சிறப்புக் கட்டுரைகள்

முடி விற்பனை சந்தையில் முடி சூடா மன்னனாக இந்தியா + "||" + In the hair sales market India as the hottest king of hair

முடி விற்பனை சந்தையில் முடி சூடா மன்னனாக இந்தியா

முடி விற்பனை சந்தையில் முடி சூடா மன்னனாக இந்தியா
முடி என்பது ஒரு மனிதனுக்கு மகுடத்தை போன்ற புகழை பல நேரங்களில் அளிப்பதாக கருதப்படுகிறது.
கூந்தல் பராமரிப்பு மற்றும் அழகு சார் தொழில் துறையின் அபரிமிதமான வளர்ச்சியினால், தரமான முடிகளுக்கான தேவை உலக சந்தையில் அதிகரித்துள்ளது. இந்தியா ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக உள்ளது.

முடி என்பது ஒரு மனிதனுக்கு மகுடத்தை போன்ற புகழை பல நேரங்களில் அளிப்பதாக கருதப்படுகிறது. அழகிய முடிக்கான ஆசை, சிகை அலங்கார நிபுணர்கள், அழகுக்கலை நிபுணர்களுக்கான சந்தையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் பயனளிக்காத போது, விக் எனப்படும் டோப்பா முடி பயன்படுகிறது ! தென் இந்தியாவின் பெரிய கோவில்களில் முடி காணிக்கை அளிக்கும் வழக்கம் இருப்பதால், உலக முடி சந்தையில் இந்தியாவினால் பெரும் பங்கு வகிக்க முடிகிறது.

2018-19-ல், அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவின் முடி ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா, இதர ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தியாவில் இருந்து முடியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள் ஆகும்.

காக்காசிய (வெள்ளை இனத்தவர்) முடிகளுக்கான விக்குகள் மற்றும் ஒட்டுதல்களுக்கு இந்திய முடிகள் மிகவும் பொருத்தமாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இந்திய முடிகளை உலகெங்கும் ஏற்பது அதிகரித்துள்ளது. சீனாவில் விற்கப்படும் முடிகளின் தரத்தை மேம்படுத்தவும், இந்திய முடிகள் கலக்கப்படுகிறது. உதாரணமாக மெல்போர்னில் இந்திய ‘கோவில் முடியை’ பயன்படுத்தி ஒரு ஒட்டுதல் செய்வதற்கு சுமார் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

கோவில்களின் நிர்வாகங்கள், முடிகளை தரம் பிரித்து, அதன் பின், மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் நிறுவனத்தின் மூலம் உலகளாவிய டெண்டர்கள் அளித்து, ஏற்றுமதி செய்கின்றன.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை ஈட்டுவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“நடுத்தர வர்க்கத்தினர் அழகுகலை நிலையங்களை நாடுவது அதிகரித்துள்ளதால், தனி நபர்களும் எங்களை நேரடியாக அணுகி, அவர்களின் வயதிற்கும், தோலின் தன்மைக்கும் ஏற்ற வகையான, தனித்துவம் மிக்க பொருட்களை செய்து தரச் சொல்கின்றனர்’’ என்று திருப்பதியில் இருந்து முடிகளை வாங்கும், மும்பையை சேர்ந்த ஹாசன் விக் மேக்கர்ஸ் நிறுவனத்தின் ஹாசன் கூறுகிறார். முடி ஒட்டுதல், விக்குகள், தாடிகள் மற்றும் மீசைகளுக்கான தேவை உள்ளது. முடியின் தரம் மற்றும் நீளத்தை பொருத்து அதன் விலை மாறுபடும் என்கிறார். பொதுவாக இவற்றை கூந்தல் பராமரிப்பு நிலையங்கள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் சலூன்கள் வாங்குகின்றன.

முடியின் மதிப்பு, அதன் நீளம், வண்ணம், நேராக இருக்கும் தன்மை அல்லது சுருண்ட தன்மை, அதற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் தூய்மையின் அளவு போன்றவற்றை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. மிகச் சிறந்த தரத்தை கொண்ட முடி, ரெமி என்று அழைக்கப்படுகிறது. அது அதிகம் சிக்கல் இல்லாமல் இருப்பதால் மிகவும் விரும்பப்படுகிறது.

