நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்: இது கழியலாட்டம்


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்:  இது கழியலாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 8:47 AM GMT (Updated: 22 Dec 2019 8:47 AM GMT)

பழங்கால தமிழர்கள் தற்காப்புக் கலைகளில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அந்த கலைகளில் கத்தி, கம்பு, வாள், அரிவாள் போன்ற கருவிகளை பயன்படுத்தி பயிற்சி பெற்றனர்.

எதிரிகளிடமிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ள அந்த ஆயுதங்கள் பயன்பட்டன. அத்தகைய தற்காப்புக் கலைகளை தழுவி உருவான நாட்டுப்புற கலைகளில் ஒன்று கழியலாட்டம். ஆடவர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வரும் இது ஒருவகை கோலாட்டமாகும்.

கம்பு, கழி, கோல், பிரம்பு போன்றவை கிட்டத்தட்ட ஒரே பொருளுக்குரிய சொற்களாக இருக்கின்றன. கைகளில் கழிகள் எனப்படும் கோல்களை ஏந்தி, அடித்து ஒலியெழுப்பி சிலம்பாட்டத்தின் பல அடவுகளைக்கொண்டு மெதுவாகவும், வேகமாகவும் சுழன்று இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். இதற்கு இரண்டு முழம் நீளமுள்ள கனமான உருட்டுக் கோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடல்களுக்கு ஏற்றபடி தாளத்தோடு அடித்து ஆடுவார்கள். நின்றும், சாய்ந்தும், அமர்ந்தும், குதித்தெழுந்தும் வலது கைக் கோலால் நேருக்கு நேர் சுற்றியும் அடித்து ஆடுவது பார்வையாளர்களை வெகுவாக கவரும். நடனத்தின்போது, இந்த கலைஞர் களின் முகத்தோற்றமும் உடல் அசைவுகளும் அவர்கள் சண்டையிடுவதுபோன்று தோன்றச்செய்யும்.

கழியலாட்டத்தில் கம்பு முதன்மை பெறுகிறது. குறுகிய கம்புகளும், நீண்ட கம்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. தற்காப்புக்கலை உத்திகள் பலவற்றை இதில் காணமுடிகிறது. இவ்வாட்டத்தில் ஆடப்படும் அடவு முறைகளும் ஆட்டக் கருவியான கம்புகளும் போர்க்கலையை நினைவூட்டுகின்றன. கழியலாட்டத்தில் கம்பை அடிக்கின்ற உத்தி முறைகள் வாள், வேல், கம்பு போன்ற ஆயுதங்கள் கொண்டு போர் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன.

வட்டமாக ஆடும் இவ்வாட்டம் முந்தைய காலங்களில் இரவில் நிகழ்த்தப்பட்டது. அப்போது வட்டத்தின் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து ஆடுவார்கள். உரலைக் கவிழ்த்துப்போட்டு அதன் மீது குத்துவிளக்கை ஏற்றிவைத்து ஆடுவர். இப்போது பெட்ரோமாக்ஸ் விளக்கைப் பயன்படுத்துகின்றனர்.

கழியலாட்டத்தில் எட்டு ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் இரண்டு இரண்டு பேராக நான்கு ஜோடிகளாக பிரிந்துநிற்பார்கள். வட்டத்தில் தனக்கு எதிராக நின்று ஆட்டத்தை ஆரம்பிப்பவர் ‘தன்னாள்’ என்று அழைக்கப்படுகிறார். தன் ஆட்டக் கூட்டாளியான தன்னாளைக் கவனித்தே ஆடவேண்டும். ஆட்டத்தின் மாற்றங்களும் ஆட்டத்தின் நகர்வுகளும் தன்னாளை அடிப்படையாகக் கொண்டே அமையும்.

