குலசேகரபட்டினத்துக்கு புதிய அந்தஸ்து


குலசேகரபட்டினத்துக்கு புதிய அந்தஸ்து
x
தினத்தந்தி 12 Jan 2020 5:55 AM GMT (Updated: 12 Jan 2020 5:55 AM GMT)

இந்தியாவில் மைசூர் தசரா விழாவை அடுத்து குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா விழா மிகவும் பிரபலம்.

குலசேகரபட்டினம்...

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம். தசரா விழாவுக்கு பெயர்பெற்ற ஊர்.

இந்தியாவில் மைசூர் தசரா விழாவை அடுத்து குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா விழா மிகவும் பிரபலம். தசரா விழா நாட்களின் போது இந்த கிராமம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

இதுவரை தசரா விழாவால் மட்டுமே பிரபலம் அடைந்த, இந்த கிராமம் விரைவில் வேறோரு புதிய அடையாளத்தின் மூலம் உலக வரைபடத்தில் இடம்பெற இருக்கிறது.

ஆம்... குலசேகரபட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், பிற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இரு ஏவுதளங்கள் உள்ளன.

எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மூன்றாவது ஏவுதளம் அவசியமாகிறது. அந்த மூன்றாவது தளம் குலசேகரபட்டினத்தில் அமைய இருக்கிறது.

இதன் மூலம் இந்த கிராமம் புதிய அந்தஸ்தை பெற இருக்கிறது.

இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு...

விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவைப்போல் இந்தியாவும் சாதனை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.

இயற்கை சீற்றங்கள், விபத்துகள், போர் போன்ற பேரழிவு மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்படும். சுமார் 10 ஆண்டுகள் நாம் பின் நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவேதான் கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்கள் வெவ்வேறு 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்தியாவில் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில மாநிலங்கள் அந்த வாய்ப்பை தட்டிப் பறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின. ஆயினும் தென் தமிழ்நாட்டுக்கே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

3-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது என்ற முடிவை இந்தியா 12-வது ஐந்தாண்டு திட்டத்திலேயே சேர்த்துவிட்டது. இஸ்ரோவின் விண்வெளித்துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதர் குமார், சேஷகிரிராவ், சோம்நாத் ஆகிய 7 பேர் கொண்டகுழுவை 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைத்தார் அப்போதைய இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன்.

இந்த குழுவினர் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ராக்கெட் ஏவுதளம் அமைக்க புவியியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச்சிறந்த இடம் குலசேகரபட்டினம்தான் என தெரிய வந்தது. இதுபற்றிய விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். ஆனாலும் இந்த திட்டம் தள்ளிப்போனது.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, இந்த திட்டப்பணி வேகம் பிடித்தது.

ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் இருப்பது அவசியம். அத்துடன் கடற்கரை பகுதியாகவும் இருக்கவேண்டும். இந்த இரு அம்சங்களும் அமையப்பெற்ற இடம் குலசேகரபட்டினம். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு வடக்கே சுமார் 13 டிகிரி தொலைவிலும், குலசேகரபட்டினம் சுமார் 8 டிகிரி தொலைவிலும் உள்ளது. இதனால் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்துவதற்கான செலவு குறைவு ஆகும். எரிபொருளும் குறைவாகவே செலவாகும்.



ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவும் போதும் தெற்கு நோக்கி செலுத்த வேண்டி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கு தென் திசையில் இலங்கை இருப்பதால், ராக்கெட்டை சிறிது தூரம் தென்கிழக்கு திசையில் மேல் நோக்கி செலுத்தி, பின்னர் தெற்கு திசைக்கு திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.

சர்வதேச அளவில் ஒரு நாடு தனது ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்ற விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் பாகங்கள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்தப்பட வேண்டும். .

அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக செலவு அதிகமாகிறது.

குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக விரைவில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது.

மேலும் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையம் குலசேகரபட்டினத்திற்கு அருகில் உள்ளது. எனவே ராக்கெட்டுக்கு தேவையான திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக கொண்டு வந்து விட முடியும்.

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்திருப்பதோடு தட்பவெட்ப சூழ்நிலையும் அதிக சாதகமாக உள்ளது. இதனால்தான் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிகவும் உகந்த இடமாக கருதப்படுகிறது.

இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த முடியும். மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1,350 கிலோ எடையுடன் ஏவப்பட்டது. அது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டு இருந்தால் 1,800 கிலோ எடை வரை சுமந்து சென்று இருக்கும். எனவே எதிர்காலத்தில் அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்கு குலசேகரபட்டினம்தான் மிகவும் ஏற்றது என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது முதல் கட்டமாக ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவயான 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

நிலம் கையகப்படுத்தும் பணிக்காக கண்ணன், லெட்சுமி கணேஷ், ரதிகலா, பேச்சிமுத்து, கோபாலகிருஷ்ணன், செல்வி, சிவகாமசுந்தரி, நாக சுப்பிரமணியன் ஆகிய 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக திருச்செந்தூரில் அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குலசேகரபட்டினத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளால் இந்த பகுதி மக்களுக்கோ, மீனவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் தொழிற் பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என மக்கள் மத்தியில் சிலர் பீதியை கிளப்புகின்றனர். ராக்கெட் ஏவப்படும் நேரத்தில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்பின் வழக்கம் போல் சாதாரணமாக விமான நிலையம், அனல்மின்நிலையம் உள்ளிட்ட பகுதியில் எவ்வளவு பாதுகாப்பு உள்ளதோ அதே போன்றுதான் பாதுகாப்பு இருக்குமே தவிர, பெரிய அளவில் கடும் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டை ஏவி விடவேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரமாக உள்ளனர். குலசேகரபட்டினத்தை விரைவாக தயார் படுத்தினால்தான் சீனாவுக்கு பதிலடி கொடுத்து சர்வதேச அளவில் விண்வெளி வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

தொழில் வளம் பெருகும்

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்க கோரி டெல்லி சென்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கிடம் மனு கொடுத்தவர் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தைச் சேர்ந்த கண்ணன். அவர் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் அதிக அளவில் ஏற்படும் சாதிய மோதல்களுக்கு காரணம் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததுதான். இதனால் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களை நோக்கி மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் சர்வதேச விமானநிலைய அந்தஸ்தை பெறும். சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவு அடையும். மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அமையும். தற்போது துறைமுகம், அனல்மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் குலசேகரபட்டினம் வியத்தகு வளர்ச்சி பெறும்.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில் நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உடன்குடி, திருச்செந்தூர், நாசரேத், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், திசையன்விளை என சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்கள் பெருகும். இதன்மூலம் மக்களின் பொருளாதாரம் உயரும் என நம்பப்படுகிறது.

நாங்குநேரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்சாலை தொடங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இங்கு கூடுதல் ஆய்வு மையம் அமைக்கலாம்.

மகேந்திரகிரி மலைப்பகுதியில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திரவ இயக்க அமைப்பு செயல்படுகிறது. இங்கிருந்து 1,479 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகபட்டினத்துக்கு ஏவுகணை தளவாடங்களை எடுத்துச் செல்கிறார்கள். அவற்றை மகேந்திரகிரியில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசேகரபட்டினத்துக்கு கொண்டு வந்தால் சுமார் 1,400 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகும்.

அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரபட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் தளம் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தென்னை, பனை மரங்கள் கணக்கெடுப்பு

திருச்செந்தூர் வட்டம் மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் 6 வட்டாட்சியர்கள் தலைமையிலும், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து பகுதியில் 2 வட்டாட்சியர்கள் தலைமையிலும் நில கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

மாதவன்குறிச்சி கூடல்நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கும் பகுதியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சமீபத்தில் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக குடும்ப அட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் இப்பகுதியில் உள்ள தென்னை, பனை மற்றும் பலன் தரும் மரங்களை கணக்கெடுக்குமாறும், நில எடுப்பு பணிகள் அரசு விதிமுறைகளின்படி விரைவாக செய்து முடிக்குமாறும் வட்டாட்சியர்களை சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். இப்பணிக்கு தேவையான சர்வேயர்கள், டிராப்ட்மேன்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

டிராம் வண்டிகள்

குலசேகர பாண்டிய மன்னர் காலத்தில் இங்கிருந்த துறைமுகம் ஏற்றுமதியில் சிறப்பு பெற்று விளங்கியது. இவ்வூரின் அருகில் உள்ள உவரி ( ஓபேரின்) துறைமுகத்தில் இருந்து சாலமோன் ராஜாவுக்கு மயில் தோகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பைபிளில் கூறப்பட்டு உள்ளது. அந்த அளவுக்கு பழமையும் சிறப்பும் வாய்ந்தது இந்த பகுதி.

பாண்டிய மன்னனின் நாணயம் அச்சடிக்கும் இடம் இருந்த காரணத்தினால்தான் குலசேகரபட்டினத்தில் உள்ள விநாயகர், அக்காசாலை விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்கு கலங்கரைவிளக்கம் உள்ளது. இங்கு வாழ்ந்த கோஸ் மரக்காயர் என்பவர் தனது வீட்டின் மாடியில் நின்று குலசேகரபட்டினம் துறைமுகத்துக்கு வரிசையாக வரும் தன்னுடைய 50-க்கும் மேற்பட்ட தோணிகளை எண்ணிக் கணக்கெடுப்பாராம்.

அந்த காலத்தில் குலசேகரபட்டினத்தை சந்திப்பாக கொண்டு திருச்செந்தூர், திசையன்விளைக்கு கருப்பட்டி கொண்டு செல்ல தண்டவாளம் அமைக்கப்பட்டு டிராம் வண்டிகள் இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்தது. இங்கு மேலை நாட்டவர்களால் நிறுவப்பட்ட சர்க்கரை ஆலையும் இருந்துள்ளது.


Next Story