வானவில்: இந்தியாவில் நுழையும் சீன கார் தயாரிப்பு நிறுவனம்


வானவில்: இந்தியாவில் நுழையும் சீன கார் தயாரிப்பு நிறுவனம்
x
தினத்தந்தி 11 Dec 2019 9:45 AM GMT (Updated: 11 Dec 2019 9:45 AM GMT)

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் தேக்க நிலை நிலவுவதாக இத்துறையினர் கூறிவந்தாலும், நிலைமை மாறி பழையபடி விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது தயாரிப்புகளுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறது சீன நிறுவனங்கள். ஏற்கனவே சீனாவின் எம்.ஜி. மோட்டார் (சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி. குழுமத்தின் அங்கம்) இந்தியாவில் உற்பத்தியை தொடங்கி காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் போலவே மற்றொரு சீன நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்திய சந்தையில் காட்சிப்படுத்த உள்ளது.

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது காரை காட்சிப்படுத்துகிறது எப்.ஏ.டபிள்யூ. ஹைமா ஆட்டோமொபைல்ஸ். சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் நிறுவனம் ஏற்கனவே கண்காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

ஹைமா நிறுவனம் 1988-ம் ஆண்டு உருவானதாகும். சீனாவின் ஹைனன் மாகாணத்தில் இந்த ஆலை முதலில் அமைந்தது.

தொடக்கத்தில் ஜப்பானின் மாஸ்டா கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துவந்தது. மாகாணத்தின் பெயர், மாஸ்டா தயாரிப்பு ஆகியவற்றோடு இணைத்து ‘ஹைமா’ என்ற பெயர் இந்நிறுவனத்துக்கு வந்தது. தொடக்கத்தில் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் கார்களைத் தயாரித்து வந்தது இந்நிறுவனம். பிறகு சொந்த தொழில்நுட்பத்தில் கார்களைத் தயாரிக்கத் தொடங்கியது. எஸ்.யு.வி., எம்.பி.வி. மாடல்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் முதல் கட்டமாக நடுத்தர ரக எஸ்.யு.வி. மாடலான ‘ஹைமா 8எஸ்’ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த கார் 1.6 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இது 193 ஹெச்.பி. திறனை 293 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஸ்டார்ட் செய்து 8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி விடும்.

Next Story