உள்ளாடை உலகின் இளவரசி


உள்ளாடை உலகின் இளவரசி
x
தினத்தந்தி 12 Jan 2020 7:03 AM GMT (Updated: 12 Jan 2020 7:03 AM GMT)

பொருத்தமான உள்ளாடைகளை அணியும் பெண்களே பேரழகுடன் திகழ்கிறார்கள்.

பொருத்தமான உள்ளாடைகளை அணியும் பெண்களே பேரழகுடன் திகழ்கிறார்கள். பொருத்தமான உள்ளாடைகள் என்பது அழகையும் தாண்டி அவர்களது ஆரோக்கியத்திற்கும் துணைநிற்கிறது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையையும் தருகிறது. இந்த உண்மைகளை உணர்ந்து உள்ளாடை வடிவமைப்பில் கவனம் செலுத்தி, அதில் சாதித்து ‘உள்ளாடை உலகின் இளவரசி’யாக வலம் வருகிறார், பெங்களூருவை சேர்ந்த அர்பிதா கணேஷ்.

“பெண் தொழில்முனைவோர் பலருக்கும் ஏற்படும் தொடக்க கால நெருக்கடிகள் எனக்கும் ஏற்பட்டன. முதலில் நான் வடிவமைத்த உள்ளாடைகளை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அப்போது ஒரு சில நிறுவனங்களே எனது தயாரிப்புகளை வாங்கி விற்பனை செய்தன. பின்னர் இணைய தளம் வழியாக விற்பனையை படிப்படியாக உயர்த்தினேன். ‘பட்டர்கப்ஸ்’ என்ற பெயரில் இணையதளத்தில் விற்பனை செய்தேன்.

பிராக்களை சரியான அளவில் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான விஷயம். தனக்கான சரியான அளவு எது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை தெரிந்துகொள்வது சிரமமான ஒன்று என்று பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்கள். அவர்கள் எளிதாக அளவினை அறிந்துகொள்ள பிரத்தியேகமாக ஒரு அப்ளிகேசனை உருவாக்கி வெளியிட்டேன். அது பெண்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாக இருந்தது. அதோடு பெண்களின் உள்ளாடை விருப்பங்கள் அனைத்தையும் நான் உணர்ந்துகொள்ளவும் ஏதுவாக அமைந்தது. பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த பிராக்களை தயார் செய்தேன். அதுவே பெண்களையும்- என்னையும் பிரிக்கமுடியாத சக்தியாக்கிவிட்டது” என்கிறார், அர்பிதா கணேஷ்.

தொழில் வளர்ச்சிக்கு விளம்பரமும் மிக முக்கியம் என்பது இவரது கருத்து. “எங்கள் தயாரிப்புகளுக்கு தனி மவுசு காணப் படுகிறது. நாங்கள் இந்த துறையில் பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். அதற்கு எங்கள் தயாரிப்பு மட்டுமே காரணமல்ல. தயாரித்த பொருட்கள் விற்பனைசெய்யப்பட, விளம்பரம் மிக முக்கியம். வணிக ரீதியில் வெற்றிபெற விளம்பரம் நன்றாக கைகொடுக்கும்” என்கிறார்.

‘இந்த தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?’ என்று கேட்டபோது 4 தொழில் மந்திரங்களை அவர் சொல்கிறார்:

* நான் புதுப்புது விஷயங்களை தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அப்படி கற்பது நமது வளர்ச்சிக்கு மிக அவசியம். சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் சிறந்தது கூட புறக் கணிக்கப்பட்டுவிடும் என்று உணர்ந்திருக்கிறேன். நாம் கடுமையாக முயற்சி செய்தும் அது பலனளிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் முயற்சியை கைவிடக்கூடாது.

* தொழில்ரீதியான முடிவுகளை எடுப்பது சில நேரங்களில் கடினமாக தோன்றலாம். ஆனால் முடிவெடுக்க வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் உடனே அதை செய்துவிட வேண்டும்.

* தனியாக அல்லாமல் குழுவாக சாதிப்பது சிறந்தது. கடந்த சில மாதங்களில் நான் அதை நன்கு உணர்ந்தேன். குழுக்கள் இல்லாவிட்டால் நான் வீழ்ந்திருக்கக்கூடும். அவர்கள் பாறைபோல உறுதியாக நின்று என்னை தாங்கினார்கள்.

* எதை நீங்கள் உருவாக்கினீர்களோ அதற்காக உறுதியாகவும், உண்மையாகவும் உழைக்க வேண்டும். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது மிக முக்கியமானது. அவர்களே உங்கள் முதலீட்டாளர்கள். உங்களை உயர்த்துபவர்கள்.

பெண் தொழில் முனைவோர் மிகவும் கவனிக்கத்தகுந்த விஷயம் எது?

தேவையான முதலீடு இல்லாமல் தொழிலில் இறங்கக்கூடாது. டிரெண்ட் மாறிவிட்டது என்று உங்கள் தயாரிப்பில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம். உங்களுக்கான அடையாளத்தை வளர்த் தெடுக்க வேண்டும். பங்களிப்பு நிலையிலும் மாற்றம் செய்து கொண்டிருக்கக்கூடாது. பங்குதாரரின் முதலீட்டில் நீண்டகாலம் நிலைத் திருக்க முடியாது.

நான் வித்தியாசமான தயாரிப்புகள் பலவற்றை பார்த் திருக்கிறேன். அவை என்னை கவர்ந்ததும் உண்டு. ஆனால் அதன் பின்னால் சென்று அதைப்போல மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்கு உழைப்பும், நிதியும் நிறைய தேவை. அதே நேரத்தில் அத்தகைய மாற்றங்கள் தேவை என்று கருதினால், நிச்சயம் அதை செய்வேன்.

நீங்கள் சிறந்த அனுபவமாகவும், வளர்ச்சியாகவும் எதைக் கருதுவீர்கள்?

நான் ஒவ்வொரு புதிய தயாரிப்புகளை உருவாக்கும்போதும், அதில் மாற்றங்களை மேற்கொள்ளும்போதும் எனது வாடிக்கையாளரான 3 ஆயிரம் பேரின் மெயில் முகவரிகளுக்கு அதை பகிர்ந்துவிடுவேன். அவர்களில் 500 பேராவது கருத்துகளை பதிவு செய்வார்கள். அதில் இருந்து வாடிக்கையாளரின் திருப்தியை அறிந்து மகிழ்ச்சி கொள்வதோடு, அதன் வழியாக வியாபாரத்தையும் பெருக்கிக்கொண்டேன்” என்று கூறும் அர்பிதாவுக்கு சிறந்த குரல்வளமும் உண்டு. அதனால் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக பாடவும் செய்கிறார்.

“நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பிரா’ தயாரிப்பில் எனது முத்திரையை பதித்துவிட்டேன். அதிலிருந்து சற்று ஓய்வெடுத்து, மாறுபட்ட இ்ன்னொரு இடத்தில் எனது முகத்தை காண்பிக்க விரும்புகிறேன். அதனால் பாடுகிறேன். என் குரலுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார்.

Next Story