சிறப்புக் கட்டுரைகள்

சக்கர நாற்காலியில் வாழ்க்கை.. ஆகாயத்தில் ஆனந்தம்.. + "||" + Life in a wheelchair .. Pleasure in the sky ..

சக்கர நாற்காலியில் வாழ்க்கை.. ஆகாயத்தில் ஆனந்தம்..

சக்கர நாற்காலியில் வாழ்க்கை.. ஆகாயத்தில் ஆனந்தம்..
விபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளானவர். நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உடல் இயக்கம் இல்லாதவர்.
-பகலிஷா, விபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளானவர். நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உடல் இயக்கம் இல்லாதவர். அந்த தளர்ந்து போன உடலுடன் கால்களையும் தூக்கி கட்டி பறவைபோல் பறந்து ஆகாயத்தில் ஸ்கை டைவிங் செய்து உள்ளத்தையும், உடலையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பூமியின் ஒட்டுமொத்த அழகை கண்களால் படம் பிடித்து ரசித்த தருணம் இயங்காத உடலுக்குள் உணர்வுகளை ஊடுருவ செய்து மனதை சிலிர்க்க வைத்துவிட்டது என்று பெருமிதம் கொள்கிறார். ‘‘இது நான் கண்ட நெடுநாளைய பெரும் கனவு. அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது’’ என்று பூரிக்கிறார்.

உடல் தளர்ந்தாலும் மன உறுதி குறையாத பகலிஷாவின் நெஞ்சுக்கு கீழ் பகுதி இயங்காமல் போனது மிகப்பெரிய சோக பின்னணியை கொண்டது. அதை அவரே நினைவுகூர்கிறார்..

‘‘நான் சிறுவயதில் சுறுசுறுப்பான குழந்தையாக இருந்தேன். 3-ம் வகுப்பில் இருந்து ஆஸ்டலில் சேர்ந்து படித்தேன். படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தாலும் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியனாக விளங்கினேன். என் அண்ணன் வலுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தான். அதை பார்த்து எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி படிப்பை முடித்ததும் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு படித்தபோது குத்துச்சண்டை மீது ஆர்வம் உண்டானது. அப்துல் முனீர் என்பவர் எங்களை குழுவாக பிரித்து பயிற்சி அளித்தார். சக மாணவர்களுடன் சேர்ந்து அவரிடம் பயிற்சி பெற்றேன்.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விளையாட தகுதி பெற்றோம். இடுக்கியில் நடந்த அந்த போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது. அந்த வெற்றியுடன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி அதிகாலையில் நடந்த அந்த துயர விபத்து இப்போதும் என் மனதில் நிலைத்திருக்கிறது.

போட்டி மாலையில் முடிவடைந்ததும் இரவு கிளம்பினோம். அப்போது நோன்பு காலம். நான் காரை ஓட்டினேன். நண்பர்களை ஒவ்வொருவராக அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். போட்டியில் மோதிய களைப்பும், தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய சோர்வும் எப்படியோ என்னை அறியாமல் கண்களை மூட வைத்திருக்கிறது. வாகனம் நிலைதடுமாறி சென்று விபத்தில் சிக்கிவிட்டது. என்னுடன் இருந்த சில நண்பர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விபத்தில் என் முதுகு தண்டுவடத்தில் முக்கால் பகுதி முறிந்து போனது. நான் மீண்டும் உயிரோடு வாழ்வதற்கு கடவுள் கொஞ்சம் கருணை காட்டி யிருக்கிறார். தலையில் அடிபட்டாலும் மூளையில் பாதிப்பு ஏற்படவில்லை. முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உணர்வு இல்லாமல் போனது. கைவிரல்களும் சலனமற்று போனது.

