புத்தாண்டின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 14 புள்ளிகள் முன்னேறியது


புத்தாண்டின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 14 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 2 Jan 2020 8:45 AM GMT (Updated: 2 Jan 2020 8:45 AM GMT)

புத்தாண்டின் முதல் வர்த்தக தினத்தில் பங்கு வியாபாரம் ஓரளவு நன்றாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் முன்னேறியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

புள்ளிவிவரம்

நேற்று வர்த்தகத்தின் இடையே செப்டம்பர் காலாண்டிற்கான நடப்புக்கணக்கு பற்றாக்குறை பற்றிய புள்ளிவிவரம் வெளிவந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அது 0.9 சதவீதமாக இருந்தது. அது முதலீட்டாளர்கள் இடையே சற்றே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் புதிய வருடத்தின் முதல் வர்த்தக தினம் என்பதால் அவர்கள் பங்கு முதலீட்டில் ஓரளவு ஆர்வம் காட்டினர்.

அந்த நிலையில், மும்பை சந்தையில் மின்சார துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.78 சதவீதம் உயர்ந்தது. அடுத்து பயன்பாட்டுத் துறை குறியீட்டு எண் 1.41 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் பவர் கிரிட், என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.டீ.எப்.சி., இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் டைட்டான், இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, டாட்டா ஸ்டீல், மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 52.28 புள்ளிகள் அதிகரித்து 41,306.02 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,443.52 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,251.18 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,362 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,062 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 197 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.1,190 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.1,577 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 14.05 புள்ளிகள் உயர்ந்து 12,182.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,222.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,165.30 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story