மனிதநேயத்தின் அடையாளம் எம்.ஜி.ஆர்


மனிதநேயத்தின் அடையாளம் எம்.ஜி.ஆர்
x
தினத்தந்தி 17 Jan 2020 7:44 AM GMT (Updated: 17 Jan 2020 7:44 AM GMT)

இன்று (ஜனவரி17-ந்தேதி) எம்.ஜி.ஆர் பிறந்தநாள்.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றியதற்கும், இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருப்பதற்கும் முழு முதல் காரணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்பதுதான் வரலாற்று உண்மை. நாடகக் கலைஞராக இருந்த எம்.ஜி.ஆர்., திரையுலகில் நுழைந்து ஏராளமான வெற்றிப்படங்களை வழங்கினார். 1952-ம் ஆண்டு வெளியான, ‘என் தங்கை’ திரைப்படம் 350 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை புரிந்த நேரத்தில்தான், நடிகமணி டி.வி. நாராயணசாமி மூலம் பேரறிஞர் அண்ணாவை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அப்போது, படித்தவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த தி.மு.க.வை, கல்வியறிவு பெறாத கிராமத்து மக்களிடம் கொண்டு செல்ல தன்னுடைய திரைப்படங்களை பயன்படுத்தினார். அருந்ததிய மக்களின் குலதெய்வமான மதுரை வீரன் வேடத்தில் நடித்து, அந்த மக்களின் பாதுகாவலனாகவே இன்றுவரை மதிக்கப்படுகிறார். படகோட்டி, விவசாயி, தொழிலாளி போன்ற வேடங்களில் நடித்து, அந்தந்த இன மக்களை தி.மு.க.வில் கொண்டுவந்து சேர்த்தார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்’ என்பது போன்ற பாடல்கள் மூலம் மக்களுக்கு முழு நம்பிக்கையை விதைத்தார்.

அதேபோன்று தி.மு.க.வை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டார். கருப்பு, சிவப்பு பெல்ட் மற்றும் சின்னஞ்சிறிய கருப்பு, சிவப்பு துண்டு தோளில் அணிந்திருப்பார். அதே நிறத்தில் பர்ஸ் வைத்திருப்பார். எம்.ஜி.ஆரை பின்பற்றி தமிழக இளைஞர்கள் பெல்ட், துண்டு அணிந்து பர்ஸ் வைத்துக்கொண்டனர். தி.மு.க.வின் அடையாளம் கருப்பு, சிவப்பு என்பதை கடைக்கோடி கிராமம் வரை கொண்டுசேர்த்தவர் எம்.ஜி.ஆர்.தான்.

இன்றைய வாட்ஸ் -அப் போன்று அன்றைய பொங்கல் வாழ்த்து அட்டைகள் புகழ்பெற்று விளங்கின. தி.மு.க. கொடி, சின்னத்துடன் எம்.ஜி.ஆர். படம் இருக்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகள்தான் அதிகம் பிரிண்ட் செய்யப்பட்டு, விற்பனையிலும் சாதனை படைத்தன. அதேபோன்று தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். படத்துடன் தி.மு.க. கொடி, சின்னம் போடப்பட்ட பாட்டு புத்தகங்கள் தினமும் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி தி.மு.க.வின் புகழ் பரப்பியது.

எம்.ஜி.ஆர். தயாரித்த, நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சின்னமாக, தி.மு.க. கொடியை அடையாளப்படுத்தினார். படத்தில் தி.மு.க. கொடியைக் காட்டுவது மட்டுமின்றி, பாடல், காட்சி அமைப்பு, கதாபாத்திரங்களின் பெயர் என ஒவ்வொரு விஷயத்திலும் தி.மு.க. கொள்கைகளைப் பரப்பினார். மக்களைப் பொறுத்தவரை திராவிடக் கொள்கைகள் அல்லது கட்சித் தலைவர்கள் குறித்து கவலைப்பட்டதில்லை. ஏனென்றால், தி.மு.க.வை எம்.ஜி.ஆர். கட்சி, எம்.ஜி.ஆர். கொடி என்றுதான் பாமர மக்கள் புரிந்து கொண்டார்கள். இதனை பேரறிஞர் அண்ணா நேரடியாகவே கண்டு அறிந்தார்.