நான்கு நாட்கள் கழித்து கண் விழித்தேன். 10 நாட்கள் கழித்த பிறகுதான் உடல் உணர்வு இல்லாமல் போனதை உணர்ந்தேன். இனி என்னால் எழுந்து நடக்க முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அப்போது எனக்கு 19 வயதுதான். எனக்கே என் மீது வெறுப்பு உண்டானது. எல்லோர் மீதும் ஆத்திரம் வந்தது. யாரையும் பார்க்க விரும்பவில்லை. கேரளாவில் சிகிச்சை முடிந்து வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். வாழ்க்கை படுக்கையிலேயே கழிந்தது. எங்கும் போக முடியவில்லை. அழுது அழுது ரொம்பவும் தளர்ந்துபோய்விட்டேன். ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. பிசியோதெரபி சிகிச்சை செய்த பிறகு சில விரல்கள் செயல்பட ஆரம்பித்தது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சக்கர நாற்காலிக்கு மாறினேன். அதன்பிறகுதான் எனக்குள்ளே நம்பிக்கை துளிர்த்தது. இப்போது என் தேவைகளை என்னால் கவனித்துக்கொள்ள முடிகிறது. சக்கர நாற்காலியை காரில் ஏற்றி வைக்க உதவியாளர் இருந்தால்போதும். சுதந்திரமாக வெளி இடங் களுக்கு சென்று வந்துவிடுவேன். முன்பு ஊசியை எடுத்து உடலில் குத்தினால் கூட உணர்வு இல்லாமல் இருந்தது. இப்போது லேசாக உணர்வு வந்திருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சை கைகளை வலுப்படுத்துகிறது. ஒரு மணி நேரம் வாக்கர் உதவியுடன் நடக்கிறேன். முக்கால் மணி நேரம் நீச்சல் பயிற்சியும் மேற்கொள்கிறேன். ஒன்றை வருட சிகிச்சை மற்றும் கடுமையான முயற்சியின் பலனாக ஓரளவு உடல் உணர்வுகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்த பகலிஷாவின் தனிமையை விலக்கி, மறுவாழ்க்கையை மீட்டெடுக்க வாழ்க்கை துணையாக இணைந்திருக்கிறார், நெசிகா. பெற்றோரின் எதிர்ப்பை சமாளித்து பகலிஷாவை திருமணம் செய்திருக்கிறார். தான் வாழ்க்கையில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இந்த நிலைக்கு வர நெசிகாதான் பக்கபலமாக இருக்கிறார் என்கிறார், பகலிஷா.

‘‘சிறு வயதிலிருந்தே நெசிகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். விபத்தில் சிக்கி முடங்கி கிடந்தபோது என்னை தேடி வந்து தைரியமூட்டினாள். என்னுடன் இறுதி காலம் வரை பயணிக்க ஆசைப்பட்டாள். அவளுடைய நிர்பந்தத்தால்தான் எங்கள் திருமணம் நடந்தது. அப்போது எல்லோர் முன்னாலும் நான் வாழ்க்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல்தான் நின்றிருந்தேன். திருமணமும், மனைவியும், அவளது வீட்டில் கிடைத்த ஆதரவும்தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மனைவி கர்ப்பமாகி முதல் குழந்தை பிறந்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் குழந்தைக்கு தவ்பான் என்று பெயர் சூட்டினோம். இரண்டாவது குழந்தை பெயர் யாமின். அதற்கு ஒரு வயது ஆகிறது. தவ்பானிடம் யாராவது ‘உன் அப்பா சக்கர நாற்காலியில் இருக்கிறாரே’ என்று ஏளனமாக கேட்டால் ‘அதனால் உங்களுக்கு என்ன கவலை’ என்று பதிலடி கொடுத்துவிடுவான்’’ என்கிறார்.

பகலிஷா குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக எவர்சில்வர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கள். 2012-ம் ஆண்டு பகலிஷா கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி. கம்பிகள் தயாரிக்கும் தொழிலில் களம் இறங்கி இருக்கிறார். இவரது நிறுவன விளம்பர தூதராக நடிகர் மோகன்லால் இருக்கிறார். மார்க்கெட்டிங் செய்வதற்கு 500-க்கும் மேற்பட்ட டீலர்களும் இருக்கிறார்கள்.

‘‘நான் சக்கர நாற்காலியில் செல்லும்போது எல்லோரும் மரியாதையாக பார்க்கிறார்கள். என்னுடைய அப்பாவும், அண்ணனும் கொடுக்கும் ஊக்கம்தான் தொழிலில் நன்றாக செயல்பட வைக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் பார்த்து தப்பித்து வந்ததால் எனக்கு எதை பற்றியும் பயமில்லை’’ என்பவர் ஸ்கை டைவிவ் சாகசத்தில் ஈடுபட்டதற்கான காரணத்தையும், அந்த அனுபவம் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றேன். அங்கு ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்டவர்களை பார்த்தபோது அதுபோல் நாமும் சாகசத்தில் ஏன் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. அங்கு ஸ்கை டைவிங் செய்வதற்கு டாக்டர் உடலை பரிசோதித்து உடல் தகுதி சான்று தர வேண்டும். நான் சக்கர நாற்காலியில் சென்றதால் சான்றிதழ் தரவில்லை. வேறு நாடுகளிலும் என்னை போல் நெஞ்சுக்கு கீழ் உடல் இயக்கம் இல்லாதவர்கள் ஸ்கைடைவிங் செய்ததாக அதிகமான பதிவுகள் இல்லை. எனக்கு உடல் எடைதான் தடையாக இருந்தது.

