சிறப்புக் கட்டுரைகள்

கனவுகளின் நாயகி + "||" + The heroine of dreams

கனவுகளின் நாயகி

கனவுகளின் நாயகி
குளத்தில் குதித்து நீச்சலடித்து, மரத்தில் ஏறி விளையாடி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தாலும், திருமணமாகி நகரத்துக்கு வாழ்க்கைபட்டு சென்றுவிட்டால் அவர்கள் மாறிப்போய்விடத்தான் செய்கிறார்கள்.
விளைநிலத்தில் தவழ்ந்து, மாடுகளோடு நடைபயின்று, குளத்தில் குதித்து நீச்சலடித்து, மரத்தில் ஏறி விளையாடி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தாலும், திருமணமாகி நகரத்துக்கு வாழ்க்கைபட்டு சென்றுவிட்டால் அவர்கள் மாறிப்போய்விடத்தான் செய்கிறார்கள். நாகரிக போர்வைக்குள் புதைந்துபோகும் அவர்கள், ரசாயன வாழ்க்கைக்குள் சிக்கி மூச்சுமுட்டிய பின்பே இயற்கையின் பெருமையை உணர்ந்து, கிராமத்தை திரும்பிப்பார்ப்பார்கள். அப்படி திரும்பிப் பார்ப்பவர்கள் பலரும் பெரும்பாலும் தங்கள் கடைசிகாலத்தைதான் பால்ய நினைவுகளோடு சொந்தகிராமத்தில் கழிப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு மத்தியில் இந்துமதி வித்தியாசமானவர். ‘நிலத்தில் எக்காரணத்தை கொண்டும் செயற்கை உரம் எதையும் பயன்படுத்தக்கூடாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் விவசாயத்தை தொடரவேண்டும். விளைநிலத்தில் தன்னால் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டாலும்கூட ஒருவிவசாயிக்கே அதை குத்தகைக்குவிடவேண்டும். அதில் அவர் தொடர்ந்து விவசாயமும் செய்யவேண்டும்’ என்ற நிபந்தனைகளை விதித்து மகன்கள் இருவரிடமும் சத்தியம் வாங்கியிருப்பவர். அதோடு தானும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றிகாண்பவர். குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டிருப்பவர்.

இந்துமதியை சந்திப்பவர்கள், ‘அடிக்கடி பார்த்த முகமாக இருக்கிறதே’ என்று நினைப்பார்கள். ஆம் இவர் டெலிவிஷனில் செய்திகள் வாசித்தவர். பாடல்கள் வாயிலாக திரை உலகிலும் கால் பதித்து, திரை கதைகளும் எழுதிக்கொண்டிருப்பவர். குரல் வடிவில் புத்தகங்கள் வெளியிடுபவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்பில் இருப்பவர்.

இந்துமதியின் இளம்பருவ கிராமத்து வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. அதை ஒரு கதை போன்று நம்மிடம் சொல்கிறார்:

“திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நார்சிங்கம்பேட்டை என்ற விவசாய கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது பெற்றோர் நடேசன் வாத்தியார்- இலஞ்சியம் டீச்சர். இருவருமே பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். எங்கள் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் அந்த காலத்தில் சிறுவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். வயல்களுக்கு சென்று அவர்களை பிடித்துவந்து முடிவெட்டி, குளிப்பாட்டி, உணவளித்து என் தந்தை பள்ளியில் சேர்ப்பார். எனது பெரியப்பா கணபதி, பெரியாரின் சீடர். ராகுகாலத்தில் பெரியாரே அவருக்கு திருமணம் செய்துவைத்தார்.

ஐந்து ஏக்கர் விவசாய நிலத்திற்கு மத்தியில் எங்கள் பூர்வீக வீடு இருக்கிறது. அருகில் சோழசூடாமணி என்ற ஆறு ஓடுகிறது. முப்போகம் விளைகின்ற பூமி அது. அந்த மண் எனக்கும் விவசாயத்தை முழுமையாக கற்றுத்தந்திருக்கிறது. பூர்வீக நிலத்தின் அருகிலே கூடுதலாக நிலம் வாங்கி நெல், உளுந்து, பயறு வகைகள், பருத்தி, 20 வகையான பழமரங்கள் போன்றவைகளை பயிரிட்டு, இயற்கை முறையில் வளர்த்து வருகிறேன். மீன்வளர்ப்பில்கூட சில இடங்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் எங்கள் நிலத்தில் குட்டைகள் அமைத்து இயற்கை உணவுகள் வழங்கி ஏழு வகையான மீன்களை வளர்த்துவருகிறேன்.

எனது சிறுவயது பருவம் சுவாரசியமானதாக இருந்தது. பள்ளி நேரம் தவிர்த்து விளையாட்டுதான் என் பொழுதுபோக்கு. வீட்டின் அருகில் உள்ள குளத்தில் நீச்சலடித்து பொழுதுபோக்குவேன். மரத்தில் ஏறி விளையாடுவேன். என்னையும், அக்காள் ஆண்டலின் ஜாட்டையும் சுதந்திரமாக என் பெற்றோர் வளர்த்தனர். பயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு நான் வளர்ந்து வந்தேன். பள்ளி்க்காலத்தில் தினமும் விடிந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடுவது எனது வழக்கமாக இருந்தது.

சிறுவயதில் எனது பாட்டி வள்ளியம்மையின் தாக்கம் என்னிடம் நிறைய இருந்தது. அவர் வரலாற்று சம்பவங்களையும், கிராமிய தன்னம்பிக்கை கதைகளையும், நாட்டுப்புற பாட்டுகளையும் எந்நேரமும் என் காதில் விழும்படி பாடிக்கொண்டே இருப்பார். ரசிக்கும்படி கதைகளையும் சொல்லுவார். இன்று நான் பாடல் எழுதுவதற்கும், சினிமாவுக்கு கதைகள் எழுதுவதற்கும் அதுதான் அடிப்படை.

எங்கள் வீட்டில் வேலைபார்த்த மூத்த தம்பதிகளை நான் பெரியப்பா, பெரியம்மா என்று அழைப்பேன். அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேலைபார்க்கத் தொடங்கினால், இரவு 10 மணி வரை சோர்வின்றி உழைப்பார்கள். அவர்களிடமிருந்து நான் கடின உழைப்பை கற்றுக்கொண்டேன். நான் பெரியம்மா என்று குறிப்பிட்ட அந்த பெண்மணி படிப்பறிவற்றவர். ஆனால் எங்கள் குடும்ப வரலாறு அவருக்கு தெரியும் என்பதால் அதை அப்படியே தொகுத்து தாலாட்டு பாடல்களாக பாடி, எங்கள் குழந்தைகளை தூங்கவைப்பார். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சம்பவங்களையும் கோர்த்து தங்கு தடையின்றி அவர் ராகத்தோடு பாடினால் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் புல்லரித்துப் போவார்கள். அப்படி கிராமங்களில் நிறைய பெண்கள் முன்பு தாலாட்டு பாடினார்கள். இப்போது கிராமங்களில் தாலாட்டு பாடல்களை கேட்கவே வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.

இந்துமதி, குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி பள்ளியில் படித்தபோது விளையாட்டுத்திறன், பேச்சாற்றல், நாட்டியத்திறன் போன்றவைகளையும் வளர்த்தெடுத்திருக்கிறார். பள்ளிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளையும் குவித்திருக்கிறார். பின்பு பி.எஸ்சி. படிப்பில் சேர்ந்திருக்கிறார். உலக தலைவர்களின் வாழ்க்கையையும், உலக வரலாற்றையும் அன்றாடம் படித்து தந்தையோடு விவாதம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், 18 வயதை தொட்டுக்கொண்டிருந்தபோது பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அது திருமணத்தால் உருவான திருப்பம்!

“திடீரென்று தந்தை எங்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். எனக்கும், என் அக்காளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. அக்காளுக்கு 19 வயது. நான் 18-ஐ தொட்டுக்கொண்டிருந்தேன். வீட்டின் ஒருபுறத்தில் அக்காளுக்கு கிறிஸ்தவ முறைப்படியும், இன்னொரு புறத்தில் எனக்கு சீர்திருத்த முறைப்படியும் திருமணம் நடந்தது. எனது கணவர் பக்கிரிசாமி அப்போது ஓ.என்.ஜி.சி.யில் உயர்அதி காரியாக வேலைபார்த்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு முன்பு நான் சினிமா தியேட்டரை பார்த்ததில்லை. துக்க வீட்டிற்கும் சென்றதில்லை. உறவினர்களின் கல்யாணம் எப்படி நடக்கும் என்பதுகூட எனக்கு தெரியாது. பிறந்து வளர்ந்த கிராமமும், பெற்றோருமே திருமணத்திற்கு முன்பு எனது உலகமாக இருந்தனர். எனக்கு குடும்ப வாழ்க்கையை பொறுமையாக எனது கணவர்தான் கற்றுத்தந்தார்” என்கிறார்.

திருமணமான 15-வது நாளே கணவர் வேலைபார்த்த அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கே உல்பா தீவிரவாதிகளின் வன்முறை அதிகமாக இருந்திருக்கிறது. மத்திய அரசு அதிகாரிகளை குறிவைத்து கடத்திச்செல்லும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதனால் சில மாதங்களை பயத்துடனே கழித்திருக்கிறார். அதன் பின்பு அதிகாரிகளின் மனைவிகள் நடத்திய சேவை அமைப்புகளோடு சேர்ந்து இயங்கி, மீண்டும் தன் திறமைகளை ஒருங்கிணைத்து வெளிப்படுத்த முன்வந்திருக்கிறார். பின்பு கணவரின் பணிமாற்றத்தால் காரைக்கால் வந்திருக்கிறார். அங்கு ஆல் இந்திய ரேடியோவில் நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

“நான் வழங்கிய ரேடியோ நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்ததால் என்னை டெலிவிஷனில் செய்திகள் வாசிக்க அழைத்தார்கள். பிரபல டி.வி.யில் தொடக்க நாளில் முதல் செய்தியினை வாசிக்க என்னை அழைத்திருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக என் தந்தை பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவருக்குரிய இறுதி சடங்குகளை நானும், என் அக்காவும் நடத்தினோம். உடனே காரில் புறப்பட்டு சென்னை வந்து, செய்தியை வாசித்தேன். பின்பு ெதாடர்ந்து இன்னொரு டி.வி.யிலும் செய்தி வாசிப்பாளராக இருந்தேன்” என்கிறார், இந்துமதி.

இவர் திருமணமான அடுத்த வருடத்தில் மகன் பாலகுமார் பக்கிரிசாமியையும், அடுத்து இ்ந்துகுமார் பக்கிரிசாமியையும் பெற்றெடுத்திருக்கிறார். மூத்தமகன் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். இளையமகன் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றுகொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம்கொண்ட அவர், தான் படிக்கும் பல்கலைக்கழகத்து கால்பந்து, கூடைபந்து அணிகளில் நடுவராகவும் பணியாற்றுகிறார்.

“நான் என் மகன்களை வித்தியாசமான முறையில் வளர்க் கிறேன். கிராமத்து மனிதர்கள்போல் அவர்கள் பலமானவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களது ஆரோக்கியத்தில் முழு அக்கறை கொள்கிறேன். படிப்பு அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை. அதனால் பல் கலைக்கழக பரீட்சை இருக்கும் நாட்களில்கூட அதிகாலையில் அவர்களை உடற்பயிற்சிக்காக மைதானத்திற்கு அனுப்பிவிடுவேன். இன்றும் அந்த பழக்கம் தொடர்கிறது. அதுபோல் இயற்கை விவசாயத்தில் விளையும் உணவுப்பொருட்களை மட்டுமே நாங்கள் சாப்பிடவும் செய்கிறோம்.

என் கணவர் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். அவரோடு நான் சூடான் போன்ற வன்முறைகள் நிறைந்த நாடுகளிலும் வசித்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. சில நாடுகளில் தொழில்முறை பயணங்களும் மேற்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கதைகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறும் இவரது வாழ்க்கையில் கனவு மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாகவும் இருக்கிறது.

“எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்பார்கள். நான் கனவு காண்பதற்காகவே தூங்கிக்கொண்டிருக்கிறேன். எனது கனவுகள் இயல்புக்கு மாறாக கதைகள் போன்று தொடர்ந்துகொண்டிருக்கும். கனவின் இடையில் நான் விழித்துவிட்டால், ஒரு மணி நேரமோ இரண்டு மணிநேரமோ கழித்து மீண்டும் தூங்கும்போதும் அந்த கனவு தொடரும். அதாவது இடைவேளைக்கு பிறகு தொடங்கும் சினிமா போன்று மீண்டும் அந்த கனவை காண்பேன். நான் காணும் கனவுகள் எனக்கு ஒருபோதும் மறக்காது. அவை இயல்பான கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த கதைகள் என்னை மிக பெரிய உயரத்திற்கு கொண்டுசெல்லும் என நினைக்கிறேன். அதையே நான் புதிய சினிமாக்களுக்கு கதையாக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பாடல் எழுதுவதிலும் அதிக ஆர்வம் உண்டு. மூன்று சினிமாக்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய பாடல்களில் தவம் என்ற படத்தில் சீமான் தோன்றும் மழை பாடல் அதிக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். படம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இயற்கை விவசாயத்திலும் முழுமூச்சாக ஈடுபடஉள்ளேன்” என்றார். இந்துமதி குடும்பத்தினருடன் சென்னை, தாதன்குப்பம் பகுதியில் வசித்துவருகிறார்.

இவர் சினிமா கிளைமாக்ஸ் காட்சி போன்று நிறைவாக சென்டிமென்ட் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.

“எங்கள் வீட்டில் முரட்டு காளை ஒன்று இருந்தது. ரொம்ப உயரமானது. அதை பார்த்து ஊரே மிரளும். எங்கள் குடும்பத்தினர் கொண்டாடிய அந்த காளை என்னிடம் மட்டும் குழந்தை மாதிரி அடக்கமாக பழகும். எப்படிப்பட்ட சூழலிலும் அதை நான் எளிதாக அடக்கிவிடுவேன். அதை அடக்கும் நுட்பம் எனக்கு மட்டும் தெரியும். அதன் மூக்கணாங்கயிறை மூக்கிற்கு மேல் தூக்கிப் பிடித்து, அதன் திமிலை முழுபலத்தையும்கொண்டு அமுக்குவேன். அப்படியே என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அன்று என் தாத்தா இறந்த செய்தி திடீரென்று வந்தது. அந்த வினாடியே ஊரை மிரட்டிய எங்கள் காளையும் கீழே விழுந்து மடிந்துவிட்டது..” என்றபோது அவர் கண்கள் கலங்குவதை காணமுடிந்தது.

இந்த கனவு நாயகியின் கனவுகள் உயிர்பெறட்டும்!

ஆசிரியரின் தேர்வுகள்...