நடிகைகளின் கட்டழகு ரகசியம்: `இஷ்டத்துக்கு சாப்பிடு.. கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்..'


ஆலியா பட்;  வித்யா பாலன்;  பிரியங்கா சோப்ரா
x
ஆலியா பட்; வித்யா பாலன்; பிரியங்கா சோப்ரா
தினத்தந்தி 8 Dec 2019 8:43 AM GMT (Updated: 8 Dec 2019 8:43 AM GMT)

பிரபலமான நடிகைகள் சிலரை பார்க்கும்போது, ‘அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறார்கள்’ என்று சொல்லத்தோன்றும்.

அவர்கள் எப்போதும் கட்டழகுடன் திகழ, அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதுதான் முக்கிய காரணம். தங்கள் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் நடிகைகள் வெவ்வேறு விதமான உணவுமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

ஷில்பா ஷெட்டி: இ்ந்தி நடிகையான இவரை, இன்றைய இளம் நடிகைகள்கூட உற்றுப்பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இவரது உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது. திருமணமாகி, குழந்தைகளை பெற்றெடுத்தவர். அந்த குழந்தைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். ஆனாலும் தனது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, இப்போதும் உற்சாகமாக உலாவந்துகொண்டிருக்கிறார்.

“நான் என் இதயத்திற்கு எப்போதும் மகிழ்ச்சி அளித்துக்கொண்டு, முழுநேரமும் என்னை உற்சாகமாக வைத்துக்கொள் கிறேன். அதற்காக நான் ஆரோக்கியமான உணவினை உட்கொள்கிறேன். நாம் உணவினை நன்றாக மென்று சாப்பிட்டால் நமது இதயம் சந்தோஷமடையும். அப்போது மனதும், உடலும் ஆனந்தம்கொள்ளும். இனிப்பு பலகாரங்களை நான் விரும்பி சாப்பிடுவேன் என்ற உண்மையை நான் சொல்லும்போது பலரும், ‘அப்படி இருந்தும் உங்களால் எப்படி இவ்வளவு ‘பிட்’டாக இருக்க முடிகிறது?’ என்று கேட்கிறார்கள்.

நான் தினமும் 20 தடவை சூரிய நமஸ்காரம் செய்கிறேன். யோகாசனம் செய்கிறேன். அரை மணிநேரம் இதயத்திற்கு வலுசேர்க்கும் உடற் பயிற்சிகளை செய்கிறேன். அதன் மூலம் உடலில் சேரும் கலோரிகளை செலவிட்டுவிடுகிறேன்” என்று கூறும் ஷில்பாவுக்கு 44 வயது. இவர் தனது உடல் எடையை கட்டுக்குள்வைத்துக்கொள்ள ‘குடம்புளி பானம்’ ஒன்றை தயார் செய்து பருகுகிறார்.

அதன் செய்முறையை இங்கே தருகிறார்: குடம்புளி- நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி). இடித்த பூண்டு- அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய்- ஒன்று, தண்ணீர்- ஒரு கப், தேங்காய் பால்- அரை கப், ஐஸ்துண்டுகள் தேவைக்கு.

லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள். அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள். லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் ஐஸ்துண்டுகள், புதினா, மல்லித்தழை கலந்து பருகுங்கள்.

“இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பசி எடுக்காது. உடல் எடைகுறையும்” என்று தனது அனுபவத்தை ஷில்பா ஷெட்டி சொல்கிறார்.

வித்யா பாலன்: “எனது அம்மா தயார் செய்து தரும் தென்னிந்திய உணவில் எனது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. அதோடு அம்மா தரும் மசாலா டீயும் அதிக சுவைதரும். எப்போதாவது மெக்சிகன் உணவையும் விரும்பி சாப்பிடுவேன். நான் விழுந்து விழுந்து சாப்பிடும் ஆளில்லை. சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்பதற்காக இப்போது சாப்பிடுகிறேன்.

முன்பு தாய்லாந்து உணவு வகைகளை விரும்பிசாப்பிட்டேன். இப்போது பிரெஞ்சு நாட்டு உணவுகள் பிடித்தமானதாக இருக்கிறது. நான் தினமும் ஐந்து கப் மசாலா டீ பருகிவிடுகிறேன். தினமும் காலையில் ஒரு கப் டீ மற் றும் சில பிஸ்கெட் களுடன் என் நாள் தொடங்குகிறது. ஆனால் நான் தயாரிக்கும் டீ நன்றாக இருக்காது.

திருமணமான புதிதில் கணவர் சித்தார்த்துக்காக ஒரு கப் காபி தயாரித்துகொடுத்தேன். அவர் அதை பருகிவிட்டு, நன்றாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு என்னிடம் கொடுத்தார். நான் பருகிப்பார்த்துவிட்டு முகம்சுளித்தேன். அவரது நல்ல மனதுக்கு நன்றி கூறிவிட்டு அன்றே நான் காபி தயாரிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பின்பு இதுவரை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்த்ததில்லை” என்கிறார்.

பிரியங்கா சோப்ரா: ஹாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கும் இவரது ஆரோக்கிய ரகசியம் வித்தியாசமானது. ‘இஷ்டத்துக்கு சாப்பிடு.. கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்’ என்பது இவரது தாரக மந்திரம். “நான் பட்டினிகிடந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவள். பிடித்ததை எல்லாம் இஷ்டத்திற்கு சாப்பிட்டுவிட்டு பின்பு நன்றாக உடற்பயிற்சி செய்து கலோரிகளை செலவிடுவேன்.

தினமும் மதியம் சிக்கன் சாலட் சாப்பிடுவேன். இது எனது கணவர் நிக்ஜோனோசுக்கும் பிடிக்கும். தினமும் பத்து கப் தண்ணீர் பருகிவிடுவேன். அது எனது சரும அழகுக்கு துணைபுரிகிறது. எனது உடலில் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. நான் எவ்வளவு சாப்பிட்டாலும் எனது உடல் எடை அதிரடியாய் அதிகரிக்காது. இது எனக்கு இயற்கை அளித்த வரம். அதனால் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு கைப்பிடி ‘நட்ஸ்’களும், ஒரு கப் இளநீரும் பருகுவேன். வறுத்த, பொரித்த உணவுகளை நான் சாப் பிடுவதில்லை. பழங்களும், காய்கறிகளும் நிறைய எடுத்துக்கொள்வேன். காலையில் இரண்டு முட்டை வெள்ளைக்கரு, மதியம் இரண்டு ரொட்டியும், சாலட்டும், மாலையில் முளைவிட்ட பயறு, இரவில் கிரில்டு சிக்கன் சூப், மீன் போன்றவைகளை சாப்பிடுவேன்” என்று தனது உணவு ரகசியத்தை வெளிப் படுத்துகிறார்.

ஆலியா பட்: பாலிவுட்டின் தற்போதைய கனவுக்கன்னியான இவர் தனது உடல் அழகு மீது அதிக அக்கறை செலுத்துகிறார். தனது உணவுப்பட்டியலில் இல்லாத எந்த உணவுக்கும் இவர் தனது வாயை திறப்பதில்லை. “நான் சர்க்கரை சேர்க்காத ஒரு கப் டீயை பருகிக்கொண்டு எனது நாளை தொடங்குகிறேன். காலை உணவுக்கு முட்டை சான்ட்விச் சாப்பிடுவேன். மதிய உணவில் ரொட்டி, பயறு, சப்ஜி போன்றவைகளை சேர்த்துக்கொள்வேன். மாலையில் ஒரு கப் ப்ரூட் சாலட் கட்டாயம் எனக்கு தேவை. இரவில் எண்ணெய் சேர்க்காத சுட்ட ரொட்டி, பயறு, காய்கறி சாப்பிடுவேன். ஒரு கப் சாதமும் எடுத்துக்கொள்வேன்.

முன்பு நான் அசைவம் விரும்பி சாப்பிட்டேன். இப்போது சைவத்திற்கு மாறிவிட்டேன். சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க சைவ உணவுகள் துணைபுரிகின்றன. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றவும், சருமத்திற்கு பொலிவு தரவும் பீட்ரூட் ஜூஸ் சிறந்தது” என்று கூறும் இவர், பீட்ரூட் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்றும் சொல் கிறார்.

“பீட்ரூட் துண்டுகளை மிக்சியில் போட்டு அதில் நறுக்கிய இஞ்சி, சர்க்கரை, தண்ணீர் கலந்து ஜூஸ் ஆக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு கலந்து பருகவேண்டும்” என்கிறார்.

Next Story