மருமகள் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்.

சரி... அதிசயம்-அற்புதம் விஷயத்துக்கு வருவோம்.

2021-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதைத்தான் ரஜினிகாந்த் அப்படி கூறி இருக்கிறார் என்று அக்கட்சியின் சில பெரிய தலைகள் கூறி சந்தோஷப்படுகின்றன.

2021-ல் தி.மு.க. ஆட்சி அமையப்போகிறது என்பதைத்தான் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.

யானையை தடவிப் பார்ப்பதைப் போல் இப்படி ஆளாளுக்கு தங்கள் வசதிப்படி எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால் எதை மனதில் வைத்து ரஜினிகாந்த் அப்படி சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அதற்கு முன்னதாக தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக ரஜினிகாந்த் கூறிய போதும் அது குறித்து வாத-பிரதிவாதங்கள் எழுந்தன. அப்படி வெற்றிடம் எதுவும் இல்லை என்று அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் கூற அதற்கு ஆதரவாக அவற்றின் கூட்டணி கட்சிகளும் பின்பாட்டு பாடின.

ஆனால் ஜெயலலிதாவைப் போன்றோ, கருணாநிதியைப் போன்றோ ஆளுமைமிக்க தலைமை என்று யாரையும் அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை.

இன்னும் 1½ ஆண்டுகளில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் எந்த கட்சியும் தனித்து களம் இறங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் தலைவனுக்காக மட்டும் மக்கள் ஓட்டுப் போட்ட காலம் மலையேறி விட்டது. வலுவான கூட்டணியை அமைத்தால்தான் கரையேற முடியும் என்பதை எல்லா கட்சிகளுமே உணர்ந்து இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்டதற்கு, ரஜினிகாந்த் அதற்கான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் நேரடியாக பதில் அளித்துள்ளார். இதேபோல் கமல்ஹாசனும் ரஜினியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 1½ வயது குழந்தை என்பதால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுடன், கூட்டணி இல்லாமல் அவர் மோத விரும்பமாட்டார்.

ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வரும் அவர் சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் தங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று பல கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படி சொல்பவர்கள், அவர் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? ரஜினிகாந்த் வாயை திறந்தாலே பிலுபிலுவென்று பிடித்துக்கொள்கிறார்கள். அவர் கூறியது பற்றி முண்டியடித்துக் கொண்டு தங்கள் கருத்தை பதிவு செய்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி பலருக்குள் உள்ளுக்குள் ஒரு உதறல் இருப்பதையேதான் இது காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பேயாவது-பிசாசாவது என்று சவடாலாக பேசும் நபர் நள்ளிரவு இருட்டில் ஒற்றையடி பாதையில் தனியாக போகும் போது ஏதாவது சத்தம் போட்டு பாடிக்கொண்டே போவான். தன் மனதில் பய உணர்வை மறைக்க அவன் இவ்வாறு பாடிக் கொண்டே போவான். அந்த கதைதான் ரஜினிகாந்த் விவகாரத்திலும் நடப்பதாக தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ரஜினி, கமல் இருவருமே கூறி இருக்கிறார்கள்.




இவர்கள் மட்டும் என்ன? இதற்கு முன் கூட்டணி வைத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதைத்தான் சொன்னார்கள். இனிமேல் வைக்கப்போகிறவர்களும் இதைத்தான் சொல்லப்போகிறார்கள்.

ஆனால் அப்படி சொன்னவர்கள் தங்கள் நலனுக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கிறார்கள்? தியாகம் செய்து இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே ‘மக்கள் நலனுக்காக’ என்று முன்வைக்கப்படும் வாதம் மக்கள் மன்றத்தில் எடுபடுவது இல்லை.

எதுகை, மோனையுடன் கூடிய அடுக்குமொழி வசனங்கள், கவர்ச்சிகரமான வார்த்தை பிரயோகங்களெல்லாம் இப்போது மக்கள் மத்தியில் எடுபடுவது இல்லை. கேட்டு ரசிப்பார்களே தவிர, அதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்வது இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அவ்வளவு எளிதில் அவர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது. சொல்லை விட செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மனதில் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதுதான் முக்கியம்.

