பன்திறன் போட்டிகளில் பதக்க வேட்டை


பன்திறன் போட்டிகளில் பதக்க வேட்டை
x
தினத்தந்தி 15 Dec 2019 8:12 AM GMT (Updated: 15 Dec 2019 8:12 AM GMT)

இன்றைய மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பின்போதே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கும் தயாராகிவிடுகிறார்கள்.

ன்றைய மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பின்போதே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கும் தயாராகிவிடுகிறார்கள். விரும்பிய உயர்கல்வியில் சேர்வதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் பிரதானமாக விளங்கும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்காகவும் தங்கள் தகுதிகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். அதற்காக வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை மட்டுமே படிக்காமல் அவற்றோடு தொடர்புடைய துறை சார்ந்த அறிவையும் மேம்படுத்திக்கொள்கிறார்கள். உலக அளவில் நடைமுறையில் இருக்கும் பிரபலமான கல்வி முறைகளையும் நாட்டு நடப்புகளையும் கற்றறிந்து தங்கள் அறிவுத்திறனை போட்டிப்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலக அளவில் நடத்தப்படும் பன் திறன் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு களையும், பதக்கங்களையும் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திறமைமிக்க மாணவிகளுள் ஒருவராக திகழ்கிறார், பவர்ணா கிருஷ்ணமூர்த்தி. 9-ம் வகுப்பு படிக்கும் இவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் நடத்தும் ‘வேர்ல்டு ஸ்காலர்ஸ் கப்’ எனப்படும் பன் திறன் போட்டியில் பங்கேற்று 11 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள், வென்று அசத்தி இருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறி உலக அளவில் 23-வது இடத்தை பிடித்தும் சாதித்திருக்கிறார்.

தேனியை சேர்ந்த பவர்ணா குடும்பத்தினர் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார்கள். பவர்ணாவின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி-பிரியதர்ஷினி. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயா பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவரது சகோதரி அஹார்ஷ்னா 7-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிப்படிப்பின்போதே தனித்திறன்களை வளர்த்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கும் பூரிப்பு பவர்ணாவிடம் வெளிப் படுகிறது. பதக்கங்களை குவித்த பன்திறன் போட்டி அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மாணவி களான நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதற்கான வழிகாட்டுதலும், சந்தர்ப்பங்களும்தான் பெரும்பாலானவர் களுக்கு அமைவதில்லை. நான் பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்பேன். வெறுமனே புத்தகங்களில் இருக்கும் பாடங்களை மட்டும் படிக்காமல் அவற்றோடு தொடர்புடைய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டுவேன். இணையதளங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்களை தேடிப்பிடித்து தெரிந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் ‘வேர்ல்டு ஸ்காலர்ஸ் கப்’ போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையை தந்தது. அறிவியல், சமூகவியல், வரலாறு, இலக்கியம், இசை, ஓவியம், நடப்பு நிகழ்வுகள், ஏதாவதொரு விஷயத்தை புதுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல் போன்ற அம்சங்கள் இந்த போட்டியில் இடம்பெறும்.

கட்டுரை எழுதுவது மற்றும் பட்டிமன்றம் போன்ற விவாத நிகழ்வுகளும் இடம்பெறும். அவை சார்ந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்திய அளவிலும், ஆசிய அளவிலும், பின்னர் உலக அளவிலும் போட்டிகள் நடத்தப்படும். 3 பேர் கொண்ட குழுவாகவும், தனி நபரை மையப்படுத்தியும் போட்டிகள் நடக்கும். அதில் இந்திய அளவில் நடக்கும் போட்டி களை ஓரளவு எதிர்கொள்ளலாம். ஆசிய அளவிலான போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும். அதில் குழுவாகவும், தனி நபர் பிரிவிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றோம். அந்த அடிப்படையில் நான் சீனாவின் பீஜிங்கில் நடந்த இறுதி போட்டிக்கு தகுதி பெற்றேன். அங்கு பதக்கம் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக 11 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள், கோப்பைகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆசிய அளவில் முதல் சாதனையாகும் ’’ என்று பெருமிதம் கொள்கிறார்.

பவர்ணாவுக்கு பக்கபலமாக அவரது தாயார் பிரியதர்ஷினி விளங்குகிறார். அவர்தான் சிறு வயது முதலே பவர்ணாவுக்கு கதைகள் சொல்லிக்கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாணவ-மாணவிகள் படிப்பிலும் வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கு வாசிப்பு பழக்கம்தான் வழிகாட்டும் என்றும் பிரியதர்ஷினி சொல்கிறார்.

‘‘எனக்கு புத்தகங்கள் வாசிப்பது ரொம்ப பிடிக்கும். நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். கல்லூரியில் படித்த காலத்திலும், குடும்ப வாழ்க் கையில் இணைந்த பிறகும் வாசிக்கும் பழக்கத்தை நான் கைவிடவில்லை. நாவல்கள், கதைகளை விரும்பி படிப்பேன். மகள்கள் இருவருக்கும் சின்ன சின்ன கதைகளை சொல்வேன். அவர்களும் என்னை போல் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக, ‘நான் சொன்ன கதையைவிட இந்த கதை சூப்பராக இருக்கிறது. நீயே வாசித்து பார். அதிலிருக்கும் சுவாரசியம் உனக்கும் புரியும்’ என்று வாசிக்க பழக்கப்படுத்தினேன். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுப்பதும், அவர்களை வாசிக்க பழக்கப்படுத்துவதும் ஒழுக்க நெறிகளை உருவாக்க உதவும்.

கதைகள் வாசிக்கும்போது சிந்தனை களெல்லாம் அடுத்து என்ன நடக்கும்? கதையை எப்படி முடிப்பார்கள்? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும். அது மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும். புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். ஏனெனில் புத்தகம் வாசிக்கும்போது கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதேபோல் ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுக்கும்போதும் கவனம் எல்லாம் பாடத்தின் மீது பதியும். தேவையற்ற சிந்தனைகள் ஏற்படாது. ஆசிரியர் நடத்தும் பாடமும் நன்றாக புரியும்.

எனது மகள்கள், பாடம் நடத்தும்போது கவனம் சிதறாமல் குறிப்புகளை எழுதுவார்கள். அது எளிதாக பாடத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிடும். மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய அவசியமிருக்காது. கதைகள் கேட்கும், படிக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். டீன் ஏஜ் பெண்கள் தன்னம்பிக்கையும், மன தைரியமும் கொண்டவர்களாக இருப்பதற்கு வெளி உலக விஷயங் களையும் அறிந்து கொள்ள வேண்டும். இணையதளங்களை பயனுள்ள வழியில் செலவிடவும் வேண்டும். வாழ்க்கை மீது பிடிப்புடன் இருப்பதற்கு ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி ஒருபோதும் வீண் போகாது. எந்த முயற்சிக்கும் தோல்வி என்பது கிடையாது. கட்டாயம் பலன் கொடுக்கும். தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும். பெற்றோர் பிள்ளைகளுடன் நட்பாக பழக வேண்டும். படி படி என்று கட்டாயப்படுத்தவும் கூடாது. அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதுவே அவர்களது வெற்றிக்கு துணைபுரியும்’’ என்கிறார்.

தாயாரின் வாசிக்கும் பழக்கம்தான் பவர்ணாவுக்குள் அறிவு தேடலை அதிகப்படுத்தி இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் ஆர்வத்துக்கும் தூண்டு கோலாக அமைந் திருக்கிறது.

‘‘அமெரிக்காவுக்கு சென்று உயர்கல்வி கற்க வேண்டும் என்பது என் ஆசை. அங்குள்ள கல்வி முறைகளை இப்போதே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த போட்டி அமைந்திருக்கிறது. பிற நாட்டின் கல்வி முறை எப்படி இருக்கிறது? அங்கு பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் என்னென்ன? அங்குள்ள கலாசாரங்கள் என்ன என்பதையெல்லாம் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் எல்லாம் மாணவர்கள் பாடத்திட்டங்களில் இருந்து குறைவாக படிக்கிறார்கள். ஆனால் தாங்கள் படிக்கும் பாடங்களை பற்றிய ஏராளமான தகவல்களை தேடிப் பிடித்து கூடுதலாக கற்றுக் கொள்கிறார்கள். அது அவர்களுடைய அறிவுத்திறனுக்கு தீனிபோடுவதாக அமைந்திருக்கிறது. நாமும் அதுபோல் படிப்பு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினால் அது போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு கைகொடுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பதற்கும், வேலை வாய்ப்புக்கும் போட்டித்தேர்வுகளில் நமது தனித்திறனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற கல்வி சார்ந்த போட்டிகளில் பள்ளிப்படிப்பின்போதே பங்கேற்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தேனியில் உள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அங்கு கற்ற அடிப்படை கல்வியும், இங்கு பயிலும் கல்வியும் இத்தகைய கல்வி தேடலுக்கு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கும், வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதற்கும் தூண்டுகோலாக விளங்கும். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு தேவையான தகுதியை வளர்த்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

பவர்ணாவின் ஆசைக்கனவுகள் அரங்கேறட்டும்!

Next Story