வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி; நிப்டி 56 புள்ளிகள் இறங்கியது


வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி; நிப்டி 56 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 4 Jan 2020 11:45 AM GMT (Updated: 4 Jan 2020 11:45 AM GMT)

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் படுத்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 56 புள்ளிகள் இறங்கியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

லாப நோக்கம்

தொடர்ந்து இரண்டு தினங்கள் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்து இருந்தது. எனவே லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பலரும் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். பங்கு வியாபாரம் சரிய அது முக்கியக் காரணமாக இருந்தது. அன்னிய முதலீடு வெளியேறியதும் பாதிப்பு ஏற்படுத்தியது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் மின்சாரத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.20 சதவீதம் சரிவடைந்தது. அடுத்து மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் 1.16 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் உள்பட சன் பார்மா, டாட்டா கன்சல்டன்சி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மகிந்திரா, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் ஏஷியன் பெயிண்ட், ஆக்சிஸ் பேங்க், என்.டி.பி.சி., பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்.டீ.எப்.சி. வங்கி உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 162.03 புள்ளிகள் சரிந்து 41,464.61 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,636.18 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,348.68 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1213 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1300 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 201 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,343 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.1,883 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 55.55 புள்ளிகள் குறைந்து 12,226.65 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,265.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,191.35 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story