மேலும் கவுரவமாக-கண்ணியமாக அரசியல் நடத்திய காலமெல்லாம் போய்விட்டது. ஒருவர் தங்கள் பக்கம் இருந்தால் உப்பு பெறாத காரியத்துக்குக்கூட இந்திரன்-சந்திரன் புகழ்ந்து தள்ளுவார்கள், பாராட்டுவார்கள். அதேசமயம் எதிர்முகாமில் இருந்தால் வசைவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எதைச் சொன்னாலும் குற்றம் கண்டுபிடித்து, பேனை பெருமாள் ஆக்குவார்கள்.

அதனால்தான் அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள். அதை சுத்தம் செய்யப்போகிறேன் பேர்வழி என்று சொல்லி அதில் குதித்த பலர் அதன் துர்நாற்றம் தாங்காமல், ஆளை விட்டால் போதும்டா சாமி என்று ஓடிய கதைகள் இங்கு நிறைய உண்டு. இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் சிரஞ்சீவி.

அரசியல் என்பது கிட்டத்தட்ட வியாபாரமாகி விட்ட காலகட்டத்தில் அதில் நேர்மையானவர்கள்-மனசாட்சி உள்ளவர்களால் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை.

தாக்குப்பிடிக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையில் கமல்ஹாசன் குதித்துவிட்டார்.

குதிக்க தயாராக இருக்கும் ரஜினி அரசியலில் ஈடுபடுவதன் சாதக-பாதங்களை தீவிரமாக ஆய்வு செய்தபடி வலுவான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

68 வயதாகி விட்ட போதிலும், தமிழ் சினிமா பந்தயத்தில் இப்போதும் அவர்தான் நம்பர் ஒன் குதிரை. இளம் நடிகர்கள் பலர் வந்துவிட்ட போதிலும் அவருக்கான மவுசு குறையவில்லை. அவருடைய ரசிகர்கள் கூட்டம் இன்னும் அப்படியே உள்ளது.

அரசியலில் வெற்றி பெற ரசிகர்கள் ஆதரவு மட்டும் போதாது; மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் நன்றாக உணர்ந்து இருக்கிறார். அதனால்தான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக அடி எடுத்து வைப்பதாக தெரிகிறது.

சினிமா போன்று ‘கால்ஷீட்’ கொடுத்து அரசியல் நடத்த முடியாது. அது முழுநேர பணி. தனிமைக்கு இடம் கிடையாது. நம்மைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக அலைச்சல் அதிகமாக இருக்கும். அதற்கு உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும்.

எதிரிகள் மட்டுமின்றி, நண்பர்களும் துரோகம் செய்ய தயங்காத துறை அரசியல். நேற்றைய எதிரி இன்றைய நண்பன் ஆவான்; இன்றைய நண்பன் நாளைய எதிரி ஆவான். அதையெல்லாமல் எளிதாக ஜீரணிக்கக்கூடிய மனநிலைக்கு தயாராக வேண்டும்.

சினிமாவில் சாதித்த அவர், அரசியலிலும் நிச்சயம் சாதிப்பார் என்று அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் கருதுகிறார்கள்.

1975-ல் அபூர்வராகங்களில் தொடங்கி மூன்று முடிச்சு, 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் என்று சில படங்களில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து வந்த காலகட்டம் அது. இருவரும் வளர வளர அவர்களுடைய ரசிகர்கள் கூட்டமும் பெருகியது. இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெளியீட்டின் போது தியேட்டரில் கட் அவுட் வைப்பதில் தொடங்கி இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது.