ஒருமுறை கிராமப்புறத்தில் பரப்புரை முடித்துவந்த அண்ணா, சாலையோரம் காரை நிறுத்தி தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விவசாய தொழிலாளர்கள் காரில் இருந்த கொடியைப் பார்த்து, ‘நீங்க எம்.ஜி.ஆர். கட்சியா?’ என்று கேட்க, அண்ணாவும் பெருமையாக, ‘ஆம்’ என்று பதில் சொன்னார். இதுகுறித்து, ‘படிக்காத பாமர மக்களிடம் எம்.ஜி.ஆர். நமது கட்சியையும், கட்சிக் கொடியையும் கொண்டுபோய் சேர்த்துள்ளார் என்று பெருமைப்பட்டார் அண்ணா.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கையும், அவரது கட்சிப் பணியையும் முழுமையாக அங்கீகாரம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் கட்சித் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் மத்தியில் பேசியபோது, ‘செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் நீங்கள் ஒரு வருடத்தில் எத்தனை பேரிடம் கட்சியை கொண்டுபோய் சேர்த்தீர்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால், என் தம்பி எம்.ஜி.ஆர். ஒரே ஒரு நாளில் செய்வதை, நீங்கள் இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் என்று கணக்குப் போட்டால்கூட யாராலும் செய்ய முடியாது” என்று வெளிப்படையாகவே பாராட்டினார்.

எம்.ஜி.ஆர். மீது அண்ணாவைப் போலவே மக்களும் முழு நம்பிக்கை வைத்தார்கள். அதனால்தான் 1957-ம் ஆண்டு 15 இடங்கள் மட்டுமே பிடித்த தி.மு.க., 1962-ம் ஆண்டு 50 இடங்கள் பெற்று முன்னேறியது. 1967-ம் ஆண்டு தி.மு.க. தேர்தலை சந்திக்க இருந்த நேரத்தில், எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர். தேர்தல் பரப்புரை செய்யமுடியாத நிலையில், அவர் கழுத்தில் கட்டுப்போட்ட சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் மவுன பிரசாரம் செய்தன. அந்த சுவரொட்டிகள்தான் தி.மு.க. 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கக் காரணமாக இருந்தது.

தேர்தலில் வெற்றிபெற்ற அண்ணாவை பாராட்டுவதற்கு கோவை மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் மாலையுடன் சென்றார்கள். அவர்களிடம் மிகவும் தெளிவாக, ‘வெற்றிக்கான முதல் மாலைக்குச் சொந்தக்காரர் மருத்துவமனையில் இருக்கிறார். அங்கே செல்லுங்கள்’ என்று அனுப்பிவைத்தார் அண்ணா. அதுமட்டுமின்றி அமைச்சரவை; பட்டியலை மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்து ஒப்புதல் பெற்றே அண்ணா வெளியிட்டார். அந்த அளவுக்கு கட்சியிலும், தன்னுடைய மனதிலும் எம்.ஜி.ஆருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்தார்.

அண்ணாவின் திடீர் மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்-அமைச்சராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்க, எம்.ஜி.ஆர். கைகாட்டியதால் கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். தனக்கு பதவி கொடுத்த எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை கருணாநிதி தன்னுடைய கவிதை மூலம் வாக்குமூலமாகவே கொடுத்தார். இதோ அந்தக் கவிதையின் சில வரிகள்.

வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா..

தென்னாடும் தென்னவரும் உள்ள வரை மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்

உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்

அதன்பிறகு காட்சிகள் மாறின. பொதுக்கூட்டத்தில் கணக்கு கேட்டார் என்பதற்காக எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது, இரண்டாம் சுதந்திரப்போர் போன்று தமிழகமெங்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களிடம் பெரும் புரட்சியே ஏற்பட்டது. அந்த மக்களின் எழுச்சிதான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்க காரணமாக அமைந்தது.

கட்சி ஆரம்பித்த ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க.வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் இல்லாத தி.மு.க மொத்தமே 90 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. எம்.ஜி.ஆர் தான் தி.மு.க. என்பதை இந்த வெற்றி உரக்க சொல்லியது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல்-அமைச்சராகவே மறைந்து சரித்திரம் படைத்தார். எம்.ஜி.ஆர் இல்லாத தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்ததையும் அவருடைய மறைவுக்கு பிறகு அன்று முதல்-அமைச்சராக இருந்த ஜானகி அம்மையார், ஜெயலலிதா முதல் இன்று முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடியார் வரை இவர்களது வெற்றிக்கு அடிப்படையாக கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தை போல் இருந்தவர் எம்.ஜி.ஆர். தான்.

எம்.ஜி.ஆர். தான் தி.மு.க., தி.மு.க. தான் எம்.ஜி.ஆர். என்பதை கடைசி வரையிலும் மக்கள் உண்மையாக்கினார்கள். 136 திரைபடங்களின்மூலம் மக்களுக்கு தேவையான வாழ்வியல், பண்புகளை மற்றும் அரசியல் கொள்கைகளை தந்தார். மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார். மக்கள் மனதில் இன்றும் மனித நேயத்தின் அடையாளமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஆம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஓர் அதிசயம்! ஓர் ஆச்சரியம்! ஓர் அவதாரம்!

சைதை சா.துரைசாமி.
முன்னாள் மேயர்,
சென்னை பெருநகர மாநகராட்சி.

Next Story