தொடர்ந்து 5-வது மாதமாக பின்னடைவு: நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 1.8 சதவீதம் சரிவடைந்தது; வர்த்தக பற்றாக்குறை 1,125 கோடி டாலர்


தொடர்ந்து 5-வது மாதமாக பின்னடைவு: நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 1.8 சதவீதம் சரிவடைந்தது; வர்த்தக பற்றாக்குறை 1,125 கோடி டாலர்
x
தினத்தந்தி 17 Jan 2020 2:16 PM GMT (Updated: 17 Jan 2020 2:16 PM GMT)

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,102 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. அது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளர்ச்சியாக இருந்தது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

டிசம்பர் மாதத்தில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 1.8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. ஆக, தொடர்ந்து 5-வது மாதமாக ஏற்றுமதி பின்னடைவு கண்டுள்ளது. எனினும், வர்த்தக பற்றாக்குறை 1,125 கோடி டாலராக (சுமார் ரூ.78,750 கோடி) குறைந்துள்ளது.

சேவைகள் பிரிவு

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

டிசம்பர் மாதத்தில் 2,736 கோடி டாலருக்கு (சுமார் ரூ.1.92 லட்சம் கோடி) சரக்குகள் ஏற்றுமதியாகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 1.8 சதவீதம் குறைவாகும். மேலும் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இதே மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 8.8 சதவீதம் குறைந்து 3,861 கோடி டாலராக இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,125 கோடி டாலராக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 1,449 கோடி டாலராக இருந்தது.

முதல் 9 மாதங்களில்...

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 23,929 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16.75 லட்சம் கோடி) சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 24,408 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 1.96 சதவீதம் குறைந்து இருக்கிறது.

சரக்குகள் இறக்குமதி

முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) மொத்தம் 35,739 கோடி டாலருக்கு சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 8.9 சதவீதம் குறைவாகும். அப்போது அது 39,231 கோடி டாலராக இருந்தது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை 11,810 கோடி டாலராக இருக்கிறது.

2024-25-ஆம் நிதி ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரமாக உருவெடுக்க நம் நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் சரக்குகள் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,102 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. அது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

பாரத ரிசர்வ் வங்கி

பாரத ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்தில் இருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. 2011 ஜூன் 15-ந் தேதி அன்று முதல் முறையாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேவைகள் வர்த்தகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story