சேதப்படுத்தப்பட்ட, சாயம் பூசப்பட்ட அல்லது மோசமாக பராமரிக்கப்பட்ட முடிகள், ரெமி அல்லாதவை என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் மேல்புறத்தை ரசாயன முறையில் நீக்கிய பின்னர், அவை பயன்படுத்தப்படுகிறது. தூய ரெமி முடியினால் செய்யப்பட்ட பொருட்கள் விலை அதிகம் கொண்டவை. ரெமி அல்லாத முடி அல்லது இதர இழைகளுடன் கலக்கப்பட்ட மனித முடிகள் விலை குறைவானவை. ரெமி முடியின் விலை கிலோவிற்கு ரூ.4,000 முதல் ரூ.25,000 வரை உள்ளது. ரெமி அல்லாத முடியின் விலை கிலோவிற்கு ரூ.4 அளவுக்கு மலிவாக உள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முடிகளுக்கு அதிக தேவை உள்ளது. அதில் ரசாயனங்கள் குறைவாகவும், குறைந்த அளவில் செயற்கை கூந்தல் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் இதற்கான காரணங்கள். அவற்றின் பெரும் பகுதி கோவில்களில் இருந்து பெறப்படுவதால், அவை நீண்டதாகவும், இயற்கை தன்மை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. ஐரோப்பிய மற்றும் ரஷிய முடிகள் வெளிர் நிறங்களை கொண்டவை என்பதால், அவற்றை எளிதாக பல நிறங்களில் சாயம் பூச முடியும் என்பதால், அவற்றிற்கு அதிக தேவை உள்ளது.

“அனைத்து வகையான முடி இழைகளுடன் நன்கு கலக்கிறது என்பதாலும், அதிகபட்சமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதாலும், மக்கள் இயற்கையான முடியை விரும்புகின்றனர். இன்றைய இளைஞர்களின் அழகுணர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில், இயற்கையான முடியா, செயற்கையானதா என்பதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. செயற்கை முடி சுமார் ஏழு ஆண்டுகள் வரை நன்றாக இருக்கும்” என்று பிரபல குடும்ப சலூன் நிறுவனமான கிரீன் டிரென்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கூறுகிறார்.

கவின் கேர் போன்ற நிறுவனங்கள், கிரீன் டிரென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புற்று நோயாளிகளுக்காக, முடி தானம் மூலம் சேகரிப்பதை, ஒரு கார்ப்பரேட் சமூக பொறுப்பு பணியாக முன்னெடுத்துள்ளனர். புற்று நோயாளிகளுக்காக முடி தானம் கோரி, வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி துண்டு பிரசுரங்களை வினியோகிக்கிறது என்கிறார்.

முடி வெட்டுபவர்கள் மற்றும் முடி திருத்தகங்களிடம் இருந்து முடி சேகரிக்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில், இந்த கடைகள், பெண்களுக்கு முடி வெட்டப்படும் போது அல்லது மொட்டை அடிக்கப்படும் போது கிடைக்கும் ஆறு அங்குலத்திற்கும் அதிக நீளம் கொண்ட முடிகளை அதிக அளவில் சேகரிக்கின்றனர். இவை விக்குகள் செய்யப் பயன்படுத்தப்படுவதால், இவற்றின் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதே காரணம். குட்டை முடிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. டெல்லி, சென்னை போன்ற சில இடங்களில், குட்டை முடிகளும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக சேகரிக்கப்பட்டு, குவில்டுகள், போர்வைகள், அமினோ அமிலங்கள், உரங்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

திருச்சி மாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவில் மற்றும் திருப்பதி கோவில் போன்ற கோவில்கள் முடி வியாபாரிகளுக்கான முக்கிய கொள்முதல் கேந்திரங்களாக உள்ளன. 2011 செப்டம்பர் முதல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) சார்பில், மத்திய அரசுக்கு சொந்தமான எம்.எஸ்.டி.சி. லிமிட்டட் (மெட்டல் ஸ்கிராப் வர்த்தக நிறுவனம்), மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் ஏல முறையில், முடி விற்பனை செய்கிறது. திருப்பதி கோவிலில், உலகெங்கும் இருந்து வரும் பக்தர்களினால், ஆண்டுக்கு, தோராயமாக 500 முதல் 600 டன்கள் எடையுள்ள மனித முடி, தானமாக அளிக்கப்படுகிறது.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:

NRD.thanthi@dt.co.in