ரஜினியும், கமலும் நண்பர்களாக இருந்தபோதிலும் ரசிகர்களுக்கு இடையேயான மோதலை அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இதனால் இருவரும் கலந்து பேசி, இனி இணைந்து நடிப்பது இல்லை என்று பரஸ்பரம் முடிவு செய்து கொண்டனர். தங்களுக்கென்று தனித்தனி பாணியை வகுத்துக்கொண்டு அந்த பாதையில் பயணித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் தில்லுமுல்லு. இந்த படம் 1981-ல் வெளியானது.

ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்திருந்த போதிலும், திரைத்துறையை பொறுத்தமட்டில் இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் போட்டியாளராகவே பார்க்கிறார்கள்.

நண்பர்கள் ஒத்துப்போவார்கள். அதற்காக அவர்களை நேசிக்கும் ரசிகர்களும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. தங்கள் நடிகர்தான் பெரியவர் என்ற எண்ணத்தை ரசிகன் ஒருபோதும் விட்டுக்கொடுப்பது இல்லை. இது உளவியல் ரீதியான பிரச்சினை.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்திலேயே இதுதான் நடந்தது.

சினிமா என்பது நிஜம் அல்ல; வெறும் நடிப்பு என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் ரசிகர்களின் போட்டி மனப்பான்மை, மோதல் போக்கு காரணமாக ரஜினியும், கமலும் சினிமாவிலேயே இணைந்து நடிக்க முடியாத நிலை இருக்கும் போது, அரசியலில் அவர்களால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? அதற்கு இரு தரப்பு ரசிகர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கொள்கையை சொல்லி ஓட்டுக்கேட்ட காலமெல்லாம் மலையேறிவிட்ட நிலையில் யாராவது ஒரு தலைவனை முன்னிறுத்தித்தான் மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும். இதற்கு முன்பெல்லாம் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிலைப்படுத்தித்தான் அந்தந்த கட்சியினர் பிரசாரம் செய்தனர். அந்த தலைவர்கள் மீதுள்ள நம்பிக்கையால் அவர்களை ஆட்சியில் அமர வைக்கத்தான் மக்களும் ஓட்டுப்போட்டனர்.

அந்த வகையில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்தால் யாரை முன்னிலைப்படுத்தி மக்களிடம் ஓட்டு கேட்பது என்பதில் இரு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே பிரச்சினை வரும்.

இருவரில் யாரை முதல்வர் ஆக்குவதற்காக அவர்களுடைய ரசிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்பார்கள்? ரஜினியை முதல்வராக்க கமல் ரசிகர்கள் வாக்கு கேட்பார்களா? கமலை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க ரஜினி ரசிகர்கள் பாடுபடுவார்களா?... சங்கடமான சூழ்நிலைதான்...

எப்போதும் ‘தலை’ ஒன்றுதான் இருக்கவேண்டும். இல்லையேல் கோஷ்டிகள், மோதல்கள்... என்று பிரச்சினைதான்.

ஒரே உறையில் இரு கத்திகள் இருப்பது சாத்தியம் அல்ல.

மேலும் கொள்கை ரீதியாக ரஜினியும், கமலும் மாறுபட்டவர்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ரஜினி. கமல் இதற்கு நேர் மாறானவர்.

அரசியல் களத்தில் இருவரும் கைகோர்க்கும் போது, இவற்றையெல்லாம் முன்வைத்து அவர்களை நோக்கி கேள்விக்கணைகள் வீசப்படும். அவற்றை சாமர்த்தியத்துடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை பெறவேண்டும்.

தமிழகத்துக்கு நல்லது செய்வதற்காக தோளோடு தோள் நின்று பணியாற்ற அவர்கள் விரும்புவது வரவேற்கத்தக்கதுதான்.

2021-ல் நிகழும் என்று ரஜினி சொல்லி இருக்கும் அதிசயத்தை அவரே நிகழ்த்துவாரா? அல்லது கமலுடன் சேர்ந்து நிகழ்த்துவாரா? அல்லது வேறு யாராவது நிகழ்த்துவார்களா? என்பதை தெரிந்துகொள்ள காத்திருப்போம்.

நல்லதே நடக்கட்டும்... தமிழகம் சிறக்கட்டும்...

Next Story