நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
x
தினத்தந்தி 28 Dec 2019 10:30 PM GMT (Updated: 28 Dec 2019 10:56 AM GMT)

நாடகத் தமிழில் நடனம், நாட்டியம், கூத்து போன்றவைகளும் அடங்கும். கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழைமை வாய்ந்ததாகும்.

பாவைக்கூத்து

வாயினால் பாடப்படும் இசைப்பாட்டுக்கு செந்துறைப்பாட்டு என்றும், கூத்துக் கலைக் குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு. கூத்துக் கலையில் பதினோரு ஆடல் உண்டு. இக்கூத்து தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டபடியால், தெய்வ விருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வங்கள் தமது பகைவர்களுடன் போர்செய்து பெற்ற வெற்றியின் மகிழ்ச்சி காரணமாக ஆடிய ஆடல்களே கூத்துக்கலை. அவை அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டுரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என பதினோரு வகையாகும். இவைகளில் முதல் ஆறு நின்று ஆடக்கூடியவை. இதர ஐந்தும் விழுந்தும் ஆடக்கூடியவை.

கூத்துக்கலையில் ஒன்றான பாவைக் கூத்து, குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈர்த்து நீதிக்கதைகளை பட்டிதொட்டி எங்கும் பரப்பி, நன்னெறிப்படுத்த அன்று முதல் இன்றுவரை பயன்பட்டு வருகிறது. இக்கூத்து பாமரர் கூத்தாகும். நகர்புறங்களைவிட கிராமங்களில்தான் இக்கூத்து உயிர்ப்புடன் இருக்கிறது.

பாவைக்கூத்து இருவகைப்படும். ஒன்று மரப் பாவைக் கூத்து. இன்னொன்று தோல்பாவைக் கூத்து. மரப்பாவைக் கூத்தைப் பொம்மலாட்டம் என்று வடமாவட்டங்களில் அழைக்கிறார்கள். மரத்தால் பொம்மைகள் செய்து அவற்றைக் கொண்டு கூத்து நடத்துவது மரப்பாவைக் கூத்து. தோலில் ஓவியம் வரைந்து அவற்றைக் கூத்தில் காட்டுவது தோல்பாவைக் கூத்து. திரைக்கு வெளியே பாவையைக் குதிக்கச் செய்து கூத்து நடத்துவது மரப்பாவைக் கூத்து. திரைக்குள்ளே தோல்பாவையைக் காட்டி, ஆட்டி பார்வையாளர்கள் பார்க்கும்படி கூத்து நடத்துவது தோல்பாவைக் கூத்து. இதனை தோல்பாவை நிழற்கூத்து என்றும் அழைக்கிறார்கள்.

பாவையின் கை, கால், தலை, இடுப்பு ஆகியவற்றில் இணைப்பு இருக்கும். இந்த இணைப்பில் நூல் கட்டியிருப்பார்கள். அந்த நூல் கயிற்றை இயக்குபவர் பாவையை பிடித்து, அசைத்து இயக்குவார். இந்த நூல் அசைப்பால் பாவை அசைகிறது. ஆகவே, இத்தகைய மரப் பாவைக் கூத்தை நூல் பாவை என்றும் கூறுவர்.

பாவையின் அடிப்பாகத்திலுள்ள உள்ளீடற்ற பகுதியைப் பெருவிரல், ஆட்காட்டி விரல், சுட்டுவிரல் ஆகியவற்றோடு பொருத்தி, அசைத்து ஆட்டி கூத்து நடத்துவதும் உண்டு. அதனை கையுறைப் பாவை என்று கூறுகிறார்கள். மரப்பாவைக் கூத்து நூல்பாவை, கைப்பாவை, கையுறைப் பாவை, கம்பிப் பாவை என்று நான்கு வகைப்படும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பகுதியில்தான் இப்பாவைக் கூத்து பரவலாக நடத்தப்பட்டு வந்தது. தமிழகமெங்கும் இன்றும் அப் பகுதியினரே பாவைக்கூத்து நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாவைக் கூத்து முன்பு கோவில் விழாக்காலங்களில் நடத்தப்பட்டு வந்தது. நேர்த்திக் கடனாகப் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார்கள். கிராம தெய்வங்களை அமைதிப்படுத்த வேண்டியும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாவைக்கூத்து நடத்துவது, அந்த கிராமத்துக்கு மேன்மை தரும் என்று அந்த பகுதி மக்கள் நம்பினார்கள். பெரும்பாலும் பாவைக்கூத்து ஊர் மந்தைகளிலேயே நடத்தப்பட்டு வந்தது. அதனை நடத்துபவர்களை பாவையாட்டிகள் என்றும், பாவைக்கூத்து கலைஞர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

