சாப்பிட்டதும் வெல்லம் ருசியுங்கள்..


சாப்பிட்டதும் வெல்லம் ருசியுங்கள்..
x
தினத்தந்தி 12 Jan 2020 8:02 AM GMT (Updated: 12 Jan 2020 8:02 AM GMT)

உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல் நலனை மேம்படுத்த வழிவகை செய்யும்.

ணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல் நலனை மேம்படுத்த வழிவகை செய்யும். குடல்களை சுத்தம் செய்வதற்கும் வெல்லம் உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் துணைபுரியும். வெல்லத்திற்கு செரிமான நொதிகளை தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் உணவு எளிதாக செரிமானமாகும்.

நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டால் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். அதன் மூலம் உடலும் அசவுகரியத்தை எதிர்கொள்ளும். அந்த சமயத்தில் சிறிதளவு வெல்லம் சாப்பிடலாம். அது செரிமானத்தை துரிதப்படுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும்.

வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அது ஹீமோகுளோபின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்ள வழிவகை செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும்.

ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கவும் வெல்லம் பயன்படுகிறது. தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்வதற்கும் துணைபுரியும்.

உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது ரத்த சோகைக்கு காரணமாகிறது. வெல்லத்தில் இந்த இரண்டு சத்துக்களும் இருக்கிறது.

வெல்லத்தில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகளும் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை.

மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம். அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தை சுமுகமாக எதிர்கொள்ள துணைபுரியும்.

10 கிராம் வெல்லத்தில் 16 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான மெக்னீசியம் அளவில் நான்கு சதவீதமாகும். மெக்னீசியம் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

வெல்லத்தில் கலந்திருக்கும் சோடியம் மூலக்கூறுகள் பொட்டாசியத்துடன் கலந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம்.

வெல்லம் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் சுவாசக்குழாய், உணவுக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும், சுவாசத்திற்கும் துணைபுரிகிறது.

Next Story