இளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்


இளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்
x
தினத்தந்தி 17 Jan 2020 7:08 AM GMT (Updated: 17 Jan 2020 7:08 AM GMT)

கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். காதுக் கொடுத்து கேட்க முடியவில்லை. பேச்சு முழுக்க சமீபத்தில் கண்டுகளித்த திரைப்படத்தை பற்றியும், வெளியாகவுள்ள நடிகர்களின் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிதாக வாங்கிய அலைபேசி குறித்து மட்டுமே இருந்தன.

அரசு வேலைவாய்ப்பு அலுவலகம். பதிவை வெற்றிக் கரமாக முடித்து விட்ட மகிழ்ச்சியில் வேலையில்லா பட்டதாரிகள் எல்லோரும் ஒன்றுகூடியிருந்தனர். சில இளைஞர்களின் பேச்சு நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளோடு தனியார் நிறுவனங்களில் வேலையை பெறுவது தொடர்பாக இருந்தது. பெரும்பாலான இளைஞர்களோ, சமீபத்தில் வெளியான “டிக் டாக்” நடிகையின் ஆபாச பேச்சுக் குறித்தே சிலாகித்து அலசிக் கொண்டிருந்தனர்.

அரசுத் துறைகளில் பணியாற்றும், இளைஞர்கள் தேநீர் வேளையில் ஒன்று கூடிப் பேசுகின்றனர். பேச்சு முழுவதும் திருமணம், சொந்த வீடு, ஊதிய மற்றும் பதவி உயர்வுகள், வரவுள்ள பணியிடை மாற்றத்தை எப்படி நிறுத்துவது? எந்த அரசியல்வாதியின் பரிந்துரை எடுபடும்? குறித்தே இருந்தன. இவர்கள் எல்லோருக்கும் வயது 22-ல் தொடங்கி 28-க்குள் மட்டுமே இருக்கும்.

எண்ணிக்கை அளவில் பெருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் அன்றாட சிந்தனைகள், பேச்சுகளிலிருந்து அவர்களின் தற்போதைய மனோபாவத்தை நன்றாக கணிக்க முடிந்தது. அன்றாட பேச்சுகளில் தேசப்பற்றோ, சமூக அக்கறையோ, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கெதிரான போராட்ட உணர்வோ சிறிதும் வெளிப்பட வில்லை. இவர்கள் எல்லோரும் பாதுகாப்பாக, மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தத் தேசம் இவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு இளைஞர்கள் சமூக அக்கறையோடு சிந்தித்தால், செயல்பட்டால் விதிவிலக்காக எண்ணி வணங்கலாம்.

பெரும்பான்மையான இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் சுயநலம் மட்டுமே நிரம்பி வழிகிறது. மொழி, இனம், தேசம், சமூகம், சாமானிய மக்கள் மேம்பாடு குறித்த அக்கறையென்பது துளியும் இல்லை. இதுவே, யதார்த்த உண்மை. சமூக அவலங்கள், அநீதிகளுக்கெதிராக அரசியல்கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் போராட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பிலும், தப்பித்தல் மனப்பான்மையிலும் காலத்தை வீணடித்து வருகின்றனர். “சமூகத்தை சீர்திருத்த தனி மனிதனாய் தன்னால் எதுவுமே செய்ய முடியாது” என்று இளைஞர்கள் நம்புகின்றனர். அநீதிகளை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும், ஊடகங்களில் கருத்தை வெளியிடுவதோடு சமூகப் பங்களிப்பை நிறுத்திக் கொள்கின்றனர்.

தற்போதைய சமூக நிலைமையோ முற்றிலும் வேறாக உள்ளது. அரசுத் துறைகளில் பெருகிக் கொண்டிருக்கும் லஞ்சம், பாலியல் வன்கொடுமைகள், சாமானிய, நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அரசியல்வாதிகள், மனசாட்சிக்கு முற்றிலும் எதிரான அரசு அதிகாரிகள், பணியாளர்களின் சுரண்டல் போக்கு, அத்துமீறல்கள், ஏமாற்றிப் பிழைக்கும் கொடூர குணம், ஆணவம் என்றெல்லாம் எத்தனையோ கொடுமைகள்; அநீதிகள், நாடு முழுவதும் தொடர்கதையாகி விட்டன. இவை குறித்து கவலைப்படுவதற்கோ, சிந்திப்பதற்கோ, போராடுவதற்கோ இளைஞர்கள் யாரும் தயாராயில்லை.

ஆனால், ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இதே தேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லோரிடமும் தேசப் பற்றும், சமூக அக்கறையும், பொறுப்புணர்வும், பேச்சுகளில், செயல்களில் வெளிப்பட்டன. அநீதிக்கு எதிராக கோபம் கொண்டு கொந்தளித்தார்கள். கோழைத்தனத்தை அறியாதவர்களாக இருந்தனர். “விடுதலை” என்ற பொது நோக்கம் எல்லோரிடமும் இருந்தது. அச்சமின்றிக் களத்தில் இறங்கிப் போராடினார்கள். நாடி, நரம்புகளில் தேசப்பற்றும், போராட்ட உணர்வுகளும் வெடித்துக் கிளம்பின. சொல், சிந்தனைச், செயல், பார்வை, நோக்கம் எல்லாமே தேசப் பாதுகாப்புச் சார்ந்தே இருந்தன. இளைஞர்களால் விடுதலைச் சாத்தியமாயிற்று. இதே நிலை திரும்புமா? இளைஞர்கள் மீண்டும் வீறுக் கொண்டு எழுவார்களா? அவலங்கள் எல்லாம் தீருமா? அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக இளைஞர்கள் ஒன்று திரளுவார்களா? என்பதே தற்போதுள்ள எதிர்ப்பார்ப்பு. மாற்றத்திற்கான தீர்வு.

பாரதியார், சென்னையில் தங்கி இருந்தபோது அன்றாடம் மாலையில் கடற்கரைக்குச் செல்வார். துறைமுகத்திற்கு அருகிலுள்ள மணல் பகுதியில் அமருவார். அப்போதெல்லாம், கல்லூரி மாணவர்கள் அருகில் சென்று தேசிய கீதத்தைப் பாடும்படி பாரதியை வற்புறுத்துவார்களாம். அவரும் உரத்துக் குரல் எழுப்பி பாடுவார். நூற்றாண்டுகளுக்கு முன்னர், மாணவர்களிடம் நாட்டுப் பற்றிருந்தது. கவிஞர்களை, இளைஞர்கள் மதித்துப் போற்றியுள்ளனர். சென்னைக் கடற்கரை, இளைஞர்களிடம் “விடுதலைத் தீயை” பற்ற வைக்கும் களமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. அதே கடற்கரைத் தற்போது “காமத் தீ” பற்றி எரியும் கிடங்காக, குப்பை மேடாக சீரழிந்து விட்டது. நூற்றாண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள். எப்படிப்பட்ட தரம் கெட்ட, தாழ்வு நிலை? இழந்த பாரம்பரியங்களை எப்பொழுது மீட்டெடுக்கப் போகிறோம்?

அதுமட்டுமல்ல தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம். ஆனால், அதனால் மட்டும் தேசப் பற்று உள்ளவர்களாக இளைஞர்கள் உருமாறி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியா? தொலைநோக்குச் சிந்தனையோடு தலைவர்கள் யோசிக்க வேண்டும்.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொருவரின் பெயருக்கும் முன்னால் “வந்தே மாதரம்” என்ற அடைமொழி இருக்கும். மக்கள் மத்தியில் விடுதலைப் பாடலை உரத்துப் பாடுவதால், இயல்பாகவே இந்த அடைமொழியும் பெயர்களோடு சேர்ந்து விட்டது. “வந்தே மாதரம்” என்றால் தற்போதைய இளைஞர்களோ “புதிய திரைப்படத்தின் பெயரா?” என்று கேள்வி எழுப்புவார்கள். இந்த வார்த்தையில் மறைந்துள்ள தியாகத்தைப், புதைந்துள்ள வீர வரலாற்றை நம் இளைஞர்களுக்கு எப்போது உணர்த்தப் போகிறோம்? இளைஞர்களிடம், ஒழுக்கத்தை, சுயக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக உருவாக்குவதே தற்போதைய தேவை. விடுதலைத் தியாகிகள், வீர மறவர்களின் மறைந்த வாழ்க்கை முறைகள், விடுதலை காலத்தில் பேசப்பட்ட மறந்த வார்த்தைகள் மீண்டும் புணரமைக்கப்பட்டு இளைஞர் களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும், நாட்டுப் பற்றும் உள்ள இளைஞர்களை உருவாக்க இதுவொன்றே நிரந்தர வழி.

அரிமதி இளம்பரிதி, எழுத்தாளர், புதுச்சேரி.

Next Story