பெரும்பாலும் பாவைகளை மூன்று பேர் இயக்குவார்கள். ஒருவர் பாவைகளை எடுத்துக்கொடுப்பார். ஒருவர் இயக்கியபடி உரையாடலை நிகழ்த்துவார். இன்னொருவர் பாடுவார். அனுபவம் பெற்ற இருவர் மட்டுமே இருந்து இயக்குவதும் உண்டு. முன்பு குரல் வழியாக மட்டுமே மக்களை ஈர்த்தார்கள். இப்போது பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம், தபேலா, டோலக், ஜால்ரா, சலங்கை ஆகிய கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முற்காலத்தில் துத்தி, சுதி, மத்தளம் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

பாவைக்கூத்து நிகழ்வு மூன்று வகையாக பகுக்கப்பட்டிருக்கிறது. கடவுள் வாழ்த்து, நகைச்சுவைப் பகுதி, கதைப் பகுதி என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. எல்லாக் கூத்துகளும் தொடங்கும்போது பாடப்பெறும் பிள்ளையார் பாட்டுதான் இங்கும் பாடப்படுகிறது. பிள்ளையாரிடம் பபூன் சென்று அன்றைய கூத்து செம்மையாக இடையூறின்றி நடந்தேற வேண்டும் என்று வேண்டுவான். இது கடவுள் வாழ்த்து போன்றும் அமைந்து விடுகிறது.

மந்திர- தந்திரக் காட்சி, பரத நாட்டியம், பூசாரி கரகமெடுத்து ஆடும் காட்சி, பூசாரி பேயோட்டும் காட்சி போன்றவை முதலில் நடக்கின்றன. கூட்டம் சேருவதற்காகவும், கூத்தில் பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் இக்காட்சிகள் இடம் பெறுகின்றன.



கும்பகோணப் பகுதியில் நடக்கும் பாவைக்கூத்துக் கதைகளுக்கு முன்னோடியாக இருந்தது அரிச்சந்திரன் கதைதான். அதன்பின் வள்ளி திருமணம், சீதா கல்யாணம், பிரகலாதன், அருணகிரி நாதர், அய்யப்பன், பாமா விஜயம், கண்ணகி, மார்க்கண்டேயன், நல்லதங்காள், சிறுத்தொண்ட நாயனார், பக்த ருக்மாங்கதா போன்ற புராண கதாபாத்திர பெருமைகளும் பாவைக் கூத்துக்கதைகளாக நடத்தப்படுகின்றன.

கூத்தரங்கின் திரைக்குப்பின் பாவையாட்டி அமர்ந்திருப்பார். அவர் வலது காலில் ஒருகட்டை, கையில் ஒரு சலங்கை கட்டப்பட்டிருக்கும். சுற்றிலும் பொம்மைகள் இருக்கும். அவர் தலைக்கு மேல் பெட்ரோமாக்ஸ் அல்லது மின்சார விளக்கு தொங்கும். அதன் ஒளியில் முன்னால் பாவையாட்டி ஆட்டுகின்ற பாவையின் நிழல் திரைக்கு வெளியே தெரியும். அந்த திரைப்பகுதி முழுவதும் துணியால் மறைக்கப்பட்டிருக்கும். தோல்பாவைக்கூத்தில் கோமாளி கதாபாத்திரங்கள் உச்சிக் குடும்பன், உழுவைத் தலையன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கதாபாத்திரங்கள் கூத்தை பார்ப்பவர்களை வெகுவாக ரசிக்கவைக்கும். கதை முடிந்தவுடன் முடிவுரையாக அடுத்த நாள் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு கூறப்படும். ராமாயணம், பாரதக் கதைகளையே பெரும்பாலும் நடத்துகின்றனர். நல்லதங்காள் கதை பாவைக் கூத்தின் சிறப்பம்சமாகும்.

பாவைக்கூத்துக் கலை இப்போது அதிக மவுசு பெற்றிருக்கிறது. வெளிநாட்டு மக்களாலும் விரும்பி ரசிக்கப்படுகிறது. தமிழர்களின் கலைகளில் இதுவும் தனிப் புகழ்பெற்றதாக திகழ்கிறது.




தகவல்: இளவழகன், பகுதி நேர விரிவுரையாளர் - நாட்டுப்புற கலைகள் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.


Next Story