மனிதனின் விண்வெளி ஆசைகள்


மனிதனின் விண்வெளி ஆசைகள்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:35 AM GMT (Updated: 13 Dec 2019 11:35 AM GMT)

மனிதனின் விண்வெளி சிந்தனை பற்றிய வரலாற்றை அறிய முடியாது. மனிதன் தோன்றி அண்ணாந்து பார்த்தது முதல் அவன் விண்வெளியைப் பற்றியும், அங்கு மின்னுவது என்ன? என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் விண்ணில் தோன்றும் பொருட்களை கூர்ந்து கவனித்து பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டான். எழுத்துகளாகவும், படங்களாகவும் சில குறிப்புகளை எழுதிவைத்தான்.

நிலவு, சூரியன் பற்றி அவன் கொஞ்சம் அதிகமாக அறிந்து கொண்டான். விண்வெளியில் மினுங்கும் நட்சத்திரங்கள் பற்றி தொலைநோக்கி பயன்பாட்டிற்கு முன்பு மனிதன் அவ்வளவாக அறியவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட வடிவத்தில், திசையில் தோன்றும் நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள் பற்றி கணித்து வைத்திருந்தான்.

தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மனிதனின் விண்வெளி சிந்தனை விரிவடைந்தது. பல தேடல்களுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது. அதுவரை பார்க்காத பல விண்வெளி ரகசியங்களை பார்த்து அறிந்து கொண்டான்.

மனிதனின் விண்வெளி பயணம் 1957-ல் தொடங்கியது. அப்போது முதல் செயற்கை கோளை பறக்கவிட்டான். மனிதன் விண்வெளியில் உயிருடன் பயணிக்க முடியுமா? என்பதை லைகா எனும் நாயை விண்வெளிக்கு அனுப்பி சோதித்து அறிந்தான். பின்னர் மனிதனே பாதுகாப்பு கவசங்களுடன் விண் வெளிக்கு சென்று திரும்பினான்.

இப்போது ஆயிரக்கணக்கான செயற்கை கோள்களும், விண்கலங்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுவிட்டன. மனிதனும் பலமுறை விண்வெளி சென்று திரும்பியிருக்கிறான். விண்வெளி பயணத்தின் மைல்கல் சாதனைகளாக பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறான். சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக் கிறான்.

இருந்தாலும் விண்வெளி தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்கள் இன்னும் மனிதனை வியப்படையவே செய்து கொண்டிருக்கின்றன. விண்வெளி என்பது ஈர்ப்புவிசையற்ற வெற்றிடம். அங்கு கோள்களும், நட்சத்திரங்களும், பாறைகளும், பல பருப்பொருட்களும் மிதந்து கொண்டிருக்கின்றன.

விண்வெளி வெற்றிடமாகவும், காற்று போன்ற ஊடகம் இல்லாததாலும் அங்கு காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதில்லை. நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒளிக்கதிர்களை காணலாம். மற்ற இடங்கள் இருட்டாகவே காட்சியளிக்கும். அந்த இருளில் நடக்கும் பல அதிசயங்கள் இன்னும் மனிதன் அறிந்து கொள்ளாதவை.

விண்வெளியில் ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து பூமியையும், பூமிக்கு வரும் விண்வெளி தகவல்களையும், மற்ற கிரகங்கள், நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளையும் ஆராய்ந்து வருகிறோம். நிலவில் கால்பதித்திருக்கிறோம். செவ்வாயில் ஆய்வுக் கலங்களை இறக்கியிருக்கிறோம். சூரிய குடும்பத்தின் கடைசி எல்லை வரை செயற்கை கோளை அனுப்பி சாதித்திருக்கிறோம்.

மனிதனின் முக்கியமான விண்வெளி ஆசைகளில் குறிப்பிடத்தக்கது, பூமியைப்போன்ற மற்றொரு கிரகத்தை தேடி அதில் குடியேறுவது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகம் பற்றி பல்வேறு உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அதில் குடியேற்றங்களை நிறுவுவது விண்வெளி ஆய்வாளர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. இதில் பல நாடுகளுக்கு இடையே போட்டியும் உள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள்கூட விண்வெளி ஆய்வுப் போட்டிகளில் பங்கெடுக்கின்றன.

ஆனால் விண்வெளி குடியேற்றம் அவ்வளவு எளிதானதல்ல? என்பது விஞ்ஞானிகள் அறிந்ததுதான். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விஞ்ஞானிகளின் உடலில் ஏற்படும் வினோத மாற்றங்களை சமாளிப்பதில்கூட பல்வேறு சவால்கள் இருக்கின்றன.

சர்வதேச விண்வெளி மையத்தில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரியனை பார்க்க முடிகிறது. அதனால் அவர்களின் தூக்கம் மற்றும் அன்றாட செயல்களில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. இரட்டையர்களில் ஒரு விஞ்ஞானியை விண்வெளியில் தங்கச் செய்து மற்ற ஒருவரை பூமியில் இருக்கச் செய்து ஆய்வு செய்தபோது அவர்களின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எனவே விண்வெளி வாழ்க்கையானது இதயத்துடிப்பு, உடற்கூறு, மரபணு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மனிதனின் விண்வெளி வாழ்க்கை, அவனை மாற்றியமைக்குமே தவிர தனக்கேற்றபடி விண் வெளியை மாற்றி வாழ முடியாது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அங்குள்ள ஈர்ப்புவிசை மாற்றங்கள் மற்றும் கதிர்வீச்சுகளே இதற்கு காரணமாகும்.

விண்வெளியில் ஆடை மாற்றுவது, கழிவறை பயன்படுத்துவது உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் சவால் உள்ளது. சமையல் செய்ய விரும்பி உப்பு, மிளகு போன்றவற்றை அள்ளித் தூவ நினைத்தால் அவை வெற்றிடத்தில் மிதந்து கண்ணின் உள்ளோ, மூக்கின் உள்ளோ நுழையலாம். கவச உடை அணிந்திருந்தால் தப்பிக்கலாம்.

விண்வெளியில் நிலவும் காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பு மனிதனை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவு இன்னும் கிடைக்கவில்லை.

மனிதனின் விண்வெளி ஆசை இதுவரையில் சர்வதேச விண்வெளி மையத்தில் அதாவது சுற்றிலும் பூமிபோல கவசம் ஏற்படுத்தப்பட்ட விண்வெளி கூண்டிற்குள்தான் சாத்தியமாகி இருக்கிறது. அதிலும் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன. இப்போது ஈர்ப்புவிசை ஏற்படுத்தப்பட்ட அறையில் மட்டும் அவர்களால் உலவவும், சமைத்து சாப்பிடவும் முடிகிறது அதைத் தாண்டிய விண்வெளியில் மனிதனின் செயல்பாடு வெற்றிகரமாக இல்லை. ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும், ஒரு தனியார் நிறுவனமும், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிகளை தீவிரமாக்கி வருகின்றன. அவர்களின் ஆராய்ச்சியும், மனிதனின் விண்வெளி வாழ்க்கை கனவும் நிறைவேற நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதுவரை விண்வெளி புதிர்கள் விரிவடையும்..!

Next Story