அப்போது 110 கிலோ எடை இருந்தேன். உடலை கடினமாக வருத்தி 100 ஆக எடையை குறைத்தேன். ஸ்கை டைவிங் செய்வதற்கு எப்படி தயாராக வேண்டும், உடலை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் தேடிப்பிடித்து படித்தேன். வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்தேன். ராகிம் என்பவர் பயிற்சி அளித்தார். அவரது பயிற்சி உடல் பருமனை குறைக்கும் முயற்சிக்கு பலம் சேர்த்தது. எனது சகோதரியின் கணவர் அமீன் ஆசாத் நரம்பியல் நிபுணர். அவர் என் உடலை பரிசோதித்து ஸ்கை டைவிங் செய்வதற்கான உடல் தகுதி சான்றிதழை வழங்கினார்.

கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி ஸ்கை டைவிங் செய்வதற்காக நண்பர் ரசாத்துடன் துபாய்க்கு சென்றேன். அப்போது காற்று எங்களுக்கு எதிராக திரும்பி இருந்தது. காற்றில் பாராசூட் விரியாமல் போனால் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்றார்கள். மறுநாள் மதியம் என்னை ஸ்கை டைவிங் செய்வதற்கு அனுமதித்தார்கள். ஆனால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நானே முழுப்பொறுப்பு என்று எழுதி வாங்கிக்கொண்டார்கள். டேவிட் என்பவர் பயிற்சி அளித்தார். அவர் என் உடலை பற்றி முழுமையாக அறிந்து கொண்டார். சாகசத்தின்போது உடலின் எந்த பகுதியையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப என்னை தயார்படுத்தினார். சாகசத்தின்போது கால்களை உள்நோக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் என் கால்களில் பலம் இல்லாததால் அதனை கட்டிவைத்தார்கள். நான் தான் அப்படி கட்ட சொன்னேன். ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்தில் அழைத்து சென்றார்கள். விமானத்தின் வாசல் கதவை திறந்து கீழே பார்த்தேன். பூமி அழகாக இருந்தது. இதைவிட சிறந்த காட்சியை வாழ்நாளில் இனி ஒருபோதும் பார்க்க முடியாது. ரசிக்கவும் முடியாது என்ற எண்ணம் உண்டானது. ஸ்கை டைவிங் சாகச உபகரணங்களுடன் விமானத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தேன். இரண்டு நிமிடம் மித மிஞ்சிய அமைதியாக இருந்தது. பாரம் இல்லாத இறக்கை போன்று சந்தோஷமாக வானில் பறந்தேன். மொத்தம் இருபது நிமிடங்கள். அதில் முதல் ஐந்து நிமிடங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்தேன். அடுத்து பாராசூட் விரியும்போது உடல் நன்றாக குலுங்கும். அதை நான் நன்றாக அறிந்து கொள்வதற்காக இடுப்பில் பெல்ட் போட்டு கட்டி இருந்தார்கள். பாராசூட் விரிந்து இரண்டு நிமிடம் ஆனதும் என்னுடன் வந்த பயிற்சியாளர் டேவிட் பாராசூட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். வானில் பறந்தபடி பூமியைநோக்கி வந்தபோது டேவிட் துபாய் நகரத்தில் உள்ள கட்டிடங்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு வந்தார்.

துபாய் நகரத்தை வானத்தில் இருந்து பார்த்தது அருமையான அனுபவம். உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் மேல் பறவை போல் பறந்தேன். கடல் பச்சை நிறத்திலும் பக்கத்தில் இருப்பது மாதிரியும் துபாய் நகரத்தின் அழகு கண்களை கொள்ளை கொள்ள செய்தது. நான் நடந்தால் நிலத்தில் என்னவெல்லாம் செய்வேனோ அதை சக்கர நாற்காலியில் இருந்தபடியே செய்ய முடிகிறது. இதைவிட வாழ்க்கையில் இனி என்ன சாதித்துவிட போகிறேன். இதுவே மன நிறைவை கொடுத்துவிட்டது’’ என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார், இந்த உருக்கு மனிதர்! .

அதிகம் வாசிக்கப்பட்டவை