சிறப்புக் கட்டுரைகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யார்? + "||" + Citizenship Bill: Who is from India?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யார்?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யார்?
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, பா.ஜ.க.வின் நோக்கங்களை பற்றிய விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, பா.ஜ.க.வின் நோக்கங்களை பற்றிய விவாதத்தை தோற்றுவித்துள்ளது. மத வேறுபாடின்றி, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை பா.ஜ.க. அளிக்குமா என்பது விவாதப்பொருளாகியுள்ளது.

மக்களவையில் டிசம்பர் 9-ந் தேதி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் தலைமையில் எழுந்த பலத்த எதிர்ப்புகள் மற்றும் கூச்சல்களிடையே நிறைவேறியது. மாநிலங்களவையில் டிசம்பர் 11-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை விவாதங்களில் பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா, இந்த மசோதா பல லட்சம் அகதிகளுக்கு நிம்மதி அளித்து, அவர்களை நரக வாழ்க்கையில் இருந்து விடுவிக்கும் என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை இலங்கை உள்நாட்டு போரின் போது, அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழ் அகதிகள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாததை எதிர்க்கின்றனர். சினிமா நட்சத்திர அரசியல்வாதியான, மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர், தமிழ் அகதிகள் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்கின்றனர்.

பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. இந்த மசோதா இலங்கை தமிழர் நலன்களை பாதிக்காது என்று கூறி இதை ஆதரித்தது.

அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களின் நிலைமை பற்றி மாநிலங்களவையில் பேசிய உள்துறை மந்திரி, அவர்களின் பிரச்சினை தனியாக பரிசீலனை செய்யப்படும் என்றார். பல்வேறு அரசுகளினால், லட்சக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.திருத்தப்பட்ட சட்டம், உரிய ஆவணங்கள் இன்றி இங்கு சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, சட்டப்படியான குடியுரிமை அளிக்க வகை செய்கிறது. ஆனால் அவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதரீதியான ஒடுக்குமுறைகளின் காரணமாக வெளியேறியவர்களாக இருக்க வேண்டும். இந்திய குடியுரிமை பெற, அவர்கள் இந்தியாவில் வசித்து வந்த கால அவகாசம் 11 வருடங்களில் இருந்து 5 வருடங் களாக குறைக்கப்படுகிறது.

இந்த மசோதா பிரிவு 7-ன் கீழ் (டி) என்ற உட்பிரிவை சேர்க்க வகை செய்கிறது. இதன் மூலம் குடியுரிமை சட்டம் மற்றும் இதர சட்டங்களை மீறும் ஓ.சி.ஐ அட்டைதாரரின், வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் என்ற உரிமையை (ஓ.சி.ஐ) ரத்து செய்ய வகை செய்கிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில், முஸ்லிம் அல்லாதவர்கள், மதவெறியர்களினால் ஒடுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்று வெளிப்படையாக கூறினார். இந்நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களை இதில் சேர்க்கப்படாததற்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதில்லை என்பதை காரணமாக கூறினார்.

இப்போது ஏன் இந்த சட்டத்திருத்தம்?

2019 மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி-அமித்ஷா குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இதில் முதல் படியாகும். குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றிய வாக்குறுதியை 2019 தேர்தலில் மட்டுமில்லாமல், 2014 பொதுத்தேர்தலின் போதும் பா.ஜ.க. அளித்துள்ளதை இவர்கள் சுட்டிகாட்டுகின்றனர். டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டப்பட்ட பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த மசோதா மோடி அரசின் முக்கிய நோக்கமாக, அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தற்கு இணையான முக்கியத்துவம் இதற்கும் உள்ளது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. “மதவாத அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுவதால், அவர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடுகின்றனர். ஆறு சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது ‘சர்வ தர்ம சாம்பவ்’ என்ற கொள்கையை வலுப்படுத்தும்” என்றார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, குடியுரிமை சட்டம் 1955, கடவுச்சீட்டு சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சீக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத குடியேறிகளை சிறையில் அடைத்து, நாடு கடத்த பயன்படும் சட்டங்களை, இந்த சட்டத்திருத்தம் ரத்து செய்கிறது.

சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், அந்நாடுகளில் ஒடுக்குமுறைக்கு ஆட்படும் சில முஸ்லிம் உட்பிரிவினராகவும் இருக்கக்கூடும் என்று கூறி, இதை கடுமையாக எதிர்க்கின்றனர். “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019-ல் முஸ்லிம் அகதிகளை சேர்க்காமல் இருப்பது, சாதி, மத, இன அடிப்படையில் பேதம் பார்க்காமல், அனைவருக்கும் சம உரிமைகளை அளிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 14-ம் பிரிவுக்கு முரணானது” என்கின்றனர்.

இந்திய வாக்காளர்களை மேலும் பிளவுபடுத்தி, அதன் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் நாடாக இந்தியாவை இறுதியில் மாற்ற, பா.ஜ.க.வின் பின்னணியில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தந்திரம் இது என்று இதை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இருக்க முடியாது என்ற இந்தியாவின் அடிப்படை கருத்தியலை இது நசுக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சசிதரூர், இந்த மசோதாவை எதிர்த்து பேசும் போது கூறினார்.

முன்னர் இருந்த சட்டத்தின்படி, இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கும் நபர், கடந்த எட்டு ஆண்டுகளில், குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற விரும்பும் நபர், மொத்தமாக 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும்.

குடியுரிமை பெற, டிசம்பர் 31, 2014-க்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள், இங்கு ஆறு வருடங்கள் வசித்த பின், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள்

அசாம் மற்றும் வட கிழக்கில் இதர சில பகுதிகளில், இதை எதிர்த்து உருவான போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 1971 முதல் இந்த மாநிலங்களுக்கு, முக்கியமாக அசாம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துள்ள வங்கதேச இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்க இந்த மசோதா வகை செய்யும் என்று இவர்கள் அஞ்சுகின்றனர்.

உள்ளூர் வளங்கள் மற்றும் அரசு அளிக்கும் சேவைகளை பெற, இந்த அகதிகள், பூர்வீக மக்களுடன் போட்டியிடுவதால், இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்பட்ட பின், குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாததால் 19 லட்சம் மக்கள் அதில் இடம் பெறவில்லை. இவர்களில் பல லட்சம் பேர், வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய வங்காளி இந்துக்கள். இவர்களின் வருகையால் அம்மாநிலங்களில் மக்கள் தொகையின் பிரிவுகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இதுவும் இந்த அச்சம் அதிகரிக்க ஒரு காரணமாகும்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் தலைமையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள் குழுவை, தி.மு.க, ஆர்.ஜே.டி, பி.டி.பி, சமாஜ்வாடி கட்சி, பி.ஜே.டி. மற்றும் அசாதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரிக்கின்றன.

இந்த மசோதாவை ஆதரிப்பவர்களில், பா.ஜ.க.வின் பிராந்திய கூட்டாளிகளான அசாமின் ஏ.ஜி.பி, அகாலிதளம், ஜனதா தளம்(யு), அ.தி.மு.க மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளும் அடக்கம். சில சட்டப்பிரிவுகளில் முரண்பட்டாலும், இவை மசோதாவிற்கு ஆதரவளித்தன. மாநிலங்களவையில் வாக்கெடுப்பின் போது, சிவசேனா வெளிநடப்பு செய்தது.

விமர்சனங்களை மின் அஞ்சலில் அனுப்ப :

NRD.thanthi@dt.co.in

மற்றொரு வாதம்

இந்தியாவை 1947-ல் துண்டாட வகை செய்த, முகமது அலி ஜின்னா முன் வைத்த வாதத்தை குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்கிறது. இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியா என்ற ஒரே தேசத்தில் வாழும் இரு வேறு நாட்டினர்கள் என்று 1940-ல் ஜின்னா தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டார். முஸ்லிம்களுக்காக ஒரு தனி நாட்டை கோரி பெற்றார்.ஆனால், அந்த சமயத்தில் இருந்த இந்திய தலைவர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று பிரகடனம் செய்தது. இந்தியாவை ‘தன்னிச்சையாக’ இந்து நாடாக மாறுவதை தவிர்த்தனர். அரசியல் சாசனம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும், சட்டப்பிரிவு 14-ன் கீழ், சம உரிமைகளை வழங்கியுள்ளது. மற்றொரு அடிப்படை உரிமையான மத உரிமையையும் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சசி தரூர், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இது மகாத்மா காந்தியின் கருத்தியலை, ஜின்னாவில் கருத்தியல் வென்றுள்ளதாக அர்த்தம் என்றார்.