நடப்பு 2019-ஆம் ஆண்டில் இதுவரை தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்கி நிறுவனங்கள் திரட்டிய நிதி ரூ.35,238 கோடி


நடப்பு 2019-ஆம் ஆண்டில் இதுவரை தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்கி நிறுவனங்கள் திரட்டிய நிதி ரூ.35,238 கோடி
x
தினத்தந்தி 13 Dec 2019 11:10 AM GMT (Updated: 13 Dec 2019 11:10 AM GMT)

கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் 53 பங்கு ஒதுக்கீடுகள் மூலம் ரூ.67,257 கோடி திரட்டப்பட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் அது சுமார் 8 மடங்கு அதிகமாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) பங்குகள் ஒதுக்கி நிறுவனங்கள் ரூ.10,500 கோடி மட்டுமே திரட்டி இருக்கின்றன. இது 84 சதவீத சரிவாகும்...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு 2019-ஆம் ஆண்டில் இதுவரை தனிப்பட்ட முறையில் பங்குகள் ஒதுக்கி வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ரூ.35,238 கோடி நிதி திரட்டி உள்ளன.

முக்கிய வழிமுறை

பங்குச்சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம் இரண்டாவது பொது பங்கு வெளியீட்டில் களம் இறங்க விரும்பாதபோது வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி நிதி திரட்டுகிறது. மூலதன சந்தையில் இது ஒரு முக்கிய வழிமுறையாக உள்ளது.

பொதுப்பங்கு வெளியீடுகளுடன் ஒப்பிடும்போது இவ்வகை ஒதுக்கீடுகளுக்கான விதிமுறைகள் எளிமையாக உள்ளன. எனவே எளிதாகவும், துரிதமாகவும் நிதி திரட்ட விரும்பும் நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த வழிமுறையை நாடுகின்றன.

இவ்வாறு திரட்டும் தொகையை நிறுவனங்கள் தமது நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், விரிவாக்கத்திற்காகவும், பழைய கடன்களை அடைப்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

வங்கிகள், நிறுவனங்கள்

2019-ஆம் ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையிலான காலத்தில் பங்கு ஒதுக்கீடு மூலம் வங்கிகளும், நிறுவனங்களும் மொத்தம் ரூ.35,238 கோடி நிதி திரட்டி உள்ளன. 2018 முழு ஆண்டில் இந்த வழியில் திரட்டப்பட்ட மொத்த நிதியைக் காட்டிலும் இது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் வங்கி

கணக்கீட்டுக் காலத்தில் நிதிச் சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் பங்கு ஒதுக்கீட்டு நடவடிக்கைகளில் அதிகம் இறங்கி உள்ளன. இதில் ஆக்சிஸ் வங்கி, லட்சுமி விலாஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், ஆர்.பீ.எல். பேங்க் போன்றவை அடங்கும். ஆக்சிஸ் வங்கி ரூ.12,500 கோடியும், பஜாஜ் பைனான்ஸ் ரூ.8,500 கோடியும் திரட்டின. இம்மாத தொடக்கத்தில் ஆர்.பீ.எல். வங்கி ரூ.2,025 கோடி திரட்டியது.

திரட்டிய நிதி

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த வழிமுறையில் ரூ.1.20 லட்சம் கோடி வரை நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக பொதுத்துறையைச் சேர்ந்த வங்கிகள் விறுவிறுப்புடன் செயலாற்றும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் 53 பங்கு ஒதுக்கீடுகள் மூலம் ரூ.67,257 கோடி திரட்டப்பட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் அது சுமார் 8 மடங்கு அதிகமாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) பங்குகள் ஒதுக்கி நிறுவனங்கள் ரூ.10,500 கோடி மட்டுமே திரட்டி இருக்கின்றன. இது 84 சதவீத சரிவாகும்.

கடன்பத்திரங்கள்

நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பல்வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. இந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்குவது போல், கடன்பத்திரங்கள் ஒதுக்கி நிதி திரட்டுவதும் முக்கிய வழிமுறையாக உள்ளது. பங்குகளைப் போல் அபாயம் இல்லை என்பதால் கடன்பத்திர வெளியீடுகளில் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்க முடிகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story