மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் இந்தியாவில் அமையுமா?


மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் இந்தியாவில் அமையுமா?
x
தினத்தந்தி 15 Dec 2019 6:18 AM GMT (Updated: 15 Dec 2019 6:18 AM GMT)

உயர்கல்வியில் மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் என்பது ஒரு புதுமையான கல்வித்திட்டமாகும்.

யர்கல்வியில் மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் என்பது ஒரு புதுமையான கல்வித்திட்டமாகும். கப்பல் பயண வாயிலாக உயர்கல்வி பயில கப்பலில் நடைபெறும் மிதவை பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ந்தது. இது ஏற்கனவே உலக நாடுகளில் சோதனை அடிப்படையில் திட்டமிடப்பட்டு இன்று வரை செயல்படாத நிலையில் உள்ளது.

கல்வி அமைப்பில் தோன்றும் புதிய கருத்துகள், புதிய செயல்கள், புதிய சூழல்கள், புதிய வளர்ச்சிகள், புதிய பார்வைகள் என்றும் நம் மக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன. கல்வி முறை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. இதில் புதுமைகளைப் புகுத்தி மாற்றங்களை விளைவிக்க எப்போதுமே வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் பிற யதார்த்தங்களும் கல்வி முறையில் மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. பழங்காலத்தில் கல்வியானது வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டு, பிறகு குருகுலக் கல்வியும், அதனை அடுத்துச் சமுதாயப் பின்னணியில் உண்டான பள்ளிகளும் தோன்றின. கால மாற்றத்திற்கு ஏற்ப சில புதுமைகளைக் கல்வியில் புகுத்தி எல்லோரையும் அறியாமையிலிருந்து அகற்றி அறிவுவொளி வீசச்செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பற்பல வியத்தகு புதுமைகளை கல்வியில் புகுத்தி, கல்வியை வளர்த்து இன்றளவும் கல்விச் சிந்தனையாளர்கள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உடல் வளர்ச்சியும், உள்ள வளர்ச்சியும் கல்வியின் அடிப்படையாகும். நல்ல குடிமைப்பண்பை வளர்ப்பதும் கல்வியின் அடிப்படைத் தத்துவமாகும். மாணவர்களிடம் பொதிந்துள்ள அனைத்துத் திறன்களும் வெளிப்படக் கல்வி உதவ வேண்டும் என்று அரவிந்தர் கூறுகிறார். கல்வி பாடத்திட்டங்களும் ஆசிரியரின் கற்பித்தல் முறையும் மாணவர்களின் உளவியலை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இந்தியக் கல்வியாளர்களின் கல்விச் சித்தாந்தங்கள் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

அரவிந்தர் எல்லைச் சுவர்கள் இல்லாத கல்வித்திட்டத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு நாட்டினருக்கும் தனித்தனியாகக் கல்வித்திட்டம் தேவையற்றது. அனைத்து நாட்டினருக்கும் பொதுவான கல்வித்திட்டம் தேவை. ஏனெனில் மக்கள் அனைவரும் ஒன்றே. மக்களின் தேவைகள், கல்வியறிவு அனைத்தும் ஒன்றே. தற்போதைய சூழ்நிலையில் எல்லைச் சுவர்கள் இல்லாத கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் மட்டுமே வழங்க முடியும், பல்கலைக்கழகம் என்பது உயர்கல்வியை வழங்கவும் தரமான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பயன்களை சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் ஒர் உயர்கல்வி நிலையமாகும். இந்த உயர்கல்வி மருத்துவம் சட்டம், பொறியியல், அறிவியல், கலை உள்ளிட்ட பல துறைகளில் வேலை செய்ய அடிப்படை அறிவாகக் கருதப்படுகிறது.

உலக அளவில் உயர் கல்வியில் ஒரே பாடத்திட்டம் என்ற அடிப்படையில் மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கப்பல் பயண வாயிலாக உலக நாடுகளில் வலம் வந்து உலக நாடுகள் அனைத்திலும் உயர் கல்வியில்; மருத்துவம், சட்டம், பொறியியல், கலை, தொழில்நுட்பம், போன்ற படிப்புகளை படித்து பட்டம் பெற மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் துணைபுரியும். மிதவைக் கப்பல் பல்கலைக்கழகங்களில் புகழ் பெற்றது எஸ்.எஸ்.யுனிவர்ஸ் மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம், வெர்ஜினியா மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் ஆகும். மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட கப்பல் தளப் பல்கலைக்கழகம் எஸ்.எஸ்.யூனிவர்ஸ் என்னும் பெயர் கொண்டதாகும். இது ஒர் ஊக்கந்தரும் முயற்சியாகும். இதில் உள்ள மாணவ-மாணவியர்கள் அமெரிக்காவில் பல்வேறு கல்லூரிகளையும், பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்தவர்கள். பல்வேறு நாட்டு துறைமுகப் பட்டினங்களுக்குச் சென்று தங்கள் பட்டறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.

1978-ம் ஆண்டில் எஸ்.எஸ்.யுனிவர்ஸ் சென்னை வந்த போது அதில் 461 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர். தம் பயண ஏற்பாட்டில் அவர்கள் 10 நாடுகளில் 13 துறைமுக நகரங்களை அடைந்து 100 நாட்கள் பயணம் செய்து “கடலில் செமஸ்டர்” எனும் கல்வித்திட்டத்தில் பயின்றனர். அவர்களுடன் பயணம் செய்த ஏறத்தாழ 70 ஆசிரியர்கள் தம் குடும்பத்தினருடன் அந்த கப்பலில் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜினியா மிதவைக் கப்பல் பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 635 மாணவ, மாணவியர் உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த 731 பேர் படித்தனர். பேராசிரியர்கள் 30 பேரும், கப்பல் சிப்பந்திகள் 197 பேரும் அந்த கப்பலில் இருந்தனர். 10.10.2007-ந் தேதி சிங்கப்பூரில் ஆய்வு மேற்கொண்ட பின் 15.10.2007 காலை சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். ஏழு மாடி கொண்ட இக்கப்பலில், பல்கலைக்கழகங்களில் உள்ளது போல 9 வகுப்பறைகள், 943 ஓய்வறைகள், விளையாட்டுக் கூடம், நீச்சல் குளம், லிப்ட் வசதி மற்றும் கம்ப்யூட்டர் லேப் வசதியும் இருந்தன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த மிதவைக் கப்பல் பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இல்லை. நம் இந்தியாவில் இந்த மிதவைக் கப்பல் பல்கலைக்கழக திட்டத்தை அறிமுகப்படுத்தினால், உலக அளவில் நம் இந்தியாவின் மதிப்பு உயரும். வளர்ந்து வரும் உலகில் அறிவுத் துறைகள் அனைத்தையும் தன்னுள் கொண்டதாக இந்த மிதவைக் கப்பல் பல்கலைக்கழகத்தை உருவாக்கினால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் ஒரே பாடத்திட்ட அடிப்படையில் உயர்கல்வி பெற உலக அளவில் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும், இத்திட்டத்தை செயல்படுத்த கல்வியாளர்களின் சிறந்த ஆலோசனைகளை பெற்று செயல்படுத்த நம் மத்திய அரசு முன்வரவேண்டும்.

மகா.பாலசுப்பிரமணியன், துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story