என்கவுண்ட்டர் உணர்த்துவது என்ன?


என்கவுண்ட்டர் உணர்த்துவது என்ன?
x
தினத்தந்தி 10 Dec 2019 6:12 AM GMT (Updated: 10 Dec 2019 6:12 AM GMT)

சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நிகழ்ந்த போலீஸ் என்கவுண்ட்டர் தொடர்பான செய்திகள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நிகழ்ந்த போலீஸ் என்கவுண்ட்டர் தொடர்பான செய்திகள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இளம் பெண் மருத்துவர் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு குற்றவாளிகளிடம் ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது தப்பிச் செல்ல முயற்சி செய்த அந்த நான்கு குற்றவாளிகள் மீது நடத்திய என்கவுண்ட்டர் பொது மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன.

அதே சமயம் போலீசாரின் என்கவுண்ட்டர் குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் என்கவுண்ட்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொலை செய்வது முறைதானா? என்ற கேள்வி பொது வெளியில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. குற்றம் செய்தவர்களைக் கண்டறிந்து அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது தான் புலன் விசாரணை செய்யும் போலீசாரின் கடமை. நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் படைத்த நீதிமன்றத்தை புறந்தள்ளிவிட்டு போலீசாரே தண்டனை வழங்குவது நம்நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்ற கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது.

குற்றச் செயல்களிலேயே மிகக் கொடூரமான குற்றமாகக் கருதப்படும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த குற்றவாளிகள் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி வருகின்ற நிலைதான் நம்நாட்டில் இருந்து வருகிறது என்பதைப் பலர் வருத்தத்துடன் வெளிப்படுத்தும் போது 2012-ம் ஆண்டில் டெல்லியில் நிகழ்ந்த ‘நிர்பயா’ பாலியல் பலாத்கார கொலை வழக்கை நினைவுபடுத்துகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு சட்ட நடைமுறை காரணங்களால் இது நாள்வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் காலம் கடத்திவருவது நம்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் ‘நீதி வழங்கும் முறை’ மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள உன்னாவ் மாவட்டத்தில் கொடூரமான மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்ததும் தன் மீது புகார் கொடுத்த இளம்பெண் மீது தீ வைத்து கொலை செய்துள்ளான். ‘என் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தும் புகார் கொடுத்ததற்காக அவள் மீது தீ வைத்து கொலை செய்த குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் செய்தது போன்று என்கவுண்ட்டர் நடத்தி கொல்ல வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த மாநில அரசாங்கத்திடம் வைத்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி சிந்திக்கவும் செய்துள்ளது.

கொடுங்குற்றங்கள் செய்த குற்றவாளிகள் மீது என்கவுண்ட்டர் நடத்தினால் அச்செய்கையானது மற்ற குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை கலந்த பயத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து போலீசாரிடம் நிலவுகிறது. 2010-ம் ஆண்டில் கோவை நகரில் பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் மீது என்கவுண்ட்டர் நடத்தியதும் பொதுமக்களிடத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. இது போன்ற என்கவுண்ட்டர்கள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன? இதனால் கொடுங்குற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பெருமளவில் குறைந்துவிடுகிறதா? போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களைத் தேடும் முயற்சி கள நிலவரத்தை வெளிப்படுத்துகிறது.

தேசியக் குற்ற ஆவணக்கூடம் நடத்திய ஆய்வின்படி 2017-ம் ஆண்டில் கொலை, பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை அமிலம் வீசுதல், கடத்திச் செல்லுதல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 3,59,849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 32,559 வழக்குகள் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளாகும். இந்த புள்ளி விவரப்படி நாள் ஒன்றுக்கு 90 பாலியல் பலாத்கார வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகின்றன. 2012-ம் ஆண்டில் தேசியக் குற்ற ஆவணக்கூடம் நடத்திய ஆய்வின்படி 24,923 பாலியல் பலாத்கார வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளில் 7,636 பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்துள்ளன. போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களால் பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுங்குற்றங்களின் எண்ணிக்கை குறைவதில்லை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் பாலியல் பலாத்காரச் செயல்கள் சமுதாயத்தில் அச்சத்தையும், பாதுகாப்பு இல்லாத சூழலையும் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பரிபாலனம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களையும் ஏற்படுத்துகிறது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிப்பதற்காக பல சமயங்களில் போலீசார் என்கவுண்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்துவதும் உண்டு. துப்பாக்கி மீது பாசம் கொண்ட ஒரு சில போலீஸ் அதிகாரிகளாலும் என்கவுண்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதும் உண்டு.

1973-ம் ஆண்டில் 44 சதவீத பாலியல் பலாத்கார வழக்குகள் இந்தியாவில் தண்டனையில் முடிவடைந்துள்ளன. இந்த தண்டனைச் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 1983-ம் ஆண்டில் 38 சதவீதமாகவும் 2010-ம் ஆண்டில் 27 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் உணர்த்துவது என்ன? பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நடத்தப்படும் புலன்விசாரணையின் தரம் குறைந்துவருவதும் அதன் காரணமாக பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைவதும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை பல்வேறு நிர்வாகக் காரணங்களால் இதுநாள் வரை நிறைவேற்ற முடியாமல் இருப்பது சட்டத்திலுள்ள ஓட்டையைக் கண்டுபிடித்து தண்டனையிலிருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற தைரியத்தைக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கிறது. நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள் விசாரணையும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது காலதாமதம் இன்றி நிகழ்வதும் குற்றங்களைக் குறைக்கப் பெரிதும் துணை புரியும்.

பெருமளவிலான இளைஞர்கள் மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்ட நிலையில் இன்றைய நம் சமுதாயம் பயணித்து வருகிறது. மதுவும், போதை பொருட்களும் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை; கொடுங்குற்றங்கள் பல நிகழவும் அவை காரணமாக இருந்து வருகிறது என்பதை நாம் உணரத்தவறி வருகிறோம். இன்றைய கல்விமுறையில் மதிப்பெண்கள் எடுப்பதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது; ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதும் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது. ஐதராபாத் என்கவுண்ட்டர் மற்றும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.காவல்துறை முன்னாள் தலைவர், சென்னை.

Next Story