தன்னாளை ஆட்டரீதியாக புரிந்துகொள்ளும் வரை ஆட்டம் மெதுவாகச்செல்லும். எட்டு பேரும் நான்கு இணைகளாக வட்டமாக நிற்கும்போது தன்னாளின் பின்புறமிருந்து தனக்கு எதிராக வந்து ஆடுபவர், பின்னாள் எனப்படுவார். இந்த ஆட்டத்தில் முன்ஆள், பின்னாள் ஆகிய இருவரையும் கவனித்தே ஆட வேண்டும். ஆட்டத்தின் நிலைகள் ‘அடவு’ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கழியல் ஆட்ட முறையில் கை, கால், உடல் அசைவுகள், நகர்வுகள், பாடல்கள் ஆகிய அனைத்தும் சிறப்பாக அமைந்தால், அந்த ஆட்டம் அமர்க்களமாகிவிடும். ஆட்ட நிகழ்ச்சிகள் விருத்தம், கும்பிடுமுறை, பாடல்கள், மங்களம் என்ற வரிசையில் நிகழ்த்தப்படுகின்றன.

கழியலாட்டத்தில் பல வகைகள் இருக்கின்றன. பாம்பு கழியல், பருந்து கழியல், சதுரக் கழியல், வட்டக் கழியல், முக்குக் கழியல், கும்மிக் கழியல், சிலுவைக் கழியல், பிரண்டு கழியல், நெடுங்கழியல் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. இந்த ஆட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாக வழக்கத்தில் இருக்கின்றன. பெரும்பாலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில்தான் ஆடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு நாள், புத்தாண்டு விழா, கத்தோலிக்கத் திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டுவிழா, கோவில்விழா, கலைவிழாக்கள் போன்றவைகளிலும் இடம்பெறுகிறது.

கழியலாட்டத்திற்கு மலைக்காரைக் கம்புகளை பயன் படுத்துகிறார்கள். மலைக்காரை மரத்தில் முண்டுகள் இல்லாத நேரான கம்புகளை வெட்டி செதுக்கி, பல நாள் காயவைத்து பலவிதங்களில் அளவிட்டு சீராக்குகிறார்கள். கம்புகளை ஒன்றோடு ஒன்றாக அடிக்கும்போது நல்ல ஓசை வெளிவரவேண்டும். மந்தமான ஓசை உடைய கோல்களை ஒதுக்கிவிடுகின்றனர். ஆடுபவர்கள் கையில் இருக்கும் இரண்டு கோல்களிலும் சலங்கை கட்டப்பட்டிருக்கும். அவை இனிய இசையைக் கொடுக்கின்றன.

கழியலாட்ட பயிற்சியை எட்டு அல்லது ஒன்பது வயதில் பெறுகிறார்கள். பயிற்சி கொடுப்பவர் அண்ணாவி என்று அழைக்கப் படுகிறார். அண்ணாவிதான் சூடம் ஏற்றி வழிபட்டுவிட்டு, கழிகளை எடுத்து பயிற்சிபெறுபவர்களுக்கு வழங்குவார். கம்புகளை ஆட்டக்காரர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறார். இதில் நன்றாக பயிற்சி பெற தினமும் ஐந்து மணி நேரம் வரை கற்றுக்கொள்ளவேண்டியதிருக்கும்.

ஆட்டக் கலைஞர்கள் இதற்கென்று தனி சீருடைகள் அணிந்து கொள்வதில்லை. ஒப்பனைகளும் அதிகம் செய்துகொள்வதில்லை. சிறுதெய்வங்கள் மற்றும் புராணக் கதைகளை பாடு பொருளாகக்கொண்டு ஆட்டம் நிகழ்த்தப்பட்டு வந்தது. தற்போது சமூகப் பாடல்களும், விழிப்புணர்வு பாடல்களும் இடம்பெற்று இந்த கலையை ஜனரஞ்சகமாக்கி இருக்கின்றன.

- கலை வ(ள)ரும்.

தகவல்: இளவழகன், பகுதி நேர விரிவுரையாளர்- நாட்டுப்புற கலைகள் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story