தடுப்பணையா? நீர்வழிச்சாலையா?


தடுப்பணையா? நீர்வழிச்சாலையா?
x
தினத்தந்தி 11 Dec 2019 6:05 AM GMT (Updated: 11 Dec 2019 6:05 AM GMT)

தென் தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ற்போது தமிழகத்தில் நல்ல மழை பெய்து உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் தாமிரபரணி ஆற்றில் ஏராளமான தண்ணீர் கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றது. அதேபோல வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் ஏராளமான தண்ணீர் கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு கடலுக்கு செல்லும் தண்ணீரை தேக்குவதற்கு விவசாயிகள் அரசியல் தலைவர்கள் என பலரும் தடுப்பணைகள் கட்டுவதை தீர்வாக முன்மொழிகிறார்கள். தமிழக அரசு கூட ரூ.1,000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்போவதாக அறிவித்துள்ளது.

ஆனால், தடுப்பணைகள் கட்டினால் குறைந்த அளவு தண்ணீரையே நம்மால் தேக்க முடியும். மேலும் தடுப்பணைகள் என்பது தற்காலிக தீர்வாகவே இருக்கும். நவீன நீர்வழிச் சாலை திட்டம் மூலம் தேக்கும் நீரில் கால் பங்கு நீரைக் கூட தேக்க முடியாது. மேலும் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது. ஏனென்றால், எந்த ஆற்றிலும் வெள்ளம் வரும் போது மட்டும் ஏராளமான தண்ணீர் வரும். உதாரணமாக கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் 3 மாதத்தில் மட்டும் சுமார் 180 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இவ்வளவு நீரையும் தடுப்பணைகள் மூலம் தேக்க முடியாது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்ட பல்வேறு தடுப்பணைகள் பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் தடுப்பணைக்கு பலன் கிடைக்கும். நவீன நீர்வழிச் சாலை திட்டம் மட்டுமே எந்த ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதனைத் தேக்கி வறண்ட ஆற்றுக்கு திருப்பி விடுகிறது. இதன் மூலம் அனைத்து ஆறுகளும் ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடன் ஜீவ நதிகளாக மாறும்.

அதோடு நமது தண்ணீர் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே குறுகிய காலத்தில் நமக்கு கிடைக்கும் பெருவெள்ளத்தை நாம் தேக்கி உபயோகித்திட நவீன நீர்வழிச் சாலை போன்ற நீண்ட கால தொலைநோக்கு திட்டங்கள் தேவை.

தமிழக அரசு தடுப்பணைக்கு ரூ.1,000 கோடி செலவு செய்ய வேண்டியதில்லை. நவீன நீர்வழிச் சாலை திட்டத்திற்கு ரூ.500 கோடி செலவு செய்தாலே போதும். ஏனென்றால், திட்டத்தை ஆய்வு செய்து அனுப்பினால் மத்திய அரசு தேசிய திட்டமாக அறிவித்து 90 சதவீத நிதியை மானியமாக வழங்க தயாராக உள்ளது. மேலும் இத்திட்டத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதால் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வார்கள். எனவே மாநில அரசு இத்திட்டத்தினை “ஜீரோ பட்ஜெட்டில்” நிறைவேற்றிவிட முடியும். அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் கொடுத்திடலாம்.

தமிழகம் முழுவதும் அனைத்து ஆறுகளில் இருந்தும் ஆண்டுக்கு 177 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு செல்கிறது என பொதுப்பணித்துறை கூறியுள்ளது. நவீன நீர்வழிச் சாலை திட்டத்தால் மட்டுமே இத்தண்ணீர் முழுவதையும் தேக்க முடியும்.

மத்திய நீர்பாசன துறை மந்திரியும் தமிழ்நாடு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் “ஜீரோ டே” விரைவில் வரும் என எச்சரித்துள்ளார். தமிழ்நாடு நீர்வழிச் சாலை திட்டம் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் நவீன நீர்வழிச் சாலை அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதாக கூறும் நமது முதல்-அமைச்சர் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தலாமே!

ஏ.சி.காமராஜ், மத்திய அரசின் நதிநீர் இணைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர்.

Next Story