உலக நாடுகளில் சிந்துவெளி தமிழ் எழுத்துச் சான்றுகள்


உலக நாடுகளில் சிந்துவெளி தமிழ் எழுத்துச் சான்றுகள்
x
தினத்தந்தி 13 Dec 2019 5:55 AM GMT (Updated: 13 Dec 2019 5:55 AM GMT)

சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பழைய திராவிட மொழியாகத் தான் இருக்கும் என்று பெரும்பான்மையான உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பழைய திராவிட மொழியாகத் தான் இருக்கும் என்று பெரும்பான்மையான உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள். சிந்துவெளி முத்திரை எழுத்தமைதிகளைக் கணிப்பொறியில் இட்டு சொற்கட்டு ஆராய்ச்சி செய்த சோவியத் அறிஞர்கள் அம்மொழி தமிழ் இலக்கணப் பாங்குக்கு ஒப்பாக இருப்பதைக் கண்டறிந்தனர். ஆதலால் சிந்துவெளி எழுத்தை இரண்டாம் தமிழ்ச்சங்க எழுத்து என்பதே முற்றிலும் பொருந்தும்.

கீழடி ஆதிச்சநல்லூர் முதல் ஆப்கானிஸ்தான் வரையிலும் சிந்துவெளி எழுத்துச் சான்றுகள் கிடைத்தன. இந்தியாவில் கிடைத்தவற்றை முதல் தொகுப்பாகவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிடைத்தவற்றை இரண்டாம் தொகுப்பாகவும், சுமேரியா, பாபிலோனியா போன்ற பிற நாடுகளில் கிடைத்தவற்றை மூன்றாம் தொகுப்பாகவும், பின்லாந்து அறிஞர் அசுகோபர்போலா வெளியிட்டார். இதுவல்லாமல் ரிச்சர்டு கேப்பிரியல் என்பவர் எகிப்து பிரமிடு ஒன்றின் முகப்பில் உள்ள சிந்துவெளி எழுத்து பெயர்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். அது கந்தன் எனப் படிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி சிந்துவெளி எழுத்தில் தீவுகோ என எழுதப்பட்ட வெண்கல முத்திரையை பேராசிரியர் இந்திரபாலா (1981) கண்டுபிடித்தார். இந்தோனேசியாவில் கிடைத்த சிந்துவெளி எழுத்துச் சான்றை அறிஞர் ஐ.மகாதேவன் (2007) வெளியிட்டார். ஜோர்டான் நாட்டு கிர்பத் அத்ருஜா என்னும் இடத்தில் கிடைத்த சிந்துவெளி எழுத்துச்சான்று கி.மு.800 ஆண்டைச் சார்ந்தது எனக் கண்டறியப்பட்டது.

கிழக்கிந்திய பசிபிக்கடலில் உள்ள ஈச்டர் தீவில் மரத்தில் செதுக்கப்பட்ட ரங்கோ ரங்கோ எனப் பெயரிடப்பட்ட எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளே என போலந்து நாட்டு அறிஞர் பெனன் ஜாலக் (1981) கண்டறிந்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். கிரேக்க நாட்டில் டிசிபிலிஸ் அகழ்வாராய்ச்சியில் மரத்தட்டில் சிந்துவெளி எழுத்துகள் எழுதப்பட்டிருப்பதை அங்கேரிநாட்டு அறிஞர் சோப்பியா கண்டறிந்தார். அதன் காலம் கி.மு.5620 என்றார். கிழக்கு ஐரோப்பாவில் பல்கேரியா, ருமேனியா நாட்டு வழியாக ஓடும் டான்யுப் ஆற்றுப்பகுதியில் பெல்கிரேடு நகருக்கு 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வின்சாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கி.மு.5000 முதல் கி.மு.6000 காலத்திற்குரிய சிந்துவெளி நாகரிகப் புதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் சிந்துவெளி எழுத்துகளும் இருந்தன. கிழக்கு ஈராக்கில் நிலவிய எலாமி மக்கள் பயன்படுத்திய எலாமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளோடு ஒப்புமை உடையன என்று மக்ஆல்பின் எனும் அறிஞர் வெளிப்படுத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கிழக்கு ஐரோப்பா வரை சிந்துவெளி எழுத்து கிடைத்திருப்பது அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியது. உலகத் தொன்முது நாகரிகங்களில் எந்த நாட்டு நாகரிகமும் சிந்துவெளி நாகரிகம் போல் கடல் கடந்து, பல்வேறு நாட்டு எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய பரப்பில் பரவியதை வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கண்டதில்லை. மேற்கில் எகிப்து முதல் கிழக்கில் பசிபிக்கடலில் உள்ள ஈச்டர் தீவு வரையிலும், வடக்கில் கிரேக்கம், டான்யுப் ஆற்று வின்சா நாகரிகம் முதல், தெற்கில் இந்தோனேசியா வரையிலும் சிந்துவெளி நாகரிகத்தின் வீச்சு பரவி இருப்பது உறுதிஆயிற்று. தமிழன் போகாமல் எழுத்து மட்டும் மிகப்பெரிய உலகப்பரப்பில் பரவி இருக்க முடியாது. எனவே உலக வரலாற்று ஆசிரியர்கள் உலகளாவிய பாட நூல்களில் இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக இந்திய நாட்டுப் பாடநூல்களில் முதல் இடம் பெறவேண்டும். இவை இன்றைய அடிப்படைத் தேவைகளாகும். இது பழம் பெருமை பேசுவது ஆகாது. மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்கு உலக அறிஞர்களும், உலகத் தமிழர்களும் இப்பெருமுயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பேராசிரியர் இரா. மதிவாணன், இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை.

Next Story