மூளை சுறுசுறுப்புக்கு சுடோகு


மூளை சுறுசுறுப்புக்கு சுடோகு
x
தினத்தந்தி 9 Dec 2019 4:58 AM GMT (Updated: 9 Dec 2019 4:58 AM GMT)

தினசரி பத்திரிகைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான உள்ளூர், வெளியூர், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளும், புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

செய்திகளுக்கு அப்பால், தினமும் சில பொழுதுபோக்கு அம்சங்களும்  அவற்றுடன், இடம் பெறுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அத்தகைய அம்சங்களில் ஒன்று சுடோகு என்ற எண் புதிர். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச அளவில் இது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. தினமும் காலையில் செய்தித்தாள் வந்தவுடன் தலைப்பு செய்திகளைப் புரட்டிவிட்டு, நேராக சுடோகு புதிரை விடுவிக்க ஆரம்பிக்கும் தினசரி பத்திரிகை வாசகர்கள் பலர் இருக்கிறார்கள்.

பொதுவாக, சுடோகு புதிரில், ஒன்பதுக்கு ஒன்பது என்று மொத்தம் 81 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு நெடுக்கு அல்லது குறுக்கு வரிசையில் உள்ள ஒன்பது கட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களை நிரப்ப வேண்டும். இந்த எண்களை ஒரு வரிசையில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன எண் வரக்கூடும் என்பதை மிகத் துல்லியமாக முடிவு செய்து நிரப்ப வேண்டும். இதில் உள்ள 81 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு எண்ணை தவறாக நிரப்பினாலும், சுடோகு புதிரை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போய்விடும்.

ஜப்பானியர்கள் தான் கட்டங்களின் எண்களை நிரப்பும் இந்த புதிருக்கு “சுடோகு” என்ற பெயரைச் சூட்டினார்கள். இதற்கு ஒரு எண்ணை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துதல் என்று பொருள். 1984-ம் ஆண்டில், ஜப்பானில் அறிமுகமானது சுடோகு புதிர். நாளுக்கு நாள் ஜப்பானியர்கள் மத்தியில் பிரபலமடைந்து, இன்று உலகமெங்கும் புகழ் பெற்று உள்ளது. இன்று சர்வதேச அளவில் சுடோகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஜப்பானில் சுடோகு பத்திரிகைகள் மாதத்துக்கு ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன. காரணம், ஜப்பானியர்கள் வேலைக்கு செல்லவும், வீடு திரும்பவும் தினந்தோறும் ரெயில் மற்றும் பஸ்களில் ஓரிரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. எனவே, அவர்கள் பயணத்தின்போது பொழுது போக்காக சுடோகு புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மூழ்கிப்போகிறார்கள். சுடோகு ஒரு எண்ணை அடிப்படையாக கொண்ட ஒரு புதிர். எனவே இதற்கு தீர்வுகாண மொழி அறிவு அவசியமில்லை. சுடோகு உலக அளவில் பிரபலமாக விளங்குவதற்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.

1997-ம் ஆண்டு ஜப்பானுக்கு சுற்றுலா வந்த வானே கோல்டு என்ற நீதிபதிக்கு, சுடோகு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர்தான், சுடோகுவை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். 2004-ம் ஆண்டு லண்டன் டைம்ஸ் பத்திரிகை சுடோகு புதிர்களை வெளியிட ஆரம்பித்தது. அதே ஆண்டில் அமெரிக்காவில், சன் நாளிதழ் சுடோகு புதிர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே உலக அளவில் சுடோகுவிற்கு வரவேற்பு பெருகியது. 2006-ல், இத்தாலி நாட்டில் உலக சுடோகு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் சுடோகு உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுடோகு புதிர்களில் மிக மிக எளிமையானவையும் உண்டு. அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்வு காணக்கூடிய மிக, மிகக் கடினமான புதிர்களும் உண்டு. பொதுவாக, ஒரு சுடோகு புதிரின் கடினத்தன்மையை எடுத்துக்காட்ட நட்சத்திர குறியீடு. மிக எளிமையானவை என்றால் ஒரு ஸ்டார். அதைவிடக் கடினம் என்றால் 2 ஸ்டார். அதைவிடக் கடினமானவைகளுக்கு 3 ஸ்டார். அடுத்து 4 ஸ்டார். கடைசியாக 5 ஸ்டார். சில பத்திரிகைகளில் சுடோகு புதிர்களை எளிமையானவை, நடுத்தரமானவை, கடினமானவை என்று மூன்று வகைகளாக தரம் பிரித்து வெளியிடுவார்கள்.

சுடோகு விளையாடுவதற்கு வயது ஒரு தடை இல்லை. குழந்தைகளுக்கென்று மிக, மிக எளிமையான சுடோகு புதிர்களும் உண்டு. இவை, வழக்கமான 9-ஐ 9 கட்டங்களாக இல்லாமல் 4-ஐ 4 என்று பதினாறு கட்டங்கள் மட்டுமே கொண்டவை. இவற்றில் 1 முதல் 4 வரையிலான எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, வயது வித்தியாசமின்றி, எல்லா வயதினரும், சுடோகு புதிர்களுக்கு விடை காண முயற்சிக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், நாளடைவில், சுடோகு சூட்சுமங்கள் பிடிபட்டு, விடை கண்டுபிடிப்பது சுலபமாகி விடும்.

தினசரி பத்திரிகைகளில் சுடோகு புதிர்கள் தினமும் வெளியிடுகின்றன என்றாலும், சுடோகு புதிர்கள் கொண்ட புத்தகங்களும் ஏராளமாக வெளியிடப்படுகின்றன. இந்த புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றைத் தவிர சுடோகு புதிர்களுக்கென்றே பல பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. இந்த தளங்களுக்கு சென்று, நாம் விரும்பும் கடினத்தன்மைக்கு ஏற்ற வகையில் புதிர்களைத் தேர்ந்தெடுத்து, விளையாடலாம். அதற்கும் மேலாக, செல்போனிலே கூட சுடோகு விளையாட முடியும். இதற்கென்று பல செயலிகள் இருக்கின்றன. விருப்பமான செயலியைத் தேர்ந்தெடுத்து, தரவிறக்கம் செய்து, இஷ்டம்போல விளையாடலாம்.

சுடோகு விளையாடுவது வெறும் பொழுது போக்குதானா? இல்லவே இல்லை! இதனால் பல பயன்கள் உண்டு என்று சொல்கிறார்கள். முதலாவதாக, சுடோகு மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு எண் விளையாட்டு. எனவே, சுடோகு விளையாடுவதன் மூலமாக நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியும். தினமும் ஒரு சில சுடோகு புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதன் மூலமாக மூளையை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள முடியும். அதிக அளவில் புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்கும்போது, தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுடோகு விளையாடுவதை பழக்கமாக்கிக்கொண்டால், அல்சைமர் என்ற மறதி நோயின் தாக்குதல் வாய்ப்புகள் குறையும் என அமெரிக்க அல்சைமர் சங்கம், ஆராய்ச்சி பூர்வமாக கண்டுபிடித்துள்ளது.

- எஸ்.சந்திரமவுலி, எழுத்தாளர்